அரசியல் களத்தில் இருந்து முழுவதும் தன்னை விலக்கிக் கொண்டுவிட்டேன் என்று ரஜினி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். ஆனாலும் “ரஜினி தன் 40 ஆண்டுக்கால நண்பர் என்ற முறையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு அவரது ஆதரவை கேட்பேன்” என கமல் வீட்டில், ஓய்வில் இருந்த ரஜினியை சனிக்கிழமை (20.02.2021) சந்தித்துள்ளார். “இந்த சந்திப்பில் அரசியல் காரணம் எதுவும் இல்லை. நண்பர்கள் என்ற முறையில் உடல்நலம் குறித்து விசாரிக்க மட்டுமே சென்றேன்” என்று கமல் கூறியதோடு மட்டுமல்லாமல் “அவர்தான் உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டாரே, அப்புறம் எப்படிகூப்பிட முடியும். அது ஒரு நல்ல நண்பனுக்கு நல்ல அடையாளமாக இருக்காது” என்றும் கூறியுள்ளார்.
“மறுநாள் மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை வைத்துக்கொண்டு அரசியல் காரணம் இன்றி ரஜினியை சந்தித்தேன் என்று கமல் கூறுவது நம்பும்படியாக இல்லை. அதேநேரத்தில் ஆதரவு கேட்கத்தான் கமல் சென்றார் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது. ரஜினியை சந்தித்தேன் என்று சொன்னால் ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும் என்பது கமலுக்கு நன்றாகத் தெரியும். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் கமல் ரஜினியை சந்திக்கச் சென்றிருக்கலாம்” என்ற விமர்சனங்கள் எழுந்தன.
தொடர்ந்து அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்த நிலையிலும் ரஜினியின் குரல் தனக்கு கிடைக்காதா என கமல் தொடர்ந்து அவரை பின் தொடர்ந்து செல்வதாக எழுந்துள்ளதாகவும் எழுந்த விமர்சனங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கணபதியிடம் பேசினோம்...
Also Read: ரஜினி வீட்டில் கமல்... மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கேட்டாரா?!
“கமல் கட்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரஜினியை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட ரஜினி மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தெரிவிப்பார் என்று கூறியிருந்தார். அதேபோலத்தான் இந்த முறையும் ரஜினியை சென்று பார்த்து தன்னுடைய கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என கமல் கேட்டிருப்பார். தற்போதைக்கு எந்த அரசியல் கட்சியினரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற மனநிலையில் ரஜினி இருப்பதாகத்தான் அவரது செயல்பாடுகள் மூலம் தெரியவருகிறது. பா.ஜ.க-வுக்கு குரல் கொடுக்கச் சொல்லி நெருக்கடி தரப்படலாம் என்பதை உணர்ந்துதான் ரஜினியும் ‘தன்னுடைய கட்சியினர் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். எங்கு இருந்தாலும் நீங்கள் என்னுடைய ரசிகர்கள்’ என்று அறிக்கை விட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் தன்னுடைய நண்பர் என கலைஞர் சொல்லிக்கொண்டது போல... ‘கமல் என்னுடைய 40 ஆண்டு நண்பர். அரசியலில் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என ரஜினி ஒரு வார்த்தை சொன்னால் போதும். அ.தி.மு.க., தி.மு.க மீது வெறுப்பில் உள்ள ரஜினி ரசிகர்களை தனக்கான வாக்குகளாக மாற்றிக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு கமலுக்கு இருப்பது இயல்பானதுதான். தேர்தலில் தேதி அறிவித்ததும் இன்னும் பல கட்சியினர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பார்கள். ஆனால், ரஜினி கமலுக்காக மட்டுமல்ல யாருக்காகவும் குரல் கொடுக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை” என்றார்.
ரஜினியின் ஆதரவை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து கேட்பதற்கான காரணம் குறித்தும்... அதற்கு ரஜினியின் பதில் எப்படி இருக்க வேண்டும் என மநீம விரும்புகிறது என்பது குறித்தும் ம.நீ.ம ஊடகப் பொறுப்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம்...
“அ.தி.மு.க., தி.மு.க-வின் ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான அரசியலை முன்னெடுக்கவே ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்கள். அதில் ஒருவர் அரசியலுக்கு வந்துவிட்டர். சிஸ்டம் கெட்டுவிட்டது. அதை மாற்ற வேண்டும். அதற்காத்தான் அரசியலுக்கு வருகிறேன். எனச் சொன்ன ரஜினி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் துரதிருஷ்டவசமாக அரசியலுக்கு வரவில்லை என்றாலும், தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டது என்று எதன் அடிப்படையில் சொன்னார் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டிய தார்மீகக் கடமை ரஜினிக்கு உள்ளது இல்லையா? அவரது பேச்சுகள் அனைத்தும் அர்த்தமற்றவை ஆகிவிட்டனவா அல்லது மாற்றுவடிவில் வருமா என்ற கேள்விக்கும் அவர் பதில் கூற வேண்டுமல்லவா?
எங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக ரஜினியின் ஆதரவை கேட்பதில் தவறில்லையே. தன் ரசிகர்கள் வேறு கட்சியில் சேரலாம் என்றுதான் ரஜினி கூறியிருக்கிறார். தான் யாரையும் ஆதரிக்கவில்லை என்று இன்னும் அறிவிக்கவில்லை இல்லையா? திராவிட ஆட்சிக்கு எதிராக மாற்று அரசியலை கொடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் நினைக்கிறது. இது ஒரு கடினமான முயற்சி. பல தரப்பட்ட மக்களின் ஆதரவையும் பெற்றால்தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தையும் அரசியல் கலாசார மாற்றத்தையும் செய்யமுடியும்.
கட்சி தொடங்கி 14வது மாதம் தேர்தலை சந்தித்தோம். அந்தத் தேர்தலில் சராசரியாக 3.7% வாக்குகளைப் பெற்றோம். 60 தொகுதிகளில் 8%, 12 தொகுதிகளில் 10% வாக்குகளைப் பெற்றோம். இதன்பின் இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறோம். தொடக்கத்தில் அணிந்திருந்த அரைக்கால் டவுசர் இப்போது எங்களுக்கு சேராது இல்லையா? அப்படியிருக்கும் போது அரசியல் ஆர்வமும், அறிவும் உடைய ரஜினி ரசிகர்களின் ஆதரவைப் பெற ரஜினியின் குரலை எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில் ரஜினியை மக்கள் நீதி மய்யத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டோம். ரஜினி செய்ய நினைத்த மாற்றத்தையே மக்கள் நீதி மய்யம் செய்ய நினைக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு அவரே தன்னுடைய ஆதரவை தெரிவிக்க வேண்டும்” என முடித்துக்கொண்டார்.
source https://www.vikatan.com/news/politics/kamal-asks-support-from-rajini-what-will-rajinis-mind-voice-says
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக