"மத்திய அரசு மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு. கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அப்போ இது யாருக்கான அரசு என்று நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்" என்று மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார் ஜவாஹிருல்லா.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மனித நேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழு கூட்டம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜவாஹிருல்லா, ``சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏழு மண்டலங்களாகப் பிரித்து பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பட்ஜெட்டாக உள்ளது.
கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கோடிஸ்வரர்களுக்கு இந்தியாவை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யும் வகையிலேயே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. நரேந்திர மோடியின் ஆட்சி மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய ஆட்சியாகத் தான் உள்ளது.
செஸ் வரியை விதித்து இருக்கிறார்கள். இதனால் மாநில அரசுக்கு வரும் நிதி குறையும். எட்டு வழிச்சாலையை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் இவர்கள் வேண்டுமென்றே இதை நிறைவேற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
இதிலிருந்தே தெரிகிறது. இது மக்களுக்கான அரசு அல்ல என்று. மகாத்மா காந்தி வேலை உறுதி வாய்ப்பு திட்டம் குறித்துச் சரியான அறிவிப்பு இல்லை. வேலைவாய்ப்பை அளிக்கும் பட்ஜெட்டாக இல்லை. மோடி அரசாங்கம் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாகத் திட்டமிட்டு இறங்கியுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் சாமானியர்களுக்கான பட்ஜெட்டாக இல்லாமல் முதலாளிகளுக்கான பட்ஜெட்டாகவே உள்ளது.
Also Read: `இது விவசாயிகளுக்கு ஏமாற்றமான பட்ஜெட்!' - விவசாயிகள் சொல்வது என்ன?
பா.ஜ.க வை சேர்ந்த கல்யாண ராமன், முகமது நபியை விமர்சித்துப் பேசி இருப்பது தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசி இருப்பதாகவே இருக்கிறது. தொடர்ந்து இவ்வாறு பேசி வரும் அவரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. குறிப்பாகப் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் ஆளுநர் அது குறித்து எதுவும் பேசாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தி.மு.க கூட்டணியில் கடந்த தேர்தலை விட மனித நேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.
source https://www.vikatan.com/news/politics/jawahirullah-blames-central-government-in-budget-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக