நான்காண்டுகள் சிறை தண்டனை முடிவுற்று விடுதலையாகியிருக்கும் சசிகலா, பெங்களூரு அருகேயுள்ள ஹெப்பல் நகரில் தங்கியிருக்கிறார். கொரோனா தொற்று இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சசிகலா, அரசியல்ரீதியாக யாருடனும் நேரடியாக இன்னும் பேசவில்லை. இந்தச் சூழலில், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனை தன் கட்டுப்பாட்டில் எடுத்து, அ.தி.மு.க-வுக்கு குடைச்சல் கொடுக்க சசிகலா திட்டமிட்டுவதாக தகவல்கள் வருகின்றன.
ஜெயலலிதாவின் உதவியாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் பூங்குன்றன். இவரது தந்தை சங்கரலிங்கம் காலத்திலிருந்தே போயஸ் தோட்டத்துடன் பூங்குன்றனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், வெளித் தொடர்புகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்ட பூங்குன்றன், தற்போது கோவில் கோவிலாகச் சுற்றி வருகிறார். பல ஆலயங்களின் திருப்பணிகளையும் செய்து வருகிறார். அவரை சசிகலா தன் கட்டுப்பாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளது குறித்து, மன்னார்குடி குடும்பத்தினர் சிலரிடம் பேசினோம்.
Also Read: சசிகலா, அ.தி.மு.க தலைமையைக் கைப்பற்ற வாய்ப்பிருக்கிறதா... சட்டம் சொல்வது என்ன?
``அ.தி.மு.க-வின் சொத்துக்களை பராமரிக்க அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என இரண்டு அறக்கட்டளைகள் இருக்கின்றன. இந்த அறக்கட்டளைகளில் ஜெயலலிதாவும், பூங்குன்றனும் தான் நிர்வாகிகளாக இருந்தனர். ஒருகட்டத்தில், இந்த அறக்கட்டளைகளை நிர்வகிக்க மூன்றாவதாக ஒரு அறக்கட்டளையை ஜெயலலிதா உருவாக்கினார். அதிலிலும் பூங்குன்றனை தன்னுடன் உறுப்பினராக ஜெயலலிதா நியமித்துக் கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க சார்பாக வாங்கப்பட்ட நிலங்கள், கட்டப்பட்ட கட்சி அலுவலகங்கள் அனைத்தும் பூங்குன்றன் பெயரில்தான் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், பூங்குன்றனை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவரும், ‘இந்த அறக்கட்டளைகள் என்னுடையது, கட்சி சொத்துக்களை நான் தான் நிர்வகிப்பேன்’ என்று எங்கும் சண்டையிட்டதில்லை. தற்போது ஒதுங்கியிருக்கும் அவரை தன் கட்டுப்பாட்டில் எடுக்க சசிகலா திட்டமிட்டுள்ளார். இதன்மூலம், சட்டரீதியாக பூங்குன்றனை வைத்து தற்போதிருக்கும் அ.தி.மு.க தலைமைக்கு குடைச்சல் கொடுக்கவும் அவர் ஆயத்தமாகிறார்.
Also Read: சசிகலா : மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்... காரில் அ.தி.மு.க கொடி! - அரசியல் ஆட்டம் ஆரம்பம்?
1987-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க உடைந்து ஜெ., ஜா என்று இரண்டு அணிகளாக பிரிந்தன. ஜெ. அணிக்கு ஆதரவாக அன்றைய தலைமை நிலையச் செயலாளர் அரங்கநாயகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கட்சிக்கு ஜெயலலிதா தான் உண்மையான தலைவர் என்று நீதிமன்றத்தில் வாதிட்டார். அன்றைய சூழலில் எம்.எல்.ஏ-க்கள் பலரும் ஜானகி அணிக்கு ஆதரவாக இருந்தாலும், எஸ்.திருநாவுக்கரசு, நெல்லை கருப்பசாமி பாண்டியன், கோவை மலரவன், ராமநாதபுரம் தென்னவன், மதுரை நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.ராதா, விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், காஞ்சிபுரம் உக்கம் சந்த், சேலம் கண்ணன், தர்மபுரி கே.பி.முனுசாமி, வேலூர் சந்திரசேகர் என்று பல நிர்வாகிகள் ஜெயலலிதா பக்கம் நின்றனர். கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி ஜெயலலிதாவை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர். கழக எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவராக ஜெ. அணிக்கு தாவ ஆரம்பித்தனர். ஆனால், ஆட்சி கையில் இருந்ததால், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையிலுள்ள கட்சி அலுவலகம் ஜானகி அணி கட்டுப்பாட்டில் இருந்தது.
ஜனவரி 30, 1988-ல் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாததால், ஜானகி ஆட்சிப் பொறுப்பை இழந்தார். ஆளுநர் ஆட்சி இருந்த சமயத்தில், அரங்கநாயகம் தொடுத்திருந்த வழக்கில் ஜெயலலிதா அணிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இந்த வழக்கு ஜெ.க்கு சாதகமாக கிடைக்க உறுதுணையாக இருந்தவர், அப்போது தலைமைக் கழக அலுவலகத்தின் மேலாளராக இருந்த துரை. வழக்கு தீர்ப்பின் நகல் நள்ளிரவு 12 மணிக்கு கிடைக்கப் பெற்றவுடன், ஜெயலலிதாவின் தளபதிகளாக இருந்த அப்போதைய தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் எம்.ஜி.ஆர் நகர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில், சுமார் 500 பேர் அதிரடியாக தலைமைக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகத்தை கட்டுப்பாட்டில் எடுத்தனர். இதே காட்சிதான் மீண்டும் அரங்கேறப் போகிறது.
Also Read: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஓவர்டேக் செய்த ராகுல் காந்தி?! - கொங்கு மண்டல விசிட் அலசல்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என்று உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஒரு உறுதுணையாக பூங்குன்றன் செயல்படலாம். ஜெயலலிதாவுக்கு துரை எப்படி உதவினாரோ, அதே வகையில் பூங்குன்றன் செயல்படலாம். நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டவுடன், கட்சி அலுவலகம் சசிகலாவின் கட்டுப்பாட்டில் கனநேரத்தில் கொண்டுவரப்படும். ஆட்சி இருக்கும் வரைதான் எடப்பாடியின் ஆட்டமெல்லாம்” என்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது பூங்குன்றன் வருத்தத்தில் இருப்பது அவரது முகநூல் பதிவிலிருந்தே அறிய முடிகிறது. ஜனவரி 14-ம் தேதி பூங்குன்றன் செய்துள்ள ஒரு பதிவில், ‘என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் விசுவாசம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. அம்மா எனக்கு ஆசையோடு வாங்கித் தந்த காரை நிறுத்திவிட்டார்கள். இதுவரை அதை ஏன் என்று கேட்டிருப்பேனா? கட்சியின் சொத்துக்களான அறக்கட்டளைகள் மூன்றிலும் அம்மாவின் மறைவுக்குப் பிறகு நான் மட்டுமே நிர்வாகி. இதை மாற்றிக் கொடுத்தால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னார்கள். இதை எங்காவது வெளியில் சொல்லியிருப்பேனா? அறக்கட்டளைகளுக்கு சொந்தம் கொண்டாடினேனா? மூன்று முறை கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுக்கு விண்ணப்பித்தபோது, என்னுடைய விண்ணப்பத்தை மட்டும் நிராகரித்தீர்களே, அதை எங்காவது வெளியில் சொல்லியதுண்டா? எனக்கு சொத்திலும் ஆசை இல்லை, கட்சியிலும் ஆசை இல்லை. இதற்கு மேல் கழகத்திற்கு எப்படி விசுவாசமாக செயல்படுவது என்று எனக்கும் தெரியவில்லை’ என்று பொங்கித் தீர்த்திருக்கிறார்.
வருத்தத்தில் இருக்கும் பூங்குன்றனை தன் ஆதரவாளராக மாற்றும் யுக்தியை கையில் எடுத்திருக்கிறார் சசிகலா. 1987-ல் எம்.ஜி.ஆர் இறந்தவுடன், அவர் உடலை ஏற்றிவந்த ராணுவ வண்டியிலிருந்து தீபன், கே.பி.ராமலிங்கம் ஆகியோர் ஜெயலலிதாவை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டனர். இந்தச் சம்பவத்தால் ஜெயலலிதா மீது ஒரு அனுதாப அலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட அதே அனுதாபம், சசிகலா மீதும் தொண்டர்களிடம் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள் அவர் ஆதரவாளர்கள்.
“தி.மு.க தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கினால், ஜெயலலிதாவுக்காக சிறைசென்றவர் என்கிற இமேஜ் சசிகலாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அன்றைக்கு ஜெயலலிதாவை கீழே தள்ளிவிட்ட தீபன், கே.பி.ராமலிங்கம் கேரக்டரில், இன்றைய எடப்பாடி பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் தொண்டர்கள் பார்க்கின்றனர்” என்கிறார்கள் அவர்கள். இந்த இமேஜ் உடன் பூங்குன்றனின் ஆதரவும் கலந்துவிட்டால், அ.தி.மு.க-வுக்கு குடைச்சல் நிச்சயம் என்கிறது சசிகலா வட்டாரம். சசியின் காய் நகர்த்தல்களுக்கு எடப்பாடி என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
source https://www.vikatan.com/news/politics/sasikala-plans-to-take-support-of-poongundran-to-take-over-the-party
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக