Ad

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

`ஆப்ரேஷன் ஸ்மைல்’ : தேனியில் இரண்டே நாளில் 12 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு!

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகள் கடத்தப்படுவதை தடுத்தல், காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிதல் போன்ற குழந்தைகள் நலன் சார்ந்த செயல்பாடுகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆப்ரேஷன் ஸ்மைல் (புன்னகையைத் தேடி) என்ற நிகழ்வு தேனியில் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட குழந்தைகள் நலக் குழுவும், காவல்துறையும் இணைந்து குழந்தைத் தொழிலாளர்கள் கண்டறியும் ஆய்வில் இறங்கினர். முதல் கட்டமாக போடி பகுதியில் உள்ள கடைகள், தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Also Read: தொடர் மழை... பூஞ்சை தாக்குதலுக்கு ஆளான பயிர்கள்... கண்ணீரில் தேனி விவசாயிகள்!

கடைகளில் ஆய்வு செய்த குழந்தைகள் நலக் குழுவினர்

போடியில், கடைகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 5 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதில், 2 சிறுவர்கள் 17 வயதுடையவர்கள் என்பதால், அவர்களைப் பணியமர்த்திய கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்த மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர், அச்சிறுவர்கள் தொடர்ந்து கல்வி கற்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதே வேளையில், மீட்கப்பட்ட 3 சிறுவர்கள் 14 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்ததால், அவர்களைப் பணியமர்த்திய கடை உரிமையாளர்கள் மீது போடி மகளிர் காவல்நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் நலக் குழு சார்பில் புகார் செய்யப்பட்டது.

கடைகளில் ஆய்வு செய்த குழந்தைகள் நலக் குழுவினர்

Also Read: சாக்கலூத்து மெட்டு காப்புக் காட்டுப் பகுதியில் சாலை - என்ன நடக்கிறது தேனி வனப்பகுதியில்?

இரண்டாவது நாள் கள ஆய்வானது நேற்று (02-02-2021 )சின்னமனூர் பகுதியில் நடந்தது. அப்போது, 17 வயதுடைய சிறுமி ஒருவர் பலசரக்குக் கடையில் பணிபுரிவது கண்டுபிடிக்கப்பட்டது. கடை உரிமையாளரை எச்சரித்த குழந்தைகள் நலக் குழுவினர், சிறுமியை மீட்டனர். மேலும், கனரகத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 சிறுவர்கள் உட்பட 6 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களை பணியமர்த்திய கடை உரிமையாளர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கடைகளில் ஆய்வு செய்த குழந்தைகள் நலக் குழுவினர்

ஆய்வில் இறங்கிய இரண்டு நாளில் 12 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட குழந்தைகள் நலக் குழுவும், காவல்துறையும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, சிறுவர், சிறுமியர்கள் கடைகளில் பணியமர்த்தப்படுவதையும், மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Also Read: தேனி : `ராஜமாதாவே வருக...’ - சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர்கள்!



source https://www.vikatan.com/government-and-politics/crime/12-child-laborers-rescued-in-two-days-action-through-operation-smile

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக