சென்னை போரூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ரிஷோத் (23). இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 13-ம் தேதி காலை 6.30 மணியளவில் தனது செல்போனை மேஜையின் மீது வைத்து விட்டு அவசர சிகிச்சை பிரிவுக்குச் சென்றார். பின்னர் அவர், தன்னுடைய அறைக்கு வந்தபோது மேஜை மீது வைத்திருந்த செல்போனைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து டாக்டர் ரிஷோத், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்பரவு பணியாளர்கள் இருவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரித்தபோது டாக்டரின் செல்போனைத் திருடியது தெரியவந்தது. விசாரணையில், சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தேவி (28), அவரின் தம்பி மூர்த்தி (27) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ராயப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``மருத்துவமனையில் துப்பரவு பணியாளர்களாகப் தேவி மற்றும் அவரின் தம்பி மூர்த்தி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் அன்பாக பழகுவார்கள். பின்னர், உதவி செய்வது போல நடித்து அவர்களை முழுமையாக நம்ப வைப்பார்கள். பின்னர், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்திருப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன்களை திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
திருடிய செல்போன்களை குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். செல்போன்களைப் பறிக்கொடுத்த பலர், காவல் நிலையங்களில் புகாரளிப்பதில்லை. அதனால் தேவியும் மூர்த்தியும் தொடர்ந்து செல்போன் திருடி வந்திருக்கின்றனர். டாக்டரின் விலை உயர்ந்த செல்போனை அவரின் அறைக்கு துப்பரவு செய்வதைப் போல சென்று திருடியபோது சிசிடிவியில் அது பதிவாகிவிட்டது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் தேவி, மூர்த்தியை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்திருக்கிறோம். இவர்கள் இருவரும் எத்தனை செல்போன்கள் திருடினார்கள் என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-brother-and-sister-in-theft-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக