Ad

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

`இது விவசாயிகளுக்கு ஏமாற்றமான பட்ஜெட்!' - விவசாயிகள் சொல்வது என்ன?

ஏராளமான வேலையிழப்புகள், சிறு, குறு தொழிற்சாலைகள் மூடல் என்கிற நெருக்கடியான சூழலில் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Union Budget 2021

அதில் விவசாயம் பற்றிய அறிவிப்பில், ``இந்த அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. விவசாயத் துறையில் வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கை தொடரும். அதற்கான தரவுகளையும் நான் தருகிறேன். கோதுமையைப் பொறுத்தவரை 2013-14 ஆண்டில் 33,874 கோடி ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவே 2019-20-ல் 62,804 கோடி ரூபாய் கோதுமை விவசாயிகளுக்குக் கொள்முதல் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் இந்தத் தொகை 75,050 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அரசின் மூலம் பயன்பெறும் கோதுமை விவசாயிகளின் எண்ணிக்கை 2019-20 ஆண்டில் 35.57 லட்சமாக இருந்தது. இது தற்போது 43.36 லட்சமாக உயர்ந்துள்ளது.

நெல் விவசாயிகளைப் பொறுத்தவரை 2013-14-ம் ஆண்டில் 53,928 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது 2019-20-ல் 1.41 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2020-21-ல் இந்தத் தொகை 1,72,752 ஆக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனில் அரசு உறுதியாக இருப்பதால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆகும் வகையில் இந்தப் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்குக் கடன் வழங்க 16.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது" என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Farmer

Also Read: `இந்த பட்ஜெட் உங்களை எப்படி பாதிக்கும்?' - அலசுகிறது நாணயம் விகடனின் ஆன்லைன் நிகழ்ச்சி

பட்ஜெட் பற்றிப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுந்தர விமலநாதன், ``இது விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரக்கூடிய பட்ஜெட். ஏற்கெனவே போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டுள்ள விவசாயிகளுக்கு இந்தப் பட்ஜெட் ஆறுதலாகவாவது இருக்க வேண்டும். ஆனால், இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்கதாக எதுவுமே இல்லை. இவர்கள் சொல்லியிருக்கும் விளைபொருள் உற்பத்தி விலை உயர்வுக்கு மத்திய அரசு சொந்தம் கொண்டாட முடியாது. விவசாயிகள்தான் உற்பத்தியை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் கடன் வழங்கும் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குக் கடனைத் தள்ளுபடி செய்யும்படிக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். அதை இவர்கள் கேட்கத் தயாராக இல்லை. 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரப் பிரதேசத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய மோடி 2021-ம் ஆண்டுக்குள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார். சொல்லி இப்போது அதுவும் நடக்கவில்லை. விவசாயிகளுக்குரிய நிவாரணத்தையும் இவர்கள் வழங்க மறுக்கிறார்கள். அதோடு மத்திய அரசிடம் வெளிப்படைத் தன்மை இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசி இன்று இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதனால், பிரதமர் 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கும் தொகையை ஏற்றிக் கொடுத்திருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட 6,000 ரூபாயிலும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்து விட்டன. மேலோட்டமாகப் பார்த்தால் விவசாயிகளுக்கு இவர்கள் எல்லாம் செய்திருப்பதாகத்தான் பிம்பம் இருக்கும். ஆனால் கொஞ்சம் ஆராய்ந்தால் அனைத்தும் உண்மையல்ல என்பது விளங்கிவிடும். காங்கிரஸ் செய்யவில்லை என்று சொல்லித்தானே ஆட்சியைப் பிடித்தார்கள்? இவர்கள் ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் விவசாயிகளின் நிலை மாறவில்லை என்றால் இந்த அரசும் முறைப்படி விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்றுதானே அர்த்தம். இவர்கள் போன பட்ஜெட்டில் அறிவித்ததே இன்னும் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்தப் பட்ஜெட்டிலும் எந்தவிதமான நலன்களும் விவசாயிக்கு இல்லை" என்றார்.

Union Budget 2021

Also Read: அனைத்துத் துறைகளிலும் `நைட் ஷிஃப்ட்'க்கு அனுமதி... பெண்களுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?

தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர், ஆறுபாதி ப. கல்யாணம், ``இந்தியாவின் 15 கோடி நில உடைமைகளில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதிக்குச் சமமாக விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக வரும் 2024-ம் ஆண்டுக்கு ஏற்பாடு செய்ய, இந்த ஆண்டு மொத்த பட்ஜெட்டில் மேலும் கூடுதலாக 2.5 சதவிகிதம் சேர்க்கக் கோரியிருந்தோம். இது நிறைவேறவில்லை. இந்த ஆண்டு மொத்த பட்ஜெட் ரூ 34.83 லட்சம் கோடி. பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு 4.78 லட்சம் கோடி ரூபாய். ஆனால் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு 1.31 லட்சம் கோடி ரூபாய். இந்த நிலை தொடர்ந்தால் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். 2021 முதல் 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 50,000 கிராமங்கள் வீதம் பத்து ஆண்டுகளில் இந்த 5 லட்சம் கிராமங்களை தற்சார்பு, தன்னிறைவு பசுமை கிராமங்களாக உருவாக்கக் காந்திய பொருளாதார மேதை டாக்டர் ஜே.சி.குமரப்பா திட்டங்கள் அடிப்படையில் தேசிய திட்ட அமலாக்கம், 2015-ம் ஆண்டிலிருந்து கோரி வருவதை மத்திய அரசு அமல்படுத்தவில்லை.

அனைத்து விவசாயக் கடன்களுக்கும் 4 சதவிகிதம் வட்டி, 3 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா பயிர்க் கடன், விவசாயிகள் பழைய கடன்களிலிருந்து முழுமையாக விடுவிக்கச் சிறப்புக் கடன் நிவாரணம் இவையும் நிறைவேறவில்லை. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் கிசான் சம்மான் நிதியை ஒருங்கிணைத்து குறைந்த பட்சம் 20 சதவிகிதம் பயிர் இழப்பீட்டுத் தொகை, பயிர்க் காப்பீடு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க, ஊக்கத் தொகை இணைந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வேண்டியிருந்தோம். இதுவும் நிறைவேறவில்லை. புதிய வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து குறைந்த பட்ச விலை பாதுகாப்பை தனியார் கொள்முதலில் உறுதி செய்ய வேண்டும்.

Also Read: `இந்த ஆண்டுக்குள் எட்டு வழிச் சாலை பணிகள் துவக்கம்!' - பட்ஜெட் அறிவிப்பும் மக்களின் எதிர்ப்பும்

வங்கி பிணை உறுதி, தனி விரைவு விவசாய நீதிமன்றங்கள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இணைந்த நிர்வாக ஏற்பாடு ஆகியவற்றிற்கு எந்தத் திட்டமும் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து மத்திய பாஜக அரசு விவசாயிகள் நலனுக்காகச் சில நல்ல திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறது. ஆனால் இவை நலிந்த கிராமங்களையும், விவசாயிகள் வாழ்வாதாரத்தையும் மீட்க போதுமானவையல்ல. இந்தியாவின் 5 லட்சம் கிராமங்களைத் தற்சார்பு, தன்னிறைவு பசுமை கிராமங்கள் ஆக வளர்ச்சி அடைய தேவையான சுதேசி பொருளாதாரத் திட்டங்களை மத்திய அரசு தற்போதைய பல திட்டங்களை மாற்றி அமைத்துச் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம்தான் வலிமையான தற்சார்பு சுதேசி இந்தியா உருவாகும். இதுதான் `புதிய இந்தியா'. மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களை இதில் கவனம் செலுத்த வேண்டுகிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/farmer-activists-shares-their-opinion-about-union-budget-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக