அதிகமாகப் பரவிவரும் கொரோனாவை காரணம் காட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா இறுதிநேரத்தில் தங்களை விலகிக்கொண்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்த போட்டிகளும் இடம்பெற்றிருந்த நிலையில் ஆஸ்திரலியாவின் இந்த திடீர் விலகல் முடிவு நியூஸிலாந்து அணிக்கு சாதகமாக முடிந்து அவர்களை ஜூன் 18-ம் தேதி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கும் இறுதிபோட்டிக்கு தகுதிபெறவைத்துள்ளது. ஆனால், நியூஸிலாந்தோடு இறுதிப்போட்டியில் மோத இருப்பது யார் என்கிற சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கிறது. இவர்களுக்கெல்லாம் நியூஸிலாந்தோடு மோத வாய்ப்பிருக்கிறது என ஐசிசி சொல்லும் கணக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்த புலம்பித் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
தற்போதைய நிலவரப்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 71.7 சதவித புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து 70 சதவித புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தங்களுக்கு உண்டான அனைத்து போட்டிகளையும் அவர்கள் முடித்து விட்டதால் இனிமேல் அவர்கள் புள்ளிகள் பட்டியலில் கீழே இறங்க வாய்ப்பில்லை. அதனால் நியூஸிலாந்து இறுதிபோட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றுள்ளது.
PCT - பர்சென்டேஜ் ஆஃப் பாயின்ட்ஸ்!
கொரோனாவிற்கு முன்புவரை வெற்றிகளின் அடிப்படையில் புள்ளிகளை வழங்கிவந்த ஐசிசி , கொரோனாவிற்கு பின்பு PCT - பர்சென்டேஜ் ஆஃப் பாயின்ட்ஸ் எனும் புதிய கணக்கிடும் முறையை அறிவிக்க அனைத்து அணிகளும் குழம்பிப் போயுள்ளன.
கொரோனா பிரச்னை காரணமாக உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 6 டெஸ்ட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த ரத்தான தொடர்களை ஈடுசெய்யும் வகையில் ஐசிசியால் கொண்டுவந்த புது விதிமுறைக்கு பெயர்தான் PCT.
கொரோனாவிற்கு முன்பு 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டிக்கு 30 புள்ளிகள் என 120 புள்ளிகள் ஒதுக்கப்பட்டது. ஒரு அணி 2-0 என வெல்லும் பட்சத்தில் வெற்றி பெற்றதற்காக 60 புள்ளிகளும் , 2 போட்டிகளை டிரா செய்ததற்காக 10 புள்ளிகள் என முறையே 80 புள்ளிகள் கணக்கில் எடுத்துகொள்ளப்படும். ஆனால் இந்த PCT முறையில் 80/120 என வகுத்து 66.67 புள்ளிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த PCT முறையை கொரானோவிற்கு முன்பு விளையாடிய போட்டிகளுக்கும் பொருந்தும் என ஐசிசி அறிவித்ததுதான் நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது. இந்த புதிய விதி சில அணிகளுக்கு சாதகமாகவும் சில அணிகளுக்கு பாதகமாகவும் முடிந்திருக்கிறது!
இந்தியாவின் நிலை என்ன?!
இந்தியா 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி , 3 தோல்வி , 1 டிரா என முடித்திருந்த காரணத்தினால் 71.7 சதவித புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த புதிய விதியால் அதிகமாக பயன்பெற்றது நியூஸிலாந்து. அவர்கள் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி 4 தோல்வி என 70 சதவித புள்ளிகளை பெற்று 2-வது இடத்தில் இருக்கிறார்கள்.
ஆஸ்திரலியா 14 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி 4 தோல்வி 2 டிரா செய்த காரணத்தினால் 69.2 சதவித புள்ளிகள் எடுத்து 3-வது இடத்தில் இருக்கிறார்கள்.
இங்கிலாந்து 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 வெற்றி, 4 தோல்வி, 3 டிரா என 68.2 சதவித புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தில் இருக்கிறார்கள்.
மற்ற அணிகளின் புள்ளிகள் எல்லாம் 40 சதவிதத்திற்கு கீழே இருப்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான பந்தயத்தில் இந்த 4 அணிகளில் இருந்துதான் ஏதாவது இரண்டு அணிகள் தகுதிபெறும் என்ற சூழல் இருந்து வந்தது . இந்நிலையில் ஆஸ்திரலியா, தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் விலகியிருப்பது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்குத் தகுதிபெற சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இந்தியா - இங்கிலாந்து போட்டிகளின் முடிவை பொறுத்தே தகுதிபெறுவார்களா இல்லையா என்பது தெரியவரும்.
இந்தியா வெர்ஸஸ் இங்கிலாந்து தொடர்!
இங்கிலாந்துடன் இந்தியா மோத இருக்கும் 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவைப் பொறுத்தே நியூஸிலாந்துடன் யார் மோதப்போகிறார்கள் என்பது தெரியவரும்.
1. இங்கிலாந்து இந்தியாவை 1-0, 2-0, 2-1 என வெல்லும்பட்சத்திலோ இல்லை இந்தியா 1-0 என இங்கிலாந்தை வெல்லும் பட்சத்திலோ அல்லது 2-2 என டிரா செய்தாலோ ஆஸ்திரலியா அணி புள்ளிகளின் அடிப்படையில் இறுதிபோட்டிக்குத் தகுதிபெற்றுவிடும்.
2. இங்கிலாந்து அணி இந்தியாவை 4-0,3-0,3-1 என வெல்லும்பட்சத்தில் இங்கிலாந்து அணி இறுதிபோட்டிக்குத் தகுதிபெறும்.
3. இந்திய அணி இங்கிலாந்தை 2-0, 2-1, 3-0,3-1,4-0 என வெல்லும்பட்சத்தில் இந்திய அணி இறுதிபோட்டிக்குத் தகுதிபெறும்.
இந்த 3 வாய்ப்புகளில் இந்திய அணி வெற்றிபெற்று தகுதிபெறவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கும். அதற்கு நடந்து முடிந்த இந்தியா - ஆஸ்திரலியா தொடரே சாட்சி.
காத்திருப்போம் இந்திய அணியின் வெற்றிகளுக்காக!
source https://sports.vikatan.com/cricket/will-india-qualify-for-icc-test-championship-final-at-lords
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக