தனது அறையில் இருக்கும் சோஃபாவில் அமர்ந்த தாட்சா, எதிரே இருக்கும் டீபாயில் லன்ச் பேக்கைப் பிரித்து அடுக்கியபடி சாப்பிடத் தயாரானாள். அவள் தட்டை கையில் எடுத்தபோது கதவு தட்டப்பட்டது. தாட்சா நிமிர்ந்து பார்க்க... பாதி கதவைத் திறந்தபடி மேனன் தலையை மட்டும் நீட்டி, “சாரி நான்ஸி இல்லையா” எனக் கேட்டார்.
“அவ லன்ச்சுக்கு போயிருப்பா ஏதாவது வேணுமா?!”
“என்னோட போன் அவுட்டாயிருச்சு... லன்ச் ஆர்டர் பண்ணனும்.”
“நான் ஆர்டர் பண்றேன்” என்றாள் தாட்சா.
“இல்ல பரவாயில்ல... நான்ஸி வரட்டும் ஒண்ணும் அவசரம் இல்லை!”
“ஏன் நான் ஆர்டர் பண்ணக் கூடாதா? நீங்க என்ன ஆர்டர் பண்றீங்கன்னு எனக்கு தெரியகூடாதுன்னு நினைச்சீங்கன்னா சொல்ல வேணாம்” எனப் புன்னகையுடன் தாட்சா கேட்க... மேனன் சிரித்தபடி, “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல... வொயிட் ரைஸ், ஃபிஷ் கறி அவ்வளவுதான்” என்றார்.
“நெய் சோறு, சிக்கன் கறின்னா ரெடியா இருக்கு. உங்களுக்கு ஓகேன்னா நீங்க என்னோட ஜாயின் பண்ணலாம்” என தாட்சா சொல்ல “நிச்சயமா” என மேனன் உள்ளே நுழைந்தார். அவர் அப்படி சட்டென சம்மதம் சொல்வார் என தாட்சா எதிர்பார்க்கவில்லை.
“என்னோட சமையல் கொஞ்சம் சுமாராதான் இருக்கும்” என அவசரமாக சொன்னாள் தாட்சா. “என்ன விட மோசமா எல்லாம் நீங்க ஒண்ணும் சமைச்சிட முடியாது” என மேனன் சிரித்தபடி அவள் எதிரே இருக்கும் சோஃபாவில் அமர்ந்தார்.
“நீங்க சமைப்பீங்களா?” என தாட்சா சந்தேகமாகக் கேட்டாள்...
“யெஸ்”
“ஏன்?”
“சமைச்சாதான சாப்பிட முடியும்” என மேனன் சிரித்தார்...
“நான் அத கேட்கல... வீட்ல சமைக்கிறதுக்கு ஆள் இல்லையா?”
மேனன் நிமிர்ந்து அவளைப் பார்த்தார். தாட்சாவுக்கு மேனன் ஒரு டைவர்ஸி என மார்க்ஸ் சொன்னது நினைவுக்கு வந்தது.
“உங்க வொஃய்ப்...” என தாட்சா மெதுவாக தயங்கியபடி கேட்க...
“கல்கத்தாவுல இருக்கா...”
“ஓ'' எனப் பொதுவாகச் சொன்னாள் தாட்சா. அந்த 'ஓ'வுக்கு பின்னால் ஓராயிரம் கேள்விகள் இருந்தன... அது மேனனுக்கும் புரிந்தது.
தாட்சா தட்டில் நெய் சாதமும் சிக்கன் கறியும் போட்டு நீட்ட மேனன் அதை கையில் வாங்கியபடி சொன்னார். “நானும் என் மனைவியும் பிரிஞ்சிட்டோம்.''
தாட்சா சிறிய அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க அவர் எந்த சலனமும் இல்லாமல் ஸ்பூனை எடுத்து சாப்பிடத் துவங்கினார்.
“என்னாச்சு?” அவளையறியாமல் அனிச்சையாக அந்தக் கேள்வி வந்து விழுந்தது. உடனே அப்படி கேட்டது சரியில்லையோ என்ற தோன்ற அவசரமாக “சாரி" என்றாள்.
“இட்ஸ் ஒகே...” என நிமிர்ந்து எப்போதும் போல புன்னகைத்தார் மேனன்.
“தப்பா எடுத்துக்காதிங்க... இப்படிப்பட்ட ஒரு ஆளை ஏன் ஒருத்தங்க பிரிஞ்சாங்கன்னு...” என வேறு வார்த்தைகளில் தாட்சா என்னாச்சு என்பதை மீண்டும் நாகரீகமாக கேட்டாள்.
“ரெண்டு நல்லவங்க ஒண்ணா இருக்கனும்னு அவசியம் இல்லை” என்றார் மேனன்.
“ஏன் அப்படி?”
“அதான் கல்யாணம்!” என சிரித்தார் மேனன். தாட்சா அவரை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“எங்களோடது லவ் மேரேஜ்... பாம்பேல ஒண்ணா வொர்க் பண்ணோம். அப்போதான் காதல், கல்யாணம் எல்லாம். கம்பெனி ரூல்ஸ்படி கணவன் மனைவி ஒரே கம்பெனியில வேலை செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. கரியரா பார்த்தா இரண்டு பேருக்குமே அந்த வேலை ரொம்ப முக்கியமானதா இருந்துச்சு...” என மேனன் பாதியில் நிறுத்தினார்.
“ரிசைன் பண்ண முடியாதுன்னு சொல்லியிருப்பீங்க...” என ஆர்வம் தாங்காமல் சொன்னாள் தாட்சா.
“இல்ல... அவ அங்க வேலை செய்யட்டும்னு நான் ரிசைன் பண்ணிட்டேன்!”
வெளியே வேறு மாதிரி கேட்டாலும் உள்ளுக்குள் தாட்சாவுக்குத் தெரியும் மேனன்தான் விட்டு கொடுத்திருப்பார் என்று. அதனால் அவரது பதில் அவளுக்கு வியப்பாக இல்லை.
“அப்புறம் நான் டெல்லியில வேலைக்குச் சேர்ந்தேன். ரெண்டு பேரோட கரியர்லயுமே முக்கியமான காலகட்டம் அது... ராத்திரி பகல் பார்க்காம வேலை செஞ்சோம். எங்களைப் பத்தி யோசிக்கவே எங்களுக்கு நேரம் இல்லை. அவ மும்பை, நான் டெல்லின்னு 7 வருஷம் ஓடிப் போச்சு.”
தாட்சா சாப்பிட மறந்து அவர் பேசுவதைக் கேட்டபடியிருந்தாள்.
“மீடியால இருக்குறவங்களுக்கு இன்னொரு பிரச்னை இருக்கு. எப்பேர்பட்ட வேலை செய்யுறவனுக்கும் தீபாவளி, தசரா, நியூ இயர்னா லீவு கிடைக்கும். நம்ம அப்பதான் ஸ்பெஷல் ஷோ பண்றோம்னு டபுள் பிஸியா இருப்போம்!”
தாட்சா அதை ஆமோதிப்பது போல தலையாட்டி புன்னகைத்தாள்.
மேனன் தொடர்ந்தார்.
“சட்டுன்னு ஒரு நாள் என்னடா இது தப்பா இருக்கேன்னு யோசிச்சேன்... என் வேலையைத் தூக்கி போட்டேன். நேரா அவ முன்னாடி போய் நின்னேன். வேலை செஞ்சது போதும் கொஞ்சம் வாழலாம்னு சொன்னேன்.”
“அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களா...”
“அப்படி சொல்லல... அவ வேற ஒண்ணு சொன்னா!”
அவரது மனைவி என்ன சொல்லியிருப்பாள் என்பதை யூகிக்க முடியாமல் தாட்சா அவரை ஏறிட்டு பார்த்தாள்.
“நம்ம ஏன் திரும்பவும் நல்ல நண்பர்களா இருக்க கூடாதுன்னு அவ கேட்டா... அப்பதான் எனக்கு உறைச்சுது... நல்ல நண்பர்கள்தான் காதலர்களா மாறுறாங்க... அப்புறம் கல்யாணம் பண்ணி கணவன் மனைவியா மாறுறாங்க. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நட்பும் காதலும் செத்து போச்சுன்னா அந்தக் கல்யாணத்துல அர்த்தமே இல்லல்ல!”
தாட்சா கண்களை இமைக்காமல் அவரைப் பார்த்தாள்.
“நாங்க எப்பவும் நல்ல நண்பர்களா இருக்கலாம்னு முடிவு பண்ணி பிரிஞ்சிட்டோம்” என சிரித்தார்.
“அவங்க இப்ப?”
“இன்னொரு கல்யாணம் பண்ணி கல்கத்தால செட்டில் ஆயிட்டா...”
“உங்களுக்கு கஷ்டமா இல்லையா?”
“இல்ல பாவமாதான் இருந்துச்சு... நல்ல நண்பர்கள் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு அவதான் சொன்னா... அப்ப யாரோ ஃபிரண்ட்லியா இல்லாத ஒருத்தரைத்தான அவ கல்யாணம் பண்ணியிருக்க முடியும். அது எவ்வளவு கஷ்டம் இல்ல...”
“ஆமா நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல?”
“ஒரு தடவை கல்யாணத்தை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிட்டீங்கன்னா இன்னொரு கல்யாணம் வேணும்னு உங்களுக்கு தோணவே தோணாது” என அவர் சிரித்தார்.
“நான் சீரியசா கேட்குறேன்” என விடாமல் தாட்சா கேட்க...
“தப்பா எடுத்துக்காதிங்க... நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல?” என சட்டெனக் கேட்டுவிட்டார் மேனன்.
அந்த கேள்வியை எதிர்பார்க்காத தாட்சா ஒரு கணம் தடுமாறியவள், “அது... அது... அவசியம்னு எனக்கு தோணல” என்றாள்.
“அப்படியா?”
“பார்த்ததும் ரொம்ப பிடிச்சு போயி கடைசிவரைக்கும் இவனோடவே இருக்கணும்ன்ற மாதிரி யாரையும் நான் சந்திக்கலைன்னு வச்சுக்கோங்களேன்.”
“ஒரு வேளை அப்படி சந்திச்சா!”
தாட்சா புன்னகையுடன் யோசித்தவள், “சந்திக்கும்போது பார்த்துக்கலாம்” என்றாள்.
மேனன் சிரித்தார்.
“நீங்க இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லல.... ஏன் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல” என மீண்டும் தாட்சா கேட்க...
“உங்க பதில்தான்... இன்னும் அந்த மாதிரி யாரையும் சந்திக்கலைன்னு வச்சுக்கோங்களேன்”
“சந்திச்சா...?”
“சந்திக்கும் போது பார்த்துக்கலாம்” என அவளைப் போலவே சொல்லி சிரித்தார் மேனன். தாட்சாவும் சிரித்தாள்.
................................................................
கேன்டீனில் திவ்யாவும் நந்திதாவும் அமர்ந்திருந்தார்கள். நந்திதா சிரித்துக் கொண்டிருந்தாள்.
“எதுக்குடி சிரிக்கிற?” என எரிச்சலாகக் கேட்டாள் திவ்யா.
“எதுக்கு சிரிக்கிறேன்னு தெரியப்போய் தான உனக்கு கோபம் வருது” என மீண்டும் சிரித்தாள்.
திவ்யா முறைக்க...
“சும்மா சீன் போடாத ஒத்துக்கோ”
“என்ன ஒத்துக்கனும்?”
“உனக்கு அந்த மார்க்ஸ் மேல ஒரு இதுன்னு...”
“லூசாடி நீ... வந்து நாலு நாள்ல நான் அந்த மார்க்ஸ் மேல லவ்வாயிட்டேன்னு சொல்றியா... காதல்னா கூட ஒரு காரணம் வேணாமா?”
“காரணத்தோட வர்ற காதல் காரியம். காரணமே இல்லாம வர்ற காதல்தான் காவியம்!”
“என்னடி வேணும் உனக்கு?”
“மார்க்ஸ்தான்!”
“எடுத்துக்கோ...”
“உனக்கு வேணாம்னா அதுதான் என் பிளானே!”
“அவன் மூஞ்சு கூட எப்படி இருக்குன்னு உனக்குத் தெரியாது அதுக்குள்ள இப்படி பேசுற!”
“ஆபிஸ்ல யார கேட்டாலும் மார்க்ஸ், மார்க்ஸ்ங்குறாங்களா... அவங்க சொல்றதைக்கேட்டே அவன் மேல காதலாயிட்டேன்!”
“பண்ணு... பண்ணு... அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சென்னையிலயே செட்டிலாகு” என எரிச்சலாகச் சொன்னாள் திவ்யா.
“யாருக்கோ வயிறு எரியுற மாதிரி இருக்கே?” என நந்திதா சிரிக்க... திவ்யா அவளைப் பொய் கோபத்துடன் பார்க்க... மார்க்ஸ் கேன்டீனுக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்த திவ்யா, நந்திதாவிடம் “ஏய் உன் ஆளு வர்றான்...” என்றாள்.
“யாரு?”
“உன் கார்ல் மார்க்ஸ்!”
நந்திதா அவசரமாகத் திரும்பிப் பார்த்தாள். பார்த்த மாத்திரத்தில் மார்க்ஸ் யாரென அவளுக்கு புரிந்தது.
“மார்க்ஸ்” என சத்தமாக கையை ஆட்டி அழைக்க திவ்யா பதற்றமானாள்.
“ஏய் என்னடி பண்ற?”
மார்க்ஸ் புன்னகையுடன் அருகில் வந்தான்.
“நான் நந்திதா புதுசா வந்திருக்கிற ப்ரோமோ ஹெட்” என அவள் தனது கரத்தை நீட்ட....
“ஹாய்” என மார்க்ஸ் கைகுலுக்கினான்.
“உட்காருங்க...” எனச் சொல்லியபடி நந்திதா அமர்ந்தாள்.
மார்க்ஸும் அவள் அருகில் அமர்ந்தான்.
திவ்யா அவர்களுக்கு எதிரே மார்க்ஸின் பார்வையைத் தவிர்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“நானும் திவ்யாவும் நல்ல ஃபிரண்ட்ஸ்... கல்கத்தாவுல 4 வருஷம் ஒண்ணா வொர்க் பண்ணோம்!”
“உங்க ப்ரோமோஸ்லாம் நான் யூ டியூப்ல பார்த்திருக்கேன்” என்றான் மார்க்ஸ்.
“சும்மா விடாதிங்க...” என சிரித்தாள் நந்திதா.
“நிஜமா... அந்த வாய்ஸ் ஆஃப் பெங்கால் ஷோவுக்கு ரிவர்லயே ஒரு புரோமோ பண்ணி இருந்தீங்களே சான்சே இல்லை...” என மார்க்ஸ் சொல்ல ஒரே சமயத்தில் திவ்யாவும் நந்திதாவும் ஆச்சர்யமானார்கள்.
“சான்சே இல்ல மார்க்ஸ். டக்குன்னு அடிக்கிறீங்க!”
“இல்ல நல்ல புரோமோ அது...” என்றான் மார்க்ஸ்.
“அந்த ஷோ பண்ணது திவ்யாதான்”
“ஷோவை நான் பார்த்தது இல்லை” என மார்க்ஸ் புன்னகைக்க...
நந்திதா சிரித்தபடி, “நல்ல ஷோன்னு ஒரு பொய் சொல்லியிருக்கலாமே” என்றாள்.
“திவ்யாவை எல்லாம் ஏமாத்த முடியாதுங்க... அந்த ஷோல என்ன பிடிச்சுதுன்னு கேட்டா நான் மாட்டிப்பனே” என சிரித்தான் மார்க்ஸ்.
“நந்து நான் கேபின்ல இருக்கேன்... நீ பேசிட்டு வா” என திவ்யா எழுந்தாள்.
“திவ்யா ஒரு நிமிஷம்...” அவள் திரும்பி அவனைப் பார்க்க “தேங்க்ஸ்” என்றான் மார்க்ஸ்.
“எதுக்கு?”
“மீட்டிங்ல எனக்கும் இந்த சண்டைக்கும் சம்பந்தம் இல்லன்னு சொன்னதுக்கு!”
“திவ்யா உங்களை மாட்டிவிட மாட்டான்ற தைரியத்துலதான அப்படி சொன்னீங்க?!” என சிரித்தாள் நந்திதா.
“அப்படி இல்லங்க... திவ்யா எப்பவுமே பொய் சொல்ல மாட்டங்கன்னு எனக்கு தெரியும். அதான், அவங்க சொன்னா நான் தண்டனையை ஏத்துகிறேன்னு சொன்னேன்.”
திவ்யா ஆச்சர்யத்தை மறைத்தபடி மார்க்ஸைப் பார்த்தாள்.
“நாலு நாள்ல திவ்யாவைப் பத்தி ரொம்ப தெரிஞ்சிக்கிட்ட மாதிரி இருக்கு” என நந்திதா குறும்பாகக் கேட்க...
“ஆமா... தெரிஞ்சிக்கிட்டேன்தான்..”
“என்னன்னு சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்!”
“திறமைசாலி... மென்ட்டார் மேல ரொம்ப மரியாதை உள்ள ஆள். எதிரியா இருந்தாலும் முதுகுல குத்துற பழக்கம் கிடையாது. ரொம்ப ஸ்டெரயிட் ஃபார்வட். கான்ஃபிடன்ஸ் உண்டு, ஈகோ இல்ல... அப்புறம் பேரழகி...” என மார்க்ஸ் சொல்லிவிட்டு சிரிக்க நந்திதாவும் சிரித்தாள்.
“நான் கிளம்பறேன்...” என திவ்யா நகர்ந்தாள்.
நந்திதா திரும்பி அவனைப் பார்த்தவள், “எனக்கு என்னமோ ரொம்ப நாள் பழகுன ஒரு ஆள்கிட்ட பேசுற மாதிரி இருக்கு!”
“எனக்கும்தான்” என புன்னகைத்தான் மார்க்ஸ்.
“சரி... நான் கிளம்புறேன். திவ்யா புரோகிராமிங் பிரசன்டேஷனுக்காக கொஞ்சம் ஹெல்ப் வேணும்ன்னு கேட்டா...”
“ஓகே... ஒகே... அப்புறம் பார்க்கலாம்!”
“நாளைக்கு எங்க அந்த மீட்டிங்?"
“லீலா பேலஸ்ல”
“நாளைக்கு அங்க பார்க்கலாம்" என நந்திதா நகர்ந்தாள்.
................................................................
மறுநாள் காலை...
ஹோட்டல் லீலா பேலஸில் மார்க்ஸ் தனது புல்லட்டை பேஸ்மென்ட் பார்க்கிங்கில் பார்க் செய்து விட்டு சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் வைக்க...
“சார் சார் இங்க சிகரெட் பிடிக்க கூடாது” என்றார் செக்யூரிட்டி.
“சும்மா வாய்ல வச்சிக்கலாம்ல....” என மார்க்ஸ் சொல்ல
செக்யூரிட்டி எரிச்சலானார்.
“சும்மா தமாஷ்குன்ணே... மேல போய் தான் பத்த வைப்பேன்” என மார்க்ஸ் நகர்ந்தான்.
அவனது செல்போன் அடித்தது. அதை எடுத்து காதில் வைத்தான்.
“சொல்லு பாண்டியா”
“சீஃப் ஒரு சின்ன பிரச்னை!” என்ற சொன்ன பாண்டியனின் குரலில் பெரிய பதற்றம் இருந்தது.
“என்னடா?”
“நாம பண்ண பிரசன்டேஷன் சிஸ்டம்ல இல்ல சீஃப்...”
சட்டென அதிர்ந்து போன மார்க்ஸ், “என்னடா உளர்ற” என்றான்.
“ஆமா சீஃப் காணோம்... ராத்திரி எல்லாம் வொர்க் பண்ணி காலையிலதான் கம்ப்ளீட் பண்ணோம். ஒரு டீ சாப்டுட்டு வந்து பாக்குறோம், அதைக் காணோம் சீஃப்...”
“அது எப்படிடா காணாமப் போகும்?” என மார்க்ஸ் கோபமானன்.
“யாரோ வேணும்னு டெலிட் பண்ணிட்டாங்கனு தோணுது சீஃப்”
“அப்படி யார்றா டெலிட் பண்ணுவாங்க... சின்னப்புள்ள மாதிரி காரணம் சொல்ற... நம்ம சிஸ்டம் பாஸ்வேர்ட் யாருக்குடா தெரியும்?”
“ஏஞ்சலுக்குத் தெரியும் சீஃப்!”
மார்க்ஸுக்குள் பொறி தட்டியது.
“நாங்க டீ குடிச்சிட்டு வரும் போது அதுதான் ஆஃபிஸ்ல இருந்து வெளிய போச்சு” என பாண்டியன் தயங்கி தயங்கி சொல்ல... மார்க்ஸுக்கு மெல்ல புரியத் துவங்கியது.
முதல் பிரசன்டேஷன். மார்க்ஸ் என்கிற மனிதனை இங்கு அனைவருக்கும் தெரியும். அவன் எப்படிப்பட்ட வேலைக்காரன் என்பதை இதன் மூலம்தான் புதிதாக வந்தவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். மூன்று நாள்கள் மொத்த டீமும் கண்விழித்து வேலை செய்த பிரசன்டேஷன் டெலிட்டாகியிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் மீட்டிங் துவங்கிவிடும். என்ன செய்ய போற, என்ன செய்ய போற என மார்க்ஸ் பதற்றமாக தனக்குள் கேட்டுக் கொண்டான். ஆனால் அவனுக்கு விடை தெரியவில்லை!
- Stay Tuned...
source https://cinema.vikatan.com/literature/idiot-box-12-thaatcha-and-menon-initiates-conversation-marx-in-trouble
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக