Ad

புதன், 24 பிப்ரவரி, 2021

''ரஜினிகாந்தை நம்பி, அவரோடு இணைந்தேன். ஆனால்...'' - விளக்குகிறார் அர்ஜூனமூர்த்தி

'மாத்துவோம்... எல்லாத்தையும் மாத்துவோம்!' என்று அதிரடியாக அரசியலுக்குள் நுழைந்ததோடு, 'இப்போ இல்லைனா எப்பவுமே இல்லை!' என்றெல்லாம் அதிரடி காட்டிய நடிகர் ரஜினிகாந்த், அடுத்த சில நாட்களிலேயே 'கதம்... கதம்' கூறி அரசியல் கதவை இறுக்கமாக சாத்திக்கொண்டார்!

இந்த நிலையில், ரஜினிகாந்தின் புதிய கட்சியை நம்பி, பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவு தலைவர் பதவியை உதறிவிட்டு வந்த அர்ஜூனமூர்த்தி, தற்போது தனியாக புது கட்சி ஆரம்பிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். அவரை நேரில் சந்தித்தேன்....

ரஜினிகாந்த்

''ரஜினிகாந்தின் ஆசையை நிறைவேற்றுவதற்காக புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். ரஜினிகாந்த் அப்படி என்னதான் ஆசைப்படுகிறார்?''

''தமிழ்நாட்டு மக்கள் மீது அதீத நேசம் வைத்திருந்தார் ரஜினி. சிஸ்டத்தை மாற்றுவதற்கான பல செயற்திட்டங்களை அவர் வைத்திருந்தார். அனைத்து வயதைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக, 50 வயதுக்கு உட்பட்ட திறமையான இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும் என விரும்பினார். அப்போதுதான் அனைத்துத் தரப்பு மக்களின் பொதுவான தன்மை மற்றும் அவர்களது அரசியல் தேவை என்னவென்பதெல்லாம் தெரியவரும்.

ரஜினிகாந்தின் இந்த ஆசையை நிச்சயம் நாங்கள் நிறைவேற்றித் தருவோம். நான் தொழில்நுட்பத் துறையிலிருந்து வந்தவன் என்பதால், ரஜினிகாந்தின் இந்த ஆசையை என் வழியில் சின்னதொரு மாற்றத்துடன் நிறைவேற்றித் தருவேன்.

அதாவது, தமிழ்நாடு என்ற இந்த பழைய வீட்டை தொலைநோக்குப் பார்வையுடன் புனரமைக்கும்போதுதான் அது மக்களுக்கு சிறப்பான மாற்றத்தைத் தரும். என்னுடைய இந்த முயற்சியில், ரஜினிகாந்த் என்ஜினாக இருப்பார் என்று நம்பித்தான், நான் அவரோடு இணைந்தேன். ஆனால், தற்போது அதில் சில சிரமங்கள் ஏற்பட்டுவிட்டாலும் என்னுடைய ஓட்டம் நிற்கக்கூடாது என்பதற்காகவே புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறேன்! இந்திய அளவில் முன்னுதாரணமாக திகழ்ந்துவரும் தமிழ்நாடு, என்னைப்போன்ற புதியவர்களின் அரசியல் முயற்சியால், இன்னும் சிறப்பு பெற்று இந்தியாவுக்கே பயன்தரும்!''

அர்ஜூனமூர்த்தி-ரஜினிகாந்த்-தமிழருவி மணியன்

''அரசியலில் உங்கள் அனுபவம்தான் என்ன?''

''என் தந்தை புதுக்கோட்டை முனிசிபல் சேர்மனாக இருந்தவர் என்பதால், என் ரத்தத்திலேயே அரசியல் இருக்கிறது. குறிப்பாக கடந்த 25 ஆண்டுகாலமாக நான் அரசியலில்தான் இருந்துவருகிறேன்.

மத்திய - மாநில அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அமைப்புடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது; அரசின் கொள்கை வகுத்தலிலும் என் பங்களிப்பு இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் இப்போது நான் விரிவாக சொல்வது நன்றாக இருக்காது. கட்சி ஆரம்பித்தபிறகு சொல்கிறேனே....!''

''விரைவில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் இந்நேரத்தில் புதிய கட்சியை ஆரம்பித்து தேர்தலில் பங்கேற்பதென்பது சாத்தியம்தானா?''

''சாத்தியம்தான்... ஏனெனில், தமிழ்நாடு மக்கள் எந்தவொரு விஷயத்தையும் ஆராய்ந்து செய்யக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்கள். அந்தவகையில், 'மாற்று சிந்தனை கொண்ட அரசியல் தேவை' என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அந்த மாற்று சிந்தனையை யார் வந்து கொடுப்பார்கள் என்ற கேள்வி அவர்கள் மனதில் எழவில்லை.

மகாத்மா காந்திதான் நமக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார். ஆனால், அவர் வீட்டுக் கதவைத் தட்டி, 'எங்களுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுங்கள்' என்று நாம் யாரும் கேட்கவில்லை. 'இந்திய மக்களுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தே தீருவது' என்ற வைராக்கிய உணர்வை காந்தியே தன் மனதுக்குள் எடுத்துக்கொண்டார். அதன் முயற்சியாக, பிரிட்டிஷாரின் துப்பாக்கியையும் பீரங்கிகளையும் எதிர்த்து 'அஹிம்சை' என்ற பேராயுதத்தை மட்டுமே நம்பி ஏந்தி நின்று வெற்றி பெற்றார். அவர்தான் என்னுடைய மிகப்பெரிய நம்பிக்கை!''

மகாத்மா காந்தி

''அப்படியென்றால், அர்ஜூனமூர்த்திதான் அந்த மகாத்மா காந்தியா?''

''நல்லது வேண்டும் என்று நினைக்கிற அத்தனைபேருமே மகாத்மா காந்திதான். நேர்மை, நாணயம், தியாகம் என வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவருமே காந்திதான்!''

''அடிமை இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும் என்ற தேவை காந்திக்கு இருந்தது... உங்கள் புதிய கட்சிக்கு இங்கே அப்படி என்ன தேவை இருக்கிறது?''

''திராவிடப் பிடியிலிருந்து மீளவேண்டும் என்ற சுதந்திர தேவை இங்கே இல்லையா? திராவிடம் என்ற பெயரில் அராஜகம், ஆணவம், அகங்காரப் போக்குதானே இங்கே நிலவிவருகிறது. இத்தனை கல்வி அறிவு பெற்ற தமிழ்நாட்டில்தான் டாஸ்மாக் கச்சாரமும் பெருகிவருகிறது. இந்தப் போதை கலாசாரத்தை இப்படியே விட்டுவிட்டால், கல்வியறிவு குறைந்துவிடாதா?''

''வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில், கல்வி அறிவு உள்ளிட்ட முன்னேற்றத் திசையில் தமிழ்நாட்டை கொண்டுசென்றதே திராவிடக் கட்சிகள்தானே?''

''ஒரு பொருளை விற்கவேண்டுமானால், அந்தப் பொருளை வாங்குவதற்கான தேவை இருக்கவேண்டும். அதேபோல் மக்கள் இயல்பிலேயே கல்வி கற்க ஆர்வத்தோடு இருந்ததால், தமிழ்நாடு கல்வியறிவில் தேர்ச்சி பெற்றது. சொத்துகளை விற்றாவது பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட வேண்டும் என்று கல்வி மீது ஆர்வம் கொண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள்!

அண்ணாமலை யுனிவர்சிட்டி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வந்தது. இந்த அண்ணாமலை யுனிவர்சிட்டி மூலமாகத்தான் அண்ணா, பேரறிஞர் ஆனார், அன்பழகன் பேராசிரியர் ஆனார், நெடுஞ்செழியன் நாவலர் ஆனார்!''

பேரறிஞர் அண்ணா - பேராசிரியர் அன்பழகன் - நாவலர் நெடுஞ்செழியன்

''பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவுத் தலைவரான நீங்கள் ரஜினிகாந்துடன் இணைந்தபோதே, உங்கள் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக புகார் எழுந்ததே....?''

''பா.ஜ.க-வில் பொறுப்பு வகித்துவரும் அர்ஜூனமூர்த்தியை தன்னுடன் இணைத்துக்கொண்டால், இப்படியான கெட்ட பெயர் வரும் என்று தெரிந்தும்கூட ரஜினிகாந்த் என்னைத் தேர்ந்தெடுத்தார். காரணம்... என் அறிவாற்றல்.... திறமை! அதாவது பா.ஜ.க-வில் நான் இருந்தபோது கொடி ஒளி, வாழ்வாதார அடைகாப்பகம், சுந்தரத் தெலுங்குக் கூடல் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினேன்.

எண்ணெழுத்து இகழேல், விநாயகரும் விருட்சமும் போன்ற நிகழ்ச்சிகள் செய்தேன். இப்படி மாற்றத்தை நோக்கிய என்னுடைய வித்தியாசமான செயற்பாடுகளை அவர் உன்னிப்பாகக் கவனித்துவந்தார். இந்த வகையில்தான் 'மாற்றத்துக்கான விதையாக இவர் இருப்பார்' என்று நம்பி என்னைத் தேர்ந்தெடுத்தார், 'அர்ஜூன மூர்த்தி எனக்குக்கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்' எனவும் குறிப்பிட்டார் ரஜினிகாந்த்!''

''புதிய கட்சியை எப்படி கட்டமைக்கப்போகிறீர்கள்... கட்சியை நடத்துவதற்கான உங்களது பொருளாதாரப் பின்னணி என்ன?''

''அரசியல் என்பதே பணபலத்தின் பின்னணியில்தான் செயல்படமுடியும் என்றொரு ஐதீகத்தை இங்குள்ள திராவிடக் கட்சிகள் உருவாக்கி வைத்திருக்கின்றன. உண்மையில், அரசியலுக்கு பணம் தேவையே இல்லை. எல்லாவற்றையும் இப்போதே நான் விளக்கமாக சொல்லிவிட்டால், 'ஏன் இத்தனை கோடிகளை கொட்டிக்கொடுத்து வியூகம் வகுக்கிறோம்...' என்று இங்குள்ள 2 திராவிட கட்சிகளும் மிரண்டு போய்விடுவார்கள். எனவே, இந்த கேள்விக்கான என் பதிலை என்னுடைய வெற்றிக்குப் பிறகு தமிழக மக்களே தெரிந்துகொள்வார்கள்.''

கமல்ஹாசன் - சீமான்

''மாற்றத்தை நோக்கிய அரசியலை முன்வைக்கின்ற நாம் தமிழர், ம.நீ.ம கட்சிகளோடு கூட்டணி சேர்வீர்களா?''

''தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று உண்மையிலேயே ஆசைப்படுகிற கட்சிகள் எங்களோடு இணைந்துகொள்ளலாம். கண்டிப்பாக 3-வது அணிக்கான வித்தாக நான் இருப்பேன்.''

Also Read: ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் விஜயேந்திரருக்கு அனுமதி மறுப்பு - குருக்கள் தடுத்ததால் பதற்றம்!

''தமிழ்நாட்டில் உங்கள் கட்சி என்னவிதமான மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது?''

''உலகம் முழுவதும் நான் பயணப்பட்டிருக்கிறேன். இதில், தமிழ்நாட்டு மக்களிடம்தான் 'இயலாமை' என்றொரு குணம் அதிகளவில் இருக்கிறது. நம்மைவிடவும் பணம், பொருள் இல்லாமை மிகுந்த மாநிலத்தினர்கூட 'இது இயற்கையின் நியதி' என்று சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இங்கே மட்டும்தான் இல்லாமை என்பது மன வலியைக் கொடுக்கும் விஷயமாக இருக்கிறது.

ஒரு வயித்துப் புள்ளத்தாச்சி பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றால்கூட, ஸ்டாப்பை விட்டு 20 அடி தள்ளிப்போய் பஸ் நிற்கிறது. அவள் ஓடிப்போய்தான் அந்தப் பஸ்ஸில் ஏறியாகவேண்டும். இதேபோல், ஒரு மாணவன் நன்றாகப் படித்து மதிப்பெண் வாங்கியிருந்தாலும்கூட நல்ல கல்லூரியில் படிப்பதற்கு பணம் கொடுத்தாக வேண்டிய சூழல் நிலவுகிறது. சரியான நேரத்துக்கு பஸ் வராது, தண்ணீர் வராது, மின்சாரம் கிடைக்காது... இப்படி ஏராளமான இயலாமைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஆனால், மாநில அரசாங்கமோ மக்களின் ஆற்றாமைகளைப் போக்குவது இல்லை!''

நரேந்திர மோடி - அமித் ஷா

''மத்திய பா.ஜ.க அரசு, திட்டமிட்டு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மக்களின் இயலாமையை உறுதிப்படுத்துபோல் இருக்கிறதே...?''

''பா.ஜ.க அரசு செய்யவில்லை என்று சொல்வதே அரசியல் ரீதியான வார்த்தை. நாம் பேசவேண்டியது ஆட்சிமுறை பற்றித்தான். ஒரு 'வாடிக்கையாளரைக் கவரவேண்டுமானால், தொடர் முயற்சி செய்தல் வேண்டும்' என்பதுதான் ஒரு விற்பனைப் பிரதிநிதியாக என்னுடைய அனுபவம். அதாவது மாநில அரசு நிர்வாகம், போராட்டம் செய்தே மத்திய அரசு நிர்வாகத்தை நிர்பந்திக்க வேண்டும் என்று செயல்படுவது சரியல்ல... அது தேவையும் இல்லை!

நம்முடைய கோரிக்கைகளை சமாதானத்துடன் கூடிய வேண்டுகோளாக தொடர்ச்சியாக வைத்துக்கொண்டிருந்தால், நிச்சயம் அது நிறைவேறும். ஆனால், மத்திய அரசுடன் பேசுவதற்கான மொழியே நமக்குத் தெரியவில்லை என்பதால், நம் தேவையை அவர்களிடம் எப்படி எடுத்துவைப்பது என்பதும் தெரியவில்லை. எனவே, மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதோடு, செயற்திட்டத்தையும் சரிவர வகுத்து செயல்பட்டால் பிரச்னை தீர்ந்துவிடும்!''

Also Read: சென்னை: நிஜத்தில் நடந்த சதுரங்கவேட்டை - புகைப்படக் கலைஞர் கடத்தலில் அம்பலமான இரிடியம் மோசடி!

''ரஜினிகாந்த் பின்வாங்கிவிட்டதால், தற்போது அர்ஜூனமூர்த்தியை வைத்து பா.ஜ.க இயக்கிவருகிறது என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே...?''

''கடந்த டிசம்பர் 3-ம் தேதி, ரஜினிகாந்த் தன் அரசியல் கட்சி குறித்தான அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு கட்சியை டெக்னாலஜியாக வளர்த்தெடுப்பது, செயல்வடிவம் கொடுப்பது போன்ற பணிகளில் நான் பிஸியாகிவிட்டேன். எந்த மீடியாவுடனும் பேசவில்லை.

அர்ஜூனமூர்த்தி

'என்ன அர்ஜூன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்...' என்று ரஜினியே என்னிடம் கேட்டுவிட்டார். உடனே, 'நீங்கள் கட்சியின் பெயரை அறிவிப்பதற்குள், கட்சியை டெக்னாலஜியாக பலப்படுத்தவேண்டும். அதன்பிறகு கட்சியின் செயல்வடிவம் குறித்து நான் மீடியாவில் பேசுகிறேன் சார்...' என்று பதிலும் சொல்லிவிட்டேன். ஏனெனில், தமிழக மக்கள் மத்தியில் என்னை செயல்திறன் மிக்க ஒரு நபராக காட்டிக்கொள்ளவே நான் ஆசைப்பட்டேன். வெறும் பேச்சாற்றல் மிக்கவனாக என்னை நான் காட்டிக்கொள்ள விருப்பப்படவே இல்லை. ஏனெனில், இன்றைய தேவை ஆக்‌ஷன்தானே ஒழிய... பேச்சு இல்லை!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/i-trusted-rajinikanth-and-joined-him-but-explains-arjunamurthy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக