தி.மு.க ஆட்சி காலத்தில் 220 டெண்டர் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் தேர்தல் பரப்புரையில் பேசினார்.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மற்றும் சர்ச்சைக்குள்ளான மகாத்மா காந்தி சிலைகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், ``என்மீதும், என் அரசு மீதும் ஸ்டாலின் பொய்யான ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறார். துரைமுருகனை வைத்து ஆளுநரிடம் மீண்டும் ஒரு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து புகார் அளித்துள்ளனர். நான் தற்போது முதலமைச்சராக இருக்கிறேன். பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறேன். அந்த வகையில் கூறுகிறேன். துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, 220 டெண்டர்கள் முறைகேடாக விடப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களை வைத்திருக்கிறேன்.
Also Read: 70 ஆண்டுக்கால சிலை அகற்றம் ஏன்; கொதிக்கும் ஜோதிமணி - கரூரைக் கதிகலக்கும் `காந்தி சிலை’ அரசியல்
ஒரே நபருக்கு தொடர்ந்து பல டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகளுக்கு 210 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால், இறுதியாக ரூ. 410 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது ஊழல் இல்லையா?" என்று குற்றம்சாட்டினார்.
மேலும்,``என்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை என மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். நான் எப்போதும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று நினைத்ததில்லை. மக்கள்தான் என் முதலமைச்சர். ஸ்டாலின் காலை எழுந்தது முதல் தூங்கும் வரை, 'நான் தான் முதலமைச்சர் ' என பேசி வருகிறார் அவர் கனவில் கூட முதலமைச்சராக முடியாது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம், நான் ஊழல் செய்ததாக புகார் அளித்துள்ளார். அப்புகாரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட டெண்டரில் முறைகேடு என தெரிவித்துள்ளார்.
அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு, கடந்த மாதம் தான் மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. அதற்குள்ளே சாலை போடப்பட்டதாகவும், போடப்பட்ட சாலையில் ஊழல் நடந்திருப்பதாகவும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இது கடைந்தெடுத்த பொய். மிகப்பெரிய பொய். போடாத சாலையில் எப்படி ஊழல் செய்ய முடியும்? பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் என் மீது எந்த குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. வேண்டுமென்றே என் அரசு மீது ஸ்டாலின் பொய்யான ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். மக்களை நம்ப வைக்க வேண்டும் என்று தி.மு.க முயற்சிக்கிறது. அது ஒரு காலமும் நடக்காது” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/220-illegal-tenders-issued-in-dmk-period-accuses-edappadi-palanisamy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக