முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் உணவு தேடி வந்த எஸ்.ஐ என்ற பெயரில் அழைக்கப்படும் ஆண் காட்டு யானையின் மீது எரியும் தீப்பந்தத்தைத் தூக்கியெறிந்து சிலர் கொளுத்தினர். வனத்துறையினர் மேற்கொண்ட மீட்பு பணியின் போது அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.
யானையின் இறப்புக்கு காரணமாக இருந்த 3 பேரில் 2 நபர்களை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்கட்டமாக மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளை மூடுவதற்கான நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த பகுதிகளில் உலவும் யானைகளையும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மசினகுடி, வாழைத்தோட்டம், மாவனல்லா ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளைச் சுற்றி ஆண் காட்டு யானை ஒன்று உலவி வருகிறது. ரிவால்டோ என்ற பெயரில் உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த யானைக்கு தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்ற யானைகளைப் போல உணவு தேட முடியாமல் குறைபாட்டுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த யானைக்கும் அச்சுறுத்தல் இருக்கலாம் எனக் கருதிய வனத்துறையினர், இதைப் பிடித்து முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்குக் கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி ரிவால்டோ யானையைப் பிடிக்கும் பணியை வனத்துறையினர் நேற்று காலை துவக்கினர்.
காட்டு யானையைப் பிடிப்பதென்றால் இரண்டு மூன்று கும்கிகள், கால்நடை மருத்துவர்கள், யானையை ஏற்ற லாரிகள் என பல்வேறு முன்னேற்பாடுகள் இருக்கும்.
ஆனால் ரிவால்டோ யானையைப் பிடிக்க இரண்டு மூன்று தார் வாழை பழங்கள், தர்பூசணி, கரும்பு இவற்றைக் கொடுத்தே கால்நடையாக முகாமுக்கு அழைத்துச் செல்லும் பணியைத் துவக்கியுள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் நேற்று பேசிய வேட்டைத் தடுப்பு காவலர் ஒருவர், "இப்போ சுமார் நாப்பது நாப்பத்தஞ்சி வயசு இருக்கும். இந்த யானைக்கு சில ரிசார்ட் காரங்க சின்ன வயசுல இருந்தே சாப்பாடு கொடுத்து பழக்கப்படுத்திட்டாங்க. ஒரு பண்ணெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதோட தும்பிக்கைல காயம் ஏற்பட்டு விரல் மாதிரியான பகுதி இல்லாமலே போச்சி. இதனால பெரும்பாலும் சுலபமா கிடைக்கிற சாப்பாட்டை எதிர்பார்க்க ஆரம்பிச்சது.
காட்டேஜ் காரங்களும் இத காட்சி பொருளா மாத்தி காசு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதோட சுவாசப் பாதையும் அந்த காயத்துல பாதிச்சதால அதுலயும் சிரமப்பட்டு வருது. இத முகாமுக்கு கொண்டு போறதே நல்லதுன்னு சொன்னாங்க. யூனிஃபார்ம் போட்ட வனத்துறை ஆளுங்கள ஓரளவுக்கு நம்பி கிட்ட வரும். பழத்தையும் கரும்பையும் கொடுத்தே நடக்க வெச்சி கூட்டிட்டு போறோம். சுமார் 12 கிலோமீட்டர் நடை இருக்கு. நாளைக்கு முகாமுக்கு வந்துருமுன்னு நம்புறோம்" என்றார்.
நேற்று காலையில் நடையைத் தொடங்கி யானைக்கு இரவு மாவனல்லா பகுதியில் பசுந்தழைகள் வழங்கி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்று காலை மீண்டும் நடையைத் துவக்கியுள்ளனர். வழி நெடுக வனத்துறை ஊழியர்கள் கொடுக்கும் பழங்களைச் சுவைத்தபடியே நடந்து கொண்டிருக்கிறது. இன்று 5 கி.மீ தொலைவைக் கடந்துள்ள நிலையில், யானை தற்போது குறும்பர்பள்ளம் பகுதியில் உள்ளது. முகாமுக்கு இன்னும் 8 கி.மீ தொலைவு நடக்கவேண்டியுள்ளது.
source https://www.vikatan.com/news/environment/forest-dept-taken-wild-elephant-rivaldo-to-theppakadu-camp-with-fruits
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக