ஆஸ்திரேலியாவை வென்று உண்டாக்கிய பரபரப்பின் வெப்பம் தணிவதற்குள், அடுத்த சவாலாய், இந்தியா, இங்கிலாந்தை, தனது சொந்த மண்ணில் சந்திக்க இருக்கிறது. கொரோனா தடைக்காலத்துக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற இருக்கும் முதல் தொடர் என்பதால், இதன்மீது கூடுதல் வெளிச்சம் பாய்வதோடு, டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான பிரஷரும் கூடியிருக்கிறது.
சென்னை சேப்பாக்கத்தில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கயிருக்கும் நிலையில் சேப்பாக்கத்தில் நடந்த வரலாற்று சேஸிங்கின் நினைவலைகள் இங்கே!
சமீபத்தில், பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் 328 ரன் சேஸ் எந்தளவுக்கு விறுவிறுப்பாக இருந்ததோ அதே அளவு விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் 2008-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 387 ரன்களை சேஸ் செய்தது இந்தியா. அப்போது உலக அளவில் வெற்றிகரமான நான்காவது ரன் சேஸ் இது என்பதையும் தாண்டி இதற்கு ஒரு சரித்திர முக்கியத்துவமும் இருந்தது.
26/11, மும்பை தீவிரவாதிகள் தாக்குதல்... இந்த நேரத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டிகளின் மத்தியிலேயே, இங்கிலாந்துக்கு மீண்டும் திரும்பிவிட்டது. தாக்குதல் நடந்து இரண்டே வாரங்கள் கடந்திருந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொடரைத் தொடர்வதற்குச் சம்மதம் தெரிவித்து, டிசம்பரில் திரும்பி வந்து, முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவை எதிர்கொண்டது இங்கிலாந்து. இந்த முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாகத்தில் நடந்தது.
ஒட்டுமொத்த இந்தியர்களிடமும் அந்தத் தாக்குதல் தந்த அதிர்ச்சியின் வீரியம், முழுமையாய் விலகாத நிலையில்தான், இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது! முதல் மூன்று நாளும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்தின் கையை, கட்டிப் போட்டு, வெற்றியை இந்தியாவின் பேரில் பட்டையம் போட்டுத் தந்தது வேறு யாருமில்லை, சதங்களின் நாயகன் சச்சின் டெண்டுல்கர்தான்.
முதல் இன்னிங்ஸில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்ஸின் சதமும், குக்கின் அரை சதமும் வலு சேர்க்க, இந்தியாவின் தரப்பில் ஹர்பஜனும், அமித் மிஸ்ராவும் தலா மூன்று விக்கெட்டுகளுடன் நம்பிக்கை கூட்ட, 316 ரன்களைச் சேர்த்திருந்தது இங்கிலாந்து. இதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆட, துவக்க வீரர்கள் வழக்கம்போல சொதப்பினர். எனினும் சச்சின், தோனி, பேட்டிங்கிலும் பங்களிப்பாற்றிய ஹர்பஜனின் கட்டுக்கோப்பான ஆட்டத்தால், தட்டுத்தடுமாறி, 241 ரன்களை இந்தியா எட்டியது.
இதனைத் தொடர்ந்து 75 ரன்கள் முன்னிலையுடன், கம்பீரமாகத் தொடங்கிய இங்கிலாந்து கிட்டத்தட்ட ஒன்றரை நாள் ஆட்டம் இன்னும் இருந்த நிலையில், 311 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. முடிந்தால் எங்கள் பௌலிங் அட்டாக்கை மீறி 387 ரன்களைத் தொட்டு விடுங்கள் பார்ப்போம் என்பதுதான் இங்கிலாந்து இந்தியாவுக்கு விட்ட பகிரங்க சவால். அந்த சவாலை ஏற்றுக் களமிறங்கினார் கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின் டெண்டுல்கர்.
ஓப்பனர்களாக கம்பீரும், ஷேவாக்கும் களமிறங்கிய தருணம், எதிரணி வீரர்கள் யாரும் நினைத்திருக்கவே மாட்டார்கள். நூற்றாண்டுகள் பேசப்படப் போகும் இன்னிங்ஸை, இந்திய வீரர்கள் ஆடப் போகிறார்கள் என்று. சந்தித்த முதல் பந்திலிருந்தே இங்கிலாந்தை மிரட்ட முடிவு செய்த ஷேவாக், கொஞ்சமும் தயக்கமின்றி, பந்துகளை பாரபட்சமின்றி விளாசத் தொடங்கினார். எதிரணி எது, பௌலர்கள் யார் யார், ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்குமா, அணியின் மீதிருக்கும் அழுத்தம் என்ன... இப்படிப்பட்ட எதையுமே ஷேவாக் யோசிக்கத் தயாராகயில்லை.
எப்போதும்போல ஷேவாக்கின் பேட் மாயாஜாலம் காட்ட, பந்து அவர் சொன்னதை எல்லாம் செய்ய, ரன் மழை பொழிந்தது. இன்னொரு பக்கமோ, கம்பீர் நங்கூரமிட்டு நின்று நிதானமாக ஆட, அணியின் ஸ்கோர் ஒரே சீராக உயர்ந்தது!
இறுதியில், 122.05 ஸ்ட்ரைக் ரேட்டோடு, 68 பந்துகளில், 83 ரன்களைக் குவித்து, ஷேவாக் ஆட்டமிழந்து சென்று போது, பார்த்தது, டெஸ்ட் போட்டியா ஒருநாள் போட்டியா என்ற சந்தேகமே ரசிகர்களுக்கு எழுந்தது. அவர் அடித்த ரன்களில் 82 சதவிகிதம் ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களின் வழியாகவே வந்திருந்தது. 23 ஓவரில், அணியின் ஸ்கோரை 117 ரன்களுக்கு எடுத்துச் சென்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் ஷேவாக். இந்தியாவுக்குத் தன்னிகரில்லா ஓப்பனராக ஏன் கொண்டாடப்படுகிறார் என்பதற்கு அன்றும் அர்த்தம் கற்பித்து விட்டுச் சென்றிருந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த இந்தியப் பெருஞ்சுவர் டிராவிட்டுக்கு அன்றைய நாள், அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை! இறுதிநாளில், பாதிக்கிணறு கூடத் தாண்டப்படாத நிலையில், 141/2 என்பது அணியின் ஸ்கோராக இருக்கும் போது, கிரிக்கெட்டின் கடவுள் உள்ளே வந்தார். போராடி டிரா செய்யலாம், ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அணி வெல்ல வாய்ப்புண்டு என்று ரசிகர்கள் அங்கலாய்த்தனர்.
அதிசயத்தை நிகழ்த்துவது ஆண்டவருக்கு ஒன்றும் புதிதில்லையே... பல ஆண்டுகளாக இந்தியாவின் மொத்த பாரத்தையும் தன் ஒற்றைத் தோளில் சுமந்தவருக்கு, அதை மீண்டுமொரு முறை நிகழ்த்திக் காட்ட அன்று வாய்ப்புக் கிடைத்தது. பிளின்டாஃப் பந்தில் அவர் அடித்த முதல் பவுண்டரி அடிக்கோடிட்டுக் காட்டியது அன்று அவருடைய நோக்கம் என்னவென்பதனை. அதிகமான பவுண்டரிகள் பறக்கவில்லை. சிக்ஸர்கள் சிதறடிக்கப்படவில்லை. ஆனாலும் சத்தமில்லாமல் , இங்கிலாந்தின் பெளலிங் யூனிட்டைச் சிதைத்தார்.
உணவுநேர இடைவேளைக்கு சற்றுமுன் கம்பீரையும் அதற்குப்பின் லட்சுமணன் விக்கெட்டையும் இந்தியா இழக்க, யுவராஜ் சிங் உள்ளே வந்தார். குரு சிஷ்யன் இருவருமாய் இணைந்து, பைலட் இருக்கைகளில் அமர்ந்து இந்திய ஜெட் விமானத்தை முடுக்கி முன்னேற்றத் தொடங்கினர். 107 பந்துகளில் சச்சின் அரைச்சதத்தைத் தொட, மறுபுறம் யுவராஜும் உறுதுணையாய் நிற்க, பிசிரு பிசகின்றி செம்மையாய்த் தங்களது பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தது இந்தக் கூட்டணி.
எந்த ஒரு நொடியிலும் வெற்றி வசப்படுமா, அல்லது தோல்வியைத் தொட்டு விடுவோமா என்ற பயத்தின் நிழல்கூட இவர்களைத் தீண்டவில்லை. யுவராஜ் கொஞ்சம் நிதானமிழந்தபோது கூட அவரை வழிநடத்தி மறுபடியும், `பேக் டு த டிராக்' கொண்டு வந்து கொண்டிருந்தார் சச்சின். மான்ட்டி பனேசர் வீசிய பந்தை பெரிய ஷாட்டாக மாற்ற முயன்று யுவராஜ் சற்று தடுமாற, பந்து ஷார்ட் மிட் விக்கெட் மற்றும் லாங் ஆனுக்கு நடுவில் தரையிறங்கியது.
உடனே யுவராஜிடம், "நிதானமாக ஆடு... நாம் இருவரும் இறுதி வரை நிற்க வேண்டியது மிக முக்கியம்" என்றார் சச்சின். அதன்பின் யுவராஜும் கத்திமேல் நடைப்பயணமாக, தனது ஆட்டத்தைத் தொடர, இலக்கை நோக்கி வெற்றி நடை போட்டது இந்தியா.
கிட்டத்தட்ட ஒரு சிற்பி போல, தனது இன்னிங்ஸை வடிவமைத்து அதனுடன் சேர்த்து, இந்தியத் தேரையும் வெற்றி நோக்கி நகர்த்திய சச்சினைவிட வேறு யார் வின்னிங் ஷாட் அடிக்கத் தகுதியானவராக இருக்க முடியும்?! தனது பேட்டின் ஒவ்வொரு அசைவாலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருந்த அந்த மாமனிதர், இறுதியாக பவுண்டரியோடு வின்னிங் ஷாட்டை மட்டுமின்றி, தனது 41-வது சதத்தையும் பூர்த்தி செய்தார்.
துள்ளிக்குதித்து காற்றில் கரத்தால் குத்தி, குழந்தையாய் சச்சின் குதூகலிக்க, அவரைத் தாவி அணைத்துக் கொண்டு மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொண்டார் யுவராஜ். சச்சினின் உணர்வுப்பூர்வமான சதங்களில் இது மிக முக்கியமானது. சச்சின் 103 ரன்களுடனும், யுவராஜ் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஒருபுறம், இந்தியாவின் வெற்றி, அதுவும் மாஸ்டர் பிளாஸ்டரின் வின்னிங் ஷாட்டான பவுண்டரியுடன்! மறுபுறமோ, இறுதி இன்னிங்ஸ் சேஸிங்கில், இந்தியாவின் வெற்றி சச்சினின் சதத்தோடு அதுவரை சாத்தியப்பட்டதில்லை என்பதை மாற்றி எழுதியதற்காக ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
சச்சின் என்ற மந்திரம், மறுபடியுமொருமுறை இந்தியாவுக்கான வெற்றிக் குகையைத் திறக்கும் ஒற்றைச் சாவியானது. "இந்த சதம் மிகச் சிறப்பம்சம் வாய்ந்தது. பந்தைக் கணிக்க முடியாமல் நிலைதடுமாற வைத்த களத்தில், 387 ரன்களை நாங்கள் சேஸ் செய்திருப்பது சிறப்பானது. மும்பைத் தாக்குதலில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த அத்தனை பேருக்கும் துணையாய் நாங்கள் இருக்கிறோம்'' என்றார் சச்சின்.
- சேப்பாக்கம் நினைவதிர்வலைகள் தொடரும்!
source https://sports.vikatan.com/cricket/remembering-indias-epic-win-in-chennai-led-by-sachin-tendulkar-against-england
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக