Ad

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

மியான்மர்: ராணுவ புரட்சி... நாடாளுமன்ற சாலையில் ஆசிரியையின் உடற்பயிற்சி! - வைரல் வீடியோ

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட ராணுவ புரட்சி காரணமாக, அந்த நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு மியான்மரில் அடுத்த ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மியான்மரின் தலைநகரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிங் நின் வாய் (Khing Hnin Wai) என்ற 26 வயது இளம் பெண், உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதோடு, மியான்மர் கல்வி அமைச்சகத்திலும் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற வளாகத்தில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர், கடந்த 11 மாதங்களாகத் தான் உடற்பயிற்சி செய்வதை வீடியோவாக பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதே போன்று நேற்று முந்தினம் காலை கிங் நின் வாய் நாடாளுமன்ற வளாகத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். இந்தோனேசியாவின் "ஆம்புன் பேங் ஜாகோ" என்ற பிரபலமான பாடலுக்கு நடனமாடிக்கொண்டே, தனது உடற்பயிற்சியைச் செய்துகொண்டிருந்த போது தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் அவர் கவனிக்கவில்லை.

உடற்கல்வி ஆசிரியை கிங் நின் வாய்

உடற்பயிற்சி செய்யும் போது, அவருக்குப் பின்னால், காவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ஆயுதம் பொருத்திய வாகனங்கள் உட்பட பல்வேறு ராணுவ வாகனங்கள் அணிவகுத்து அந்த இடத்தைக் கடந்து செல்கிறது. மியான்மரில் தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில் நேற்று முந்தினம் முதல் நாடாளுமன்றம் கூட இருந்தது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் அவை கூடாது தடுத்து நிறுத்தி, நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய தறுவாயில் இந்த வீடியோ பதியப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

Also Read: `முக்கியத் தலைவர்கள் கைது; ஓராண்டுக்கு அவசரநிலை!’ மியான்மரில் ஆட்சியைக் கவிழ்த்த ராணுவம்

இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த கிங் நின் வாய், ``அந்த காலை மிகவும் இயல்பாகவே இருந்தது, நான் உடற்பயிற்சி செய்யும் போது ஹெலிகாப்டர்கள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் வாகனங்கள் செல்வதைக் கவனித்தேன். அங்கிருந்த காவலர்கள் என்னைப் பார்த்துப் புன்னகைத்துக் கடந்து சென்றனர்" என்று தனது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார். அதோடு அவர் முன்பு பதிவு செய்திருந்த உடற்பயிற்சி வீடியோக்களையும் சேர்த்துப் பகிர்ந்திருந்தார்.

கிங் நின் வாய், வீடியோ பகிர்ந்த சிலமணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலானது. உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கானோர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/international/video-of-a-teacher-who-exercised-during-the-military-coup-in-myanmar-goes-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக