மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களை கடந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. அரசுடன் நடத்தப்பட்ட 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளும்ம் தோல்வியடைந்திருக்கும் நிலையில், `குடியரசுத் தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஊடுருவிய சிலர் கலவரத்தை ஏற்படுத்தினர்’ என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காயம்பட்ட காவலர்கள் சிலரும், `தங்களைத் தாக்கியது விவசாயிகள் அல்ல’ எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கலவரத்தில் 400-க்கும் அதிகமான காவல்துறையினர் காயமடைந்தனர்.
நாளுக்கு நாள் வலுவடைந்துவரும் போராட்டத்தை விவசாயிகள் மேலும் தீவிரப்படுத்த முடிவுசெய்திருக்கின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் டெல்லியின் மூன்று எல்லைகளிலும் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு அதிக அளவில் விவசாயிகள் குவிந்துவருகிறார்கள். போராட்டத்தை முடித்துவைத்து, விவசாயிகளைக் கலைத்துவிட வேண்டும் என்பதில் காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.
குடியரசு தினத்தன்று நடைபெற்றது போன்ற மற்றொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதில் காவல்துறையினர் உறுதியாக இருக்கின்றனர். அதற்காகப் பலகட்ட முன்னேற்பாடுகளைச் செய்துவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, தடுப்புகளைக் கொண்டு பலத்த பாதுகாப்புகளை ஏற்படுத்திவருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், சிமென்ட் கொண்டு சாலைகளில் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்திவருகின்றனர். இந்தச் சுவர்கள் எளிதில் உடைக்க முடியாத வண்ணம் கூடுதல் கான்கிரீட் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தடுப்புகளுக்குப் பின்பகுதிகளில் சாலைகளில் ஆணிகளைக்கொண்டு வாகனங்கள் எதுவும் செல்லாத வண்ணமும் தடுப்புகளைக் காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர். அதிகப்படியான கூட்டம் கூடுவதாலும், போலீஸாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் டெல்லியின் எல்லையில் பதற்றம் தொடர்கிறது!
source https://www.vikatan.com/government-and-politics/politics/concrete-barricade-and-barrier-wall-with-nails-made-on-the-delhi-border
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக