மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகிலுள்ள டோம்பிவலியில் வசிப்பவர் பாலிராம் பாட்டீல் (84). முன்கோபக்கராரான இவருக்கும், இவர் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு. இவருடைய மனைவியும் கணவர் முன்கோபக்காரர் என்பதால், அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருந்ததாகச் சொல்கிறார்கள். நேற்று அதிகாலையில் பாலிராம் தனது மனைவி பார்வதியுடன் (80) வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதில் கோபத்தின் உச்சிக்கே சென்ற பாலிராம், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியைச் சரமாரியாகக் குத்தியிருக்கிறார். இதில், பார்வதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்திருக்கிறார். கொலையை மறைக்க பாலிராம், தனது மனைவியின் உடலில் தீவைத்துவிட்டுச் தப்பிச் சென்றிருக்கிறார்.
காலையில் பாலிராமின் மகன் ரமாகாந்தின் மனைவி எழுந்தபோது மாமனார் அறையிலிருந்து புகை வருவதைப் பார்த்திருக்கிறார். கதவைத் திறந்து பார்த்தபோது பார்வதி தீயில் பாதி எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்திருக்கிறார். உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயம் இருந்தது. இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து பார்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதேநேரம் வீட்டில் பாலிராம் இல்லை. அவரைத் தேடியபோது பக்கத்து வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது கோபத்தில் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
வழக்கை விசாரிக்கும் மான்பாடா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சவுரே இது குறித்துக் கூறுகையில், ``பாலிராம் முன்கோபத்தில் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டையிட்டுவந்திருக்கிறார். இதேபோல்தான் சம்பவத்தன்று ஏற்பட்ட சண்டையில் பாலிராம் கோபத்தில் மனைவியைக் கத்தியால் குத்தியிருக்கிறார். அவர் இறந்த பின்னர், தீவிபத்தில் இறந்ததுபோலக் காட்ட, மனைவிக்குத் தீவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.
Also Read: குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை - காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்!
பாலிராம் மகன் ரமாகாந்திடம் இது குறித்துக் கேட்டதற்கு, ``எனது தந்தை மிகவும் கோபக்காரர்தான். ஆனால், கொலை செய்யும் அளவுக்குச் செல்வார் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை’’ என்று தெரிவித்தார். ரமாகாந்த் கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர்.
source https://www.vikatan.com/social-affairs/crime/84-year-old-husband-kills-80-year-old-wife-and-set-her-ablaze-near-mumbai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக