Ad

திங்கள், 22 பிப்ரவரி, 2021

திருவள்ளூர்: ரெய்டில் சிக்கிய 18,550 லிட்டர் எரிசாராயம்! - கடத்தல் கும்பலை வளைத்த போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் அருகே டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்தப்பட்டு வருவதாகச் சென்னை மாநகர மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து , டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் வெங்கல் பகுதிக்குச் சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று போலீஸாரைக் கண்டவுடன் திரும்பி வேறு வழியாகச் செல்ல முயன்றுள்ளது. திரும்பித் தப்பிக்க முயன்ற காரை போலீஸார் தடுத்து நிறுத்தி அதில் இருந்தவர்களை கீழே இறக்கி விசாரித்தனர். அப்போது, காரில் இருந்தவர்கள் முன்னுக்கு முரணாகப் பதிலளித்தால் சந்தேகமடைந்த போலீஸார் காரை பறிமுதல் செய்து அனைவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

காவல்துறை வாகன சோதனை

விசாரணையில், காரில் இருந்தவர்கள் அனைவரும் காரணி பாட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான குடோன் ஒன்றினை வாடகைக்கு எடுத்து அதில் எரிசாராயம் வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, போலீஸார் அம்பத்தூரைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 34), கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (33), சென்னை ராயபுரத்தை சேர்ந்த ஆரிஸ் (42), திருவொற்றியூரைச் சேர்ந்த ரவி (38), திருமுல்லைவாயலை சேர்ந்த மதன் (41), மற்றும் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்த பாபு (34) ஆகிய 6 பேரை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் காரணி பாட்டை பகுதியில் பக்தவச்சலம் என்பவருக்குச் சொந்தமான சேமிப்பு குடோனைச் சோதனையிட்டனர். அப்போது, குடோனில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 530 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18, 550 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், எரிசாராய கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கைது

சம்பவம் குறித்து வெங்கல் போலீஸாரிடம் பேசினோம். ``சென்னையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் கூட்டாக இந்த கடத்தலைச் செய்து வந்துள்ளனர். தனியாருக்குச் சொந்தமான அந்த குடோனில் டேங்கர் லாரிகள் மூலம் மொத்தமாக எரிசாராயத்தை கொண்டு வந்து இருப்பு வைத்துக்கொண்டு, அங்கிருந்து சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப சப்ளை செய்து வந்துள்ளனர். கடத்தல் கும்பலுக்கு குடோனை வாடகைக்கு விட்ட குடோன் உரிமையாளர் பக்தவச்சலம் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். இந்த எரிசாராயம் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆலைகளிலிருந்து கொண்டுவரப்பட்டதா... இல்லை, அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டதா என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/police-seized-18550-litres-of-spirit-in-tiruvallur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக