வைரஸ் முதன்முதலில் பரவத்தொடங்கிய சீனாவிலிருந்து மற்றொரு சர்ச்சை மிகுந்த விஷயம் கிளம்பியிருக்கிறது. ஆசனவாயில் கோவிட்-19 தொற்றைக் கண்டறிவதற்கான புதிய பரிசோதனை முறையை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுவாக மூக்கு துவாரம் மற்றும் தொண்டைப் பகுதியில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர் என்ற பரிசோதனை செய்யப்படும். கோவிட் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடி உடலில் உருவாகிவிட்டதா என்பதைக் கண்டறிவதற்கான ரேபிட் டெஸ்ட்டுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும்.
அதேபோல இதிலும் பரிசோதிக்கப்படும் நபரின் ஆசனவாயில் 1.2 - 2 இன்ச் தூரம் ஒரு ஸ்வாபை நுழைத்து மாதிரி சேரிக்கப்படும். அதை வழக்கமான ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் பரிசோதிக்கின்றனர். இந்தப் பரிசோதனை அந்நாட்டு மக்களிடையை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விமர்சனங்களும் எழுந்துகொண்டிருக்கின்றன. அந்நாட்டு அரசு தரப்பிலோ மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியைக் காட்டிலும் ஆசனவாயில் வைரஸ் தொற்று இருப்பதை மிகவும் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது.
மேலும் மூக்கு, தொண்டைப் பகுதியைக் காட்டிலும் ஜீரணப் பாதை மற்றும் மனிதக் கழிவுகளில் சேகரிக்கப்படும் மாதிரிகளில் வைரஸ் அதிக நேரம் நீடிக்கிறது. இது கோவிட்-19 தொற்று பாதித்த நபர்கள் விடுபடுவதைத் தடுக்கும். எனினும் அதிக ஆபத்தான வகையினருக்கே இந்த வகையான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அசௌகரியமாக உணர்வதால் அனைத்து நபர்களும் இந்த வகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
வைரல் வீடியோ!
இந்த புதிய வகையான கோவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டவர்கள் பென்குயின் போன்று அசௌகரியமாக நடந்து வருவதைப் போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆசனவாய் பரிசோதனையை மேற்கொள்பவர்கள் இதுபோன்றுதான் நடக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அந்த வீடியோ பல மில்லியன் வியூஸையும் பெற்றுள்ளது.
இதற்கு சீன அரசு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அந்த வீடியோவில் காணப்படுபவர்கள் உண்மையிலேயே ஆசனவாய் பரிசோதனை செய்துகொண்டவர்கள் கிடையாது.
பென்குயின் நடப்பது போன்று நடக்கச் சொல்லி ரெக்கார்டு செய்யப்பட்டு, பரிசோதனையின் விளைவாகவே இப்படி நடப்பதாக குறிப்பிட்டு பரப்பப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு பரப்பப்பட்ட போலியான வீடியோ. பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் என்றும் இதுபோன்று போலியான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
சீனா பின்பற்றும் இந்த வகையான பரிசோதனை உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்நாட்டு அதிகாரிகள் கூறுவது போன்று ஆசனவாய் கோவிட்-19 பரிசோதனை அவசியமானதா என்று தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதனிடம் கேட்டோம்:
``கோவிட்-19 பரிசோதனை இரண்டு காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது. ஒன்று, அந்த நபருக்கு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு. அடுத்ததாக, அந்த நபரிடமிருந்து அடுத்தவருக்குப் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு. யாரிடத்தில் வைரஸின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ, யாருக்கு உடலில் அதிக இடத்தில் வைரஸ் பரவல் இருக்கிறதோ அவர்களிடமிருந்து அடுத்தவர்களுக்குப் பரவுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.
தொற்றால் பாதிக்கப்படும் அனைவருக்குமே மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் வைரஸ் காணப்படும். ஆனால் குடல் மற்றும் ஆசனவாய்ப் பகுதியில் வைரஸ் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வைரஸ் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். மூக்கு, தொண்டைப் பகுதியில் இல்லாமல் குடல் பகுதியில் மட்டும் வைரஸ் காணப்படுவதற்கு வாய்ப்பில்லை.
மேலும் தற்போது பரவும் உரு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் குறைவான எண்ணிக்கையிலிருந்தாலே அடுத்தவர்களுக்கு எளிதாகப் பரவும் தன்மை கொண்டது. அப்படியிருக்கும்போது ஆசனவாயில் பரிசோதனை செய்துதான் வைரஸ் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டிய தேவையும் இல்லை. வேறு எந்த நாடும் இந்த முறையைப் பின்பற்றவில்லை. தொற்று இருப்பதைக் கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையும் அதன் தீவிரத்தைக் கணிக்க சி.டி. ஸ்கேன் பரிசோதனையுமே போதுமானது" என்றார் அவர்.
Also Read: கோவிட்-19: ஐந்தில் ஒருவருக்கு மனநல பாதிப்புகள் ஏற்படலாம்... எப்படி எதிர்கொள்வது?
எண்ணிக்கையைக் குறைக்கும்!
வேறு வழியே இல்லாதபோது இதுபோன்ற பரிசோதனை முறைகளுக்குப் போவதில் தவறில்லை. ஆனால் திறன் வாய்ந்த பிற பரிசோதனை முறைகள் இருக்கும்போது இதுபோன்று பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் பரிசோதனை முறைகள் தேவைதானா என்பதைச் சிந்திக்க வேண்டும். இதுபோன்ற பரிசோதனை முறையை விரும்பாதவர்கள் அதைத் தவிர்க்கவே செய்வார்கள். அதனால் பரிசோதனை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறையும். நோய்ப் பரவலைக் குறைப்பது சிக்கலாக மாறும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
source https://www.vikatan.com/health/healthy/why-china-doing-anal-swab-covid-19-test-and-its-issues
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக