Ad

திங்கள், 22 பிப்ரவரி, 2021

முதலமைச்சர் விழாவில் கலந்துகொண்ட 38 பேருக்கு வாந்தி, பேதி! -காலம் கடந்து சாப்பிட்டதால் விபரீதம்?

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில், விவசாயிகளின் 100 ஆண்டுக்கால கனவுத் திட்டமான காவிரி-வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா தமிழக அரசு சார்பில் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு இதனை தொடங்கி வைத்தனர். இதற்காக விராலிமலை அருகே குன்னத்தூரில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்தநிலையில், 22-ம் தேதி திருநல்லூர், கலர்பட்டி, ஆச்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெண்கள்ராஜேஸ்வரி (34). சத்தியா(25), தேன்மொழி(1), வள்ளிக்கண்ணு(40) உட்பட 38 பேர் ஒரே நேரத்தில் வயிற்றுப் போக்கு, வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர்.

விழா

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் திருநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர். இவர்கள் அனைவரும் முதலமைச்சர் கலந்துகொண்ட விழாவுக்குச் சென்று வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மதிய உணவாக முட்டை, புளியோதரை, லெமன் சாதம் உள்ளிட்ட உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உணவினை பலரும் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கும் வாங்கி வந்து காலதாமதமாகவும் சாப்பிட்டதால், ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியின் கணவர் கூறுகையில், ``முதல்வர் விழா வரவேற்பிற்காக, மனைவி போனாங்க. சாயந்திரத்திலிருந்து, ரொம்ப சுணக்கமா இருந்துச்சு. நைட் எல்லாம் தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்துச்சு. என்ன சாப்பிட்டன்னு கேட்டப்ப, கூட்டத்தில், முட்டை,லெமன் சாதம் சாப்பிட்டதா சொன்னாங்க. இன்னைக்கு மதியத்துக்கு மேல சுத்தமா எழுந்து நடக்கக் கூட முடியலை. உடனே 108 மூலம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போனோம். அதற்கப்புறம் தான் தெரியும், என் மனைவி மாதிரி பலரும் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு. குளுக்கோஸ் எல்லாம் போட்டுருக்காங்க. இப்ப கொஞ்சம் நல்லா இருக்காங்க" என்றார்.

மருத்துவமனை

இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது,``புளியோதரை சாப்பாட்டினை காலம் கடந்து சாப்பிட்டதால், உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, சிறு, சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. எல்லாம் தற்போது நலமுடன் உள்ளனர்"என்று முடித்துக்கொண்டனர்.



source https://www.vikatan.com/news/politics/38-people-unwell-after-taking-food-from-cm-function-in-viralimalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக