Ad

திங்கள், 22 பிப்ரவரி, 2021

முன்பகையா... அரசியல் காரணமா? - அ.தி.மு.க பிரமுகர் கொலையால் அதிர்ந்த முத்துப்பேட்டை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் கோயில் திருவிழாவில் ஒன்றில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக இக்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது அரசியல் பகை காரணமாக, கொலை செய்யப்பட்டரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவத்தைத் தொடர்ந்து வேறு ஏதேனும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முத்துப்பேட்டை [கோப்பு படம்]

முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு, ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தன்னை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில், நேற்று காலை கோவிலூரில் உள்ள தனது வீட்டில் இருந்து, இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டைக்குச் செல்வதற்காகக் கிளம்பியிருக்கிறார்.

அவரை நோட்டமிட்டு பின் தொடர்ந்த ஒரு கும்பல், ஆலங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை அருகில் இவரை கொலை செய்ய பயங்கர ஆயுதங்களுடன் முயற்சித்திருக்கிறது. அவர்களிடமிருந்து தப்பி ஓடிய ராஜேஷ், அருகில் உள்ள கருவக்காட்டுக்குள் சென்றிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட ராஜேஷ்

அவரை விரட்டிச் சென்ற கொலைவெறிக் கும்பல், ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி, தலையை தனியாக துண்டித்ததோடு, பல கிலோமீட்டர் தூரம் அதனை எடுத்துச் சென்று முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் வீசிச் சென்றிருக்கின்றனர். மனித தலை ஒன்று துண்டிக்கப்பட்டுக் கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஃப்ளக்ஸ் வைத்தது தொடர்பாக, பிரச்னை எழுந்திருக்கிறது. அதனை தொடர்ந்து இரு தரப்பிலும் மோதல் தொடர்ந்திருக்கிறது. இரு தரப்பினரும் மாற்றி மாற்றி கொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக ராஜேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: தென்காசி: பேத்தியுடன் மூதாட்டி கொடூரக் கொலை; 40 நாள்களுக்குப் பின் 5 பேர் கைது! என்ன நடந்தது?

அதேசமயம் அரசியல் பகை, பணம் கொடுக்கல் - வாங்கல் உள்ளிட்ட வேறு காரணங்களால் இக்கொலை நடந்திருக்குமா எனவும் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜேஷின் உடல், பிரேத பரிசோதனைக்காக, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/admk-councilor-murdered-in-muthupettai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக