நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான சீகூர் பீடபூமி பகுதியின் வன காவலாராகப் பணியாற்றி வந்தவர் பசுவன். இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அடர்ந்த காடுகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்தார்.
அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகளின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வந்தார். சுமார் 56 வயது மதிக்கத்தக்க இவர் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
பழங்குடியான இவர், தங்களின் பாரம்பர்ய வன அறிவையும் புரிதலையும் காட்டுயிர் பாதுகாப்புக்குப் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர். இவரது இழப்பு வனத்துறைக்கு மட்டுமல்ல சீகூர் பீடபூமிக்கான பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
இவரது இழப்பு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர் ஒருவர், "பசுவனுக்கு எல்ல வெவரமும் தெரியுமுங்க. அவன நம்பி யார் வேணுமானாலும் காட்டுக்குள்ள போகலாம். எந்த எடத்துல எது இருக்கும்னு, இந்த காடே அத்துப்படிங்க அவனுக்கு. கல்யாணம் எதும் செஞ்சிக்கல. வேட்டைத்தடுப்பு முகாம்ல தங்கிக்குவார். புதுசா வந்த பசங்களுக்கு இவர்தாங்க ரோல் மாடல். காட்டுக்குள்ள நம்ம உயிர எப்படி காப்பாத்திக்கணும்னு சொல்லுவார்" என பசுவன் குறித்து அடுக்கிக்கொண்டே இருந்தார்.
முதுமலைப் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல இணை இயக்குநர் ஸ்ரீகாந்த், "1988-ல் வனத்துறையில் தோட்டக் காவலராகப் பணியில் சேர்ந்த இவர்,வேட்டைத் தடுப்பு காவலராக இருந்து, பின்னர் நிரந்தர வனக்காவலராக உயர்ந்தார். கடந்த 33 ஆண்டுகளாக சீகூர் பகுதிக்கு இவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அதிலும் குறிப்பாக, பாறு கழுகுகளை பாதுகாப்பதில் முன்னோடியாக இருந்தார்.
சீகூர் பகுதியில் ஒரு முறை பாறு கழுகு குஞ்சுகள் அதன் கூட்டில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடி வந்தன. இதைப் பார்த்த பசுவன், அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டு பாறு கழுகின் கூட்டை தத்ரூபமாக வடிவமைத்தார். அதில் குஞ்சுகளை வைத்து பராமரித்து, அவை சிறகு முளைத்து பறக்கும் வரை நல்ல முறையில் பராமரித்துக் கொண்டார். இந்த நிலப்பரப்பையும், இங்கு வாழும் உயிரினங்களையும் நன்கு அறிந்து வைத்திருந்தார். இவரது இழப்பு சீகூருக்கான பேரிழப்பு. வனத்துறையின் சார்பில் பசுவனுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும்" என நினைவுகளை பகிர்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/environment/nilgiris-forest-department-in-grief-because-of-basuvan-demise
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக