Ad

புதன், 3 பிப்ரவரி, 2021

சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! #SirTomMoore

கேப்டன் சர் டாம் மூரின் நினைவாக நாளை சென்னை டெஸ்ட்டில் கறுப்பை பட்டை அணிந்தபடி இங்கிலாந்து வீரர்கள் விளையாடயிருக்கிறார்கள். உலகமே கொண்டாடும் இந்த டாம் மூர் யார்?

2020 கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரம்... உலகமே வெறிச்சோடி மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த போது அந்த 100 வயது இளைஞன் துணிச்சலாக வெளியே இறங்கினார். இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் உயிரை பணயம் வைத்து, களத்தில் போராடிய மருத்துவ வீரர்களுக்காக நிதி திரட்ட தீர்மானித்தார் டாம் மூர். அறுபது வயது தாண்டினாலே மூட்டு வலி, முட்டி வலி என மூலையில் முடங்கிப்போகும் மக்கள் மத்தியில், வயதானாலும் அந்த துணிச்சலும் மிடுக்கும் கொஞ்சமும் குறையாமல் களத்தில் இறங்கினார் கேப்டன் சர் டாம் மூர். கடந்த ஆண்டு அதாவது ஏப்ரல் 6,2020 அவருக்கு 100 வயது. நூறாவது பிறந்தநாளுக்குள் 1,000 பவுண்ட் நிதி திரட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது வீட்டு தோட்டத்தில் நூறு சுற்றுக்கள் நடக்க முடிவு செய்தார். இதன்பிறகு நடந்தது எல்லாமே அதிசயங்களும், அற்புதங்களும்தான்!

முதலில் அக்கம்பக்கத்து வீட்டினரின் கவனத்தை ஈர்த்த இவரது நடை பின் படிப்படியாக இங்கிலாந்து மக்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகையும் கவனிக்கவைத்தது. நூறு ஆயிரமாகி, ஆயிரம் லட்சமானது. 1000 பவுண்ட் நிதி திரட்ட முடிவெடுத்து நடந்தவருக்கு 39 மில்லியன் பவுண்ட், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 387 கோடி ரூபாய் நிதி திரண்டது. வயதில் சதம் அடித்த இந்த தாத்தாவின் கோரிக்கைக்காக பணம் உலகம் முழுவதும் இருந்தும் வந்து குவிந்தது.

சர் டாம் மூர்

முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான கேப்டன் டாம், இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு மூத்த அதிகாரியாக இந்தியாவிலும், பர்மாவிலும் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் டியூக் ஆஃப் வெலிங்டன் ரெஜிமென்ட் (Duke of Wellington's Regiment)-ல் சேர்ந்தார். பின்னர் 1940-ம் ஆண்டில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1941-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி இரண்டாவது லெஃப்டினென்ட்டாக நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் இந்தியாவில் 9வது பட்டாலியன் படைக்கு (9 டி.டபிள்யூ.ஆர்) மாற்றப்பட்டு ஆரம்பத்தில் மும்பைக்கும் பின்னர் கொல்கத்தாவுக்கும் அனுப்பப்பட்டார். அக்டோபர் 1, 1942இல் போர்- லெஃப்டினென்ட்டாகவும், அக்டோபர் 11, 1944-ல் தற்காலிக கேப்டனாகவும் பதவி உயர்வு பெற்றார். அவர் அப்போது பர்மா என்று அழைக்கப்பட்ட மேற்கு மியான்மாரின் அரக்கனிலும் (Arakan) பணியாற்றினார். பிரிட்டிஷ் ராணுவத்திடம் ஜப்பான் சரணடைந்த பின்னர் சுமத்ராவில் பணியாற்றிய போது கேப்டனாக பதவி உயர்த்தப்பட்டார்.

என்ற பிரபலமான கூற்று ஒன்று உள்ளது. கோவிட் -19 நோய் தொற்றின் போது, பதற்றத்திலும், பயத்திலும் மக்கள் உறைந்து நின்ற போது, கேப்டன் டாம் “இது ஒரு யுத்த காலத்தை போன்ற சூழல். இதில் முதல் களத்தில் நின்று போரிடும் வீரர்களான மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களுக்கும், பின் வரிசையில் நிற்கும் நாம் தகுந்த ஆயுதங்களை வழங்க வேண்டும். அதற்கான எனது முயற்சியாக £1,000 நிதி திரட்டும் பொருட்டு, எனது தோட்டத்தில் நூறு சுற்றுக்கள் நடக்கப் போகிறேன்” என செம துணிச்சலோடு அறிவித்தார்.

இந்த அசாத்திய முயற்சி மூலம் கேப்டன் டாம் மூர் இங்கிலாந்து வீடுகளின் செல்லப் பெயரானது. எம்ஜிஆர் ஸ்டைலில் 'நாளை நமதே' என்கிற இவரது  'Tomorrow will be a good day' சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. ஜூலை மாதம் விண்ட்சர் கோட்டையில் (Windsor Castle) நடந்த ஒரு சிறப்பு விழாவில் இங்கிலாந்து மகாராணியால் (knighted) கௌரவிக்கப்பட்டார்.

டாம் மூர்

மைக்கேல் பாலுடன் (Michael Ball) இணைந்து தனது 99 வயதில் கேப்டன் மூர் பாடிய You'll Never Walk Alone என்ற ஆல்பமானது விற்பனையில் சக்கை போடு போட்டது. இதன் வருமானமும் அதே தொண்டுக்கே பின்னர் வழங்கப்பட்டது.

அவரது 100-வது பிறந்தநாளில், உலகெங்கிலும் உள்ள அவரது அபிமானிகள் வாழ்த்து மழையால் நனைத்து விட்டனர். சரமாரியாக வந்து குவிந்த 1000க்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகளோடு, இங்கிலாந்து ராணி மற்றும் பிரதமரிடமிருந்தும் வாழ்த்துக்களைப் பெற்றார். அத்தோடு அவர் இரண்டாம் உலகப் போரின்போது பணியாற்றிய '1-வது பட்டாலியன் தி யார்க்ஷயர் ரெஜிமென்ட்'டால் (1st Battalion The Yorkshire Regiment) கெளரவ கர்னலாகவும் பதவி உயர்த்தப்பட்டார்.

ஏற்கெனவே கேன்சர் உள்பட பல நோய்களால் அவதிப்பட்ட கேப்டன் மூர், சென்ற வாரம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இங்கிலாந்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் அவருக்கு கொரோனா தடுப்பூசி போட முடியவில்லை. மூச்சு திணறலால் அவதிப்பட்ட கேப்டன் டாம் மூர், இரண்டு நாட்களுக்கு முன்னர் (02-02-2021) உயிரிழந்தார்.

"எங்கள் தந்தை வாழ்க்கையின் கடைசி ஆண்டு குறிப்பிடத்தக்கது. அவர் மீண்டும் புத்துயிர் பெற்றார். இதுவரை கனவிலும் காணாத சந்தோஷங்களை அனுபவித்தார். ஒரு குறுகிய காலத்திற்குள் பல இதயங்களில் இடம் பிடித்து விட்டார். எம் இதயங்களில் என்றென்றும் உயிரோடு இருப்பார்" என அவரது மகள்கள் உருக்கமாகப் பேசியிருக்கிறார்கள்.

இங்கலாந்து பிரதமரின் வீட்டு முன் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது. இங்கிலாந்தின் வெம்பிலி ஸ்டேடியம், பிளக்பூல் டவர், லண்டன் ஐ, பிக்கடலி சர்கிள் போன்ற பல இடங்களில் கேப்டன் மூரின் உருவம் தாங்கிய விளக்குகள் அணையாது ஒளிர்ந்து தம் அஞ்சலியை மௌனமாக செலுத்திக்கொண்டிருக்கின்றன.

சில நேரங்களில் சிறிய வெற்றிகளும் பெரிய இதயங்களும் வரலாற்றின் போக்கையே மாற்றும் என்பார்கள். அதே போல கேப்டன் டாம் மூரின் இந்த சிறிய வெற்றிக்கு, பல பெரிய இதயங்கள் செய்த பங்களிப்பு, கொரோனா எனும் இருண்ட பக்கங்களில் ஒரு பசுமையான நிறத்தை தீட்டிச் சென்றுள்ளது!



source https://sports.vikatan.com/cricket/england-cricketers-to-wear-black-armband-at-chennai-test-in-memory-of-sir-tom-moore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக