Ad

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

`₹12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,000 கோடிதான் ஒதுக்கீடா?' - பட்ஜெட் குறித்து விவசாயிகள்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்க செய்த நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகள் விவசாயிகளுக்கு எந்தளவிற்கு பலன் அளிக்கும்?

இதுகுறித்து இவர்கள் என்ன நினைக்கிறார்கள்.

விவசாய நிலம்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து, வேளாண்மைத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ‘’பயிர்கடன் தள்ளுபடிக்காக 5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இது தவிர வேளாண் துறைக்கு 11,982 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்பாசனத்திற்கு 6,453 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கி விவசாய பயிர்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

இந்த அறிவிப்புகள் குறித்து நம்மிடம் விரிவாக பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச்செயலாளர் சுகுமாறன், ‘’இயற்கை பேரிடர் நிவாரண தொகையை 13,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக உயர்த்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கூடியதாகும். இது விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமானது. ஆனால் இன்னும் பல முக்கியமான அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். குறிப்பாக விவசாயத்திற்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்னு சில நாள்களுக்கு முன்பு அரசு நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் தான் மும்முணை மின்சார கிடைப்பது உத்தரவாதப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து பல லட்சம் விவசாயிகள் காத்திருக்கிறார்கள். புதிய மின் இணைப்பு குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக, பட்ஜெட்டில் உரையில் சொல்லப்பட்டுள்ளது, குடிமராமத்து திட்டத்தால் விவசாயிகளுக்கு ஆக்கப்பூர்வமாக முழுமையான பயன் கிடைப்பதில்லை.

ஓ.பன்னீர் செல்வம்

ஆளுங்கட்சியினர் பணம் சம்பாதிப்பதற்குதான் இது பயன்படுகிறது. குடிமராமத்து பணிகளும் பெரும்பாலும் நேர்மையாக நடைபெறுவதில்லை. இதற்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி சுருட்டப்படுகிறது. நீர்பாசனத்திட்டங்களுக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனால் டெல்டா விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. மேட்டூர் அணையிலிருந்து, விதிமுறைகளுக்கு புறம்பாக, சேலத்திற்கு தண்ணீர் கொண்டு போக கூடிய சாரபங்கா உபரிநீர், காவிரி-குண்டாறு இணை திட்டம் ஆகியவைகளுக்குதான் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

காவிரியில் வெள்ளக்காலங்களில் உபரிநீரை தேக்கி வைக்க, கதவணைகள் அமைக்கப்பட வேண்டும் என டெல்டா விவசாயிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கால்நடைகளுக்கு நடமாடும் அம்மா அவசர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேவையில்லாத ஒன்று. இதெல்லாம் பெயரளவுக்குதான் செயல்படும். விவசாயிகளுக்கு உதவாது.

ஏற்கனவே 1962 என்ற அவசர அழைப்பு எண்ணோடு கால்நடை ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறையில் உள்ளது.அதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு ஏதேனும் ஆபத்து என ஃபோன் செய்தால், கால்நடை ஆம்புலன்ஸ் வருவதே இல்லை. ஏற்கனவே நடையில் உள்ள அந்த திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தினாலே போதும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போதைய இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில், வேளாண் துறைக்கு 11,982 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்களை எப்படி செயல்படுத்தப்போகிறார்கள். இந்த ஆட்சி முடியப்போகிறது. இன்னும் சில வாரங்களே மிச்சமிருக்கின்றன. இவ்வளவு நாள்கள் சும்மா இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் இவைகளை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன.விவசாயிகளின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, கண்துடைப்பாக, கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.’’என தெரிவித்தார்.

விவசாயம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன் ‘’கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு வங்கிகள் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும். கூட்டுறவு வங்கிகள், நபார்டு வங்கியில் வாங்கியுள்ள கடனை முழுமையாக திருப்பி செலுத்தினால்தான் மீண்டும் புதிய கடன் வாங்க முடியும்.

அந்த தொகையை கொண்டு கூட்டுறவு வங்கிகள், இனிவரும் குறுவை, சம்பா பட்டத்திற்கு, விவசாயிகளுக்கு புதிய பயிர்க் கடன் கொடுக்க முடியும். தள்ளுபடி செய்யப்பட்ட முழு தொகையையும் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் தமிழக அரசு தரவில்லையென்றால், அவைகளின் எதிர்கால செயல்பாடே கேள்விக்குறியாகிவிடும். இதனால் பாதிக்கப்பட போவதும் விவசாயிகள் தான்’’ என கவலை தெரிவித்தார்



source https://www.vikatan.com/news/agriculture/farmers-comments-about-agri-sector-announcements-in-tamilnadu-interim-budget-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக