Ad

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

பழுதான செல்போன் விற்பனை; பொறுப்பை தட்டிக்கழித்த ஆன்லைன் நிறுவனம்! -நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர், அப்துல் ரகுமான். ஆன்லைன் மூலம் 39,000 ரூபாய் விலையில் ஐபோன் விற்பனை செய்யப்படுவதாக இணையதளம் மூலம் பார்த்துள்ளார். அதனால் அவர் ஒரு செல்போன் வாங்க ஆர்டர் செய்திருக்கிறார்.

Also Read: நெல்லை: பேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்... ரூ.20,001 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

அவரை தொடர்பு கொண்ட ஆன்லைன் நிறுவனம் செல்போனை கொரியர் மூலம் அனுப்பி வைப்பதாகவும் அதைப் பெற்றுக் கொண்ட பின்னர் பணத்தை கொரியர் நிறுவனத்திடம் கொடுக்குமாறும் தெரிவித்துள்ளனர். அதன்படி அவர் செல்போன் ஆர்டர் செய்தார்.

செல்போன் ஆர்டர் செய்த அப்துல் ரகுமானுக்கு 2016-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஐபோன் வந்துள்ளது. நான்கு நாள்கள் மட்டும் சரியாக வேலை செய்த அந்த போன் அதன் பின்னர் அதிக சூடு ஏற்பட்டதுடன் அடிக்கடி செயல்படாமல் நின்றுள்ளது. அதனால் அப்துல் ரகுமான் அதிர்ச்சி அடைந்தார்.

representational image

செல்போனில் பழுது ஏற்பட்டதால் வாங்கி 4 நாளுக்குப் பின்னர் செல்போன் விற்பனை செய்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். சில நாள்களுக்குப் பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்படி திருப்பி அனுப்பிய பின்னர் அவருக்கு புதிய போன் அல்லது அந்த போனில் இருந்த பழுது நீக்கி திருப்பிக் கொடுக்கப்படவில்லை.

ஓராண்டுக்கு மேலாகியும் செல்போன் விற்பனை செய்த ஆன்லைன் நிறுவனம் எந்த பதிலும் தெரிவிக்காததால் மீண்டும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய நபர் ’புதிய போன் எதுவும் கொடுக்க முடியாது. முடிந்ததைச் செய்து கொள்’ எனப் பேசியிருக்கிறார். அதனால் அவர் வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நெல்லை நுகர்வோர் நீதிமன்றம்

ஆன்லைனில் செல்போன் விற்பனை செய்த நிறுவனம், ‘நாங்கள் செல்போன் விற்பனை செய்யவில்லை. எங்கள் நிறுவனத்தின் மூலம் வேறொரு நிறுவனத்திடம் இருந்து பொருளை வாங்கியிருக்கிறார். அதனால் எங்களுக்கு நேரடியாக இதில் எந்த தொடர்பும் கிடையாது. அவர் எங்களுடைய நுகர்வோர் இல்லை’ என பதில் அளித்தது.

அதன் பின்னர் ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் ஐபோன் விற்பனை செய்த நிறுவனத்தையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால் அந்த நிறுவனமோ, ‘நாங்கள் ஐபோன் உற்பத்தி செய்யும் நிறுவனம் கிடையாது. நாங்கள் வேறொருவர் தயாரித்த பொருளை வாங்கி ஆன்லைனில் விற்கிறோம். ஆன்லைன் வர்த்தகத்தை பயன்படுத்துவோரை எங்களின் நுகர்வோராக கருதக்கூடாது’ என பதில் மனு தாக்கல் செய்தது.

“ஆன்லைன் வர்த்தகத்தை நடத்தியவர்கள், அதில் பொருளை விற்றவர்கள் அனைவருமே இதற்குப் பொறுப்பானவர்கள். ஐபோன் வாங்கியவர் இவர்களின் நுகர்வோராகக் கருதப்படக் கூடியவர்களே. அதனால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10,000,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கறிஞர் பிரம்மா வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள், “மனுதாரருக்குரிய ஐபோனை சர்வீஸ் செய்து கொடுக்காதது சேவை குறைபாடு. அவர் ஆன்லைன் நிறுவனத்தின் நுகர்வோர். அதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.15,000 மற்றும் வழக்குச் செலவு ரூ.5,000 என ரூ.20,000 ஒரு மாத காலத்துக்குள் கொடுக்க வேண்டும். மனுதாரருக்கு ஒரு மாத காலத்தில் ஐபோன் சரிசெய்து கொடுக்கவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

வழக்கறிஞர் பிரம்மா

இது பற்றி வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், “ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் இனிமேல், நாங்கள் பொருளை உற்பத்தி செய்யவில்லை எனச் சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. தங்களிடம் பொருள் வாங்கும் வாடிக்கையாளரை நுகர்வோராகக் கருதமுடியாது என்றும் சொல்ல முடியாது என்பதற்கு இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/judiciary/consumer-court-has-fined-an-online-shopping-company-for-fault

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக