டோலிவுட் சினிமாவில் 'இயக்குநர் சுகுமார்' என்ற பெயருக்கு அத்தனை ரசிகர்கள், அத்தனை மரியாதை இருக்கிறது. அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், நாக சைதன்யா என டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலரை இயக்கி சூப்பர் ஹிட்டுகளை வாரி வழங்கியவர். இவர் படங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்கு தனி மேனரிஸம் இருக்கும். தற்போது மூன்றாவது முறையாக 'புஷ்பா' படத்தின் மூலம் அல்லு அர்ஜுனை இயக்கியிருக்கிறார். சுகுமாரின் முதல் பட ஹீரோவும் இவரே. 'புஷ்பா'வின் வெற்றி விழாவிற்காக சென்னை வந்திருந்தவரை சந்தித்துப் பேசினேன்.
'ஆர்யா', 'ஆர்யா 2' படங்களுக்குப் பிறகு, 12 வருஷம் கழிச்சு நீங்களும் அல்லு அர்ஜுனும் 'புஷ்பா' படத்துக்காக இணையும்போது, மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை எப்படி சமாளிச்சீங்க?
கணித பேராசிரியரா வேலை செஞ்சுக்கிட்டிருந்த நீங்க, இயக்குநராகி முதன்மையான இடத்துக்கு வந்திருக்கீங்க. இந்தப் பயணத்தைப் பத்தி சொல்லமுடியுமா?
இந்தக் கதைக்களம் கொண்ட படத்தை பேன் இந்தியா படமா வெளியிடலாம் என்ற எண்ணம் எப்போ தோணுச்சு?
பகத் பாசிலை இயக்கியது எப்படி இருந்தது?
நீங்க இயக்குநர் மணிரத்னத்துடைய தீவிர ரசிகர்னு கேள்விப்பட்டோம். அவரை சந்திச்ச அனுபவம் இருக்கா?
தமிழ் சினிமாவுல உங்களுக்குப் பிடிச்ச இயக்குநர்கள் யார்?
கோலிவுட்ல உங்களுக்குப் பிடிச்ச, உங்களைக் கவர்ந்த நடிகர் யார்?
உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில் இந்த வார ஆனந்த விகடனில் இடம்பெற்றிருக்கிறது. அவை தவிர, இயக்குநர் சுகுமார் பகிர்ந்துகொண்டவை இதோ..!
Also Read: “ரஜினி எனக்கு நாற்காலி கொடுத்தார்!”
தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இவங்க ரெண்டு பேரும் உங்க கரியர்ல எவ்வளவு ஸ்பெஷல்?
’’ரெண்டு பேரும் என் கரியர்ல மட்டுமல்ல என் வாழ்க்கையிலும் ஸ்பெஷல்தான். 'ஆர்யா'வுல இருந்து இப்போவரை என்னுடைய எல்லா படத்துக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்தான் இசையமைப்பாளர். என் படங்கள்ல பாடல்கள் எல்லாம் ஹிட்டாகிடும். அதுக்கு முழு காரணம், தேவிதான். எனக்கு மியூசிக் பத்தி எதுவும் தெரியாது. எந்த இடத்துல பாடல் வேணும், என்ன சூழலுக்குப் பாடல் வேணும்னு மட்டும்தான் சொல்லுவேன். மத்ததெல்லாம் தேவி பார்த்துக்குவார். இதுவரை 'இல்ல வேற ட்யூன் கொடுங்க'னு நான் கேட்டதில்லை. அவர் கொடுக்கிற ட்யூனை நான் வாங்கிப்பேன். எங்களுக்குள்ள இருக்கிறது வெறும் தொழில்முறையான பழக்கம் இல்லை. அதுக்கும் மேல. தேவி என் சகோதரன் மாதிரி. அதே மாதிரி என் நண்பர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. எப்போவும் என்னுடைய முதல் சாய்ஸ் அவர்தான். அவர் வேற படத்துல பிஸியா இருந்தால் மட்டுமே வேறு ஒளிப்பதிவாளர்கிட்ட போவேன். நானும் அவரும் சேர்ந்து வேலை செய்யலைனா கூட, என் கதைகளைப் பத்தி அவர்கிட்ட ஆலோசிக்கிறதுண்டு. சினிமாவைத் தாண்டிய உறவு எங்களுக்குள்ள இருக்கு. ’புஷ்பா’ படத்துல க்யூபா சூப்பரா ஒளிப்பதிவு பண்ணி கொடுத்தார். இருந்தாலும் ஐ மிஸ் ரத்னவேலு.’’
’ஆர்யா’, ’ஆர்யா 2’ இப்போ ’புஷ்பா’, ’புஷ்பா 2’னு உங்களுடைய ரெண்டு சீக்வெல் படங்கள் அல்லு அர்ஜுன் கூட எப்படி அமைஞ்சது?
’’யதார்த்தமா அமைஞ்சதுதான். ’ஆர்யா’ ஹிட்டுக்குப் பிறகு, நான் அல்லு அர்ஜுனுக்கு இன்னொரு லவ் சப்ஜெக்ட் சொன்னேன். ஹிட் காம்போ மறுபடியும் இணையுறோம்ன்னு, ’ஆர்யா 2’-ன்னு தற்காலிகமா தலைப்பு வெச்சிருந்தோம். நான் அந்தக் கதைக்கு வெச்சிருந்த தலைப்பு ‘மிஸ்டர்.பர்ஃபெக்ட்’. ஆனா, விநியோகஸ்தர்கள் எல்லோரும் ’ஆர்யா 2’னு தலைப்பு இருந்தா, இன்னும் நல்லா பிசினஸ் ஆகும்னு சொல்லி படத்துக்கு அந்தப் பெயரே வெச்சாச்சு. நீங்க படம் பார்த்திருந்தால், நிச்சயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், ரெண்டுக்கும் தொடர்பே இருக்காது. ’புஷ்பா’ கதையை எழுதி ஒவ்வொன்னா ஷூட்டிங் போகப்போகத்தான் "இல்லை ரொம்பப் பெரிய களமா இருக்கு. அதுக்குள்ள நம்ம இதெல்லாத்தையும் சொல்லணும்னா ஒரு படத்துல முடியாதுனு தெரிஞ்சது. அப்படித்தான் ரெண்டு பாகங்களா பண்ணலாம்னு முடிவெடுத்தோம்.’’
எந்த சமயத்துல செம்மர கடத்தலை களமா வெச்சு கதை எழுதலாம்னு தோணுச்சு?
‘’நான் முதல்ல வேறொரு ஸ்கிரிப்டைதான் தயார் செஞ்சு வெச்சிருந்தேன். அதுல மகேஷ் பாபு நடிக்கிறதா இருந்தது. அந்த சமயத்துல அவர் வேற படங்கள்ல பிஸியா இருந்தார். அப்போதான், செம்மர கடத்தல் பத்தி படிச்சு அது தொடர்பா தேட ஆரம்பிச்சேன். 2015ல இருந்தே இந்தக் களம் எனக்குள்ள இருந்தது. முதல்ல வெப் சீரிஸா பண்றதுதான் பிளான். அந்தத் தளம் எப்படி இருக்குனு பார்க்கலாம்னு நினைச்சேன். இது பத்தி படிக்க படிக்க, இந்தக் கதைக்களத்தை வெச்சு ஒரு பக்கா கமர்ஷியல் படம் பண்ணலாம்னு தோணுச்சு. அப்படிதான், ’புஷ்பா’ ஆரம்பமானது.’’
’புஷ்பா’ படத்துக்காக அல்லு அர்ஜுன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பயங்கரமா மெனக்கெட வேண்டியது இருந்திருக்கும். நீங்க என்னவெல்லாம் அவர்கிட்ட சொன்னீங்க?
”புஷ்பராஜ் கேரக்டரை எழுதும்போதே அவன் எப்படியிருப்பான்னு எனக்குள்ள ஒரு உருவம் வந்திடுச்சு. அவன் எப்படி நடப்பான், எப்படிப் பேசுவான், அவன் நிறம், டிரஸ், தலைமுடி, தாடி, உடல்மொழி எல்லாம் எப்படியிருக்கும்னு யோசிச்சு வொர்க் பண்ணினோம். அதையெல்லாம் அல்லு அர்ஜுன்கிட்ட சொல்லும்போது ரொம்ப ஆர்வமா கவனிச்சு கேட்டார். ஒரு இயக்குநரா அவர்கிட்ட இப்படி வேணும் அப்படி வேணும்னு வலியுறுத்தினேன், அவ்வளவுதான். மத்ததெல்லாம் அவருடைய ஆர்வத்தால மெறுகேறினதுதான். ஒரு கமர்ஷியல் படத்துல ஹீரோ வந்து நடிச்சுட்டு போயிடலாம். மத்த விஷயங்களுக்கு எல்லாம் இவ்வளவு மெனக்கெடணும்னு அவசியமில்லை. ஆனா, என்னைவிட புஷ்பராஜ் எப்படி இருக்கணும்னு பயங்கர ஆர்வமா இருந்தார், அல்லு அர்ஜுன். அவ்வளவு உழைச்சிருக்கார். அதை வார்த்தையால சொல்லமுடியாது.’’
’புஷ்பா 2’ படத்துல நாங்க என்ன எதிர்பார்க்கலாம்?
’’நான் பக்கா கமர்ஷியல் டைரக்டர். எனக்கு எப்போவும் என் ஆடியன்ஸை என்டர்டெயின் பண்ணணும். ’புஷ்பா’ முதல் பாகத்துல இருக்கிற எமோஷன்கள் எல்லாத்துக்கும் அடுத்த பாகத்துல பதில் வெச்சிருக்கேன். முதல் பாகம் எனக்கு ரொம்ப நல்ல அனுபவத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கு. ’புஷ்பா 2’ படத்துல பன்வர் சிங்கிற்கும் புஷ்பராஜுவுக்கும் இடையே நடக்கிற மோதல், புஷ்பராஜுக்கு அவன் மேலேயே இருக்கிற கேள்விகள், விருப்பு வெறுப்புகள்னு இரண்டாம் பாகம் நகரும். நிச்சயம், ட்ரீட் இருக்கு!’’
காமெடியனா நடிச்சிருந்த சுனிலுக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுத்திருந்தீங்க. எப்படி அவரை அந்தக் கேரக்டரா யோசிச்சீங்க?
’’சுனிலை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். எந்த கேரக்டரை கொடுத்தாலும் பிரமாதமா நடிக்கிற நடிகர். இவரை வேற மாதிரி காட்டணும்னு எண்ணம் இருந்தது. இதுல என்ன சிக்கல்னா, மத்த ஊர்ல சுனிலை வில்லனா ஏத்துக்குவாங்க. அவரை காமெடியனா பார்த்த தெலுங்கு மக்கள் எப்படி அவரை வில்லனா ஏத்துக்குவாங்கன்னு பெரிய தயக்கம் இருந்தது. அப்புறம்தான், லுக்கா அவரை மாத்தலாம்னு பிளான் பண்ணி அவரை கேரிகேச்சரா வரைஞ்சு வரைஞ்சு பார்த்தோம். அதுல ஓகேயாகிறதை ஆரம்பத்துல இருந்தே சுனில் வில்லனா நடிக்கிறார், சுனில் வில்லனா நடிக்கிறார்னு ப்ரொமோட் பண்ணினா, மக்கள் ட்யூனாகிடுவாங்கன்னு அல்லு அர்ஜுன் ஐடியா கொடுத்தார். அது சூப்பரா வொர்க் அவுட்டாகியிருக்கு!’’
நீங்க தயாரிச்ச ’உப்பென்னா’ படத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைச்சிருக்கு. அடுத்த உங்க தயாரிப்புல என்னென்ன படங்கள் போய்க்கிட்டிருக்கு?
’’’உப்பென்னா’ இயக்குநர் புச்சிபாபு என் ஸ்டூடண்ட். நான் அவனுக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்திருக்கேன். அப்புறம், சினிமா மேல ஆர்வம் வந்து என்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தான். இந்தக் கதையை என்கிட்ட சொன்னதும் ’நீயா இதை எழுதினது?’னு ஷாக்காகிட்டேன். அவனுக்குள்ள இப்படியொரு திறமை இருக்குனு எனக்கு அப்போதான் தெரிஞ்சது. உடனே, மைத்ரி மூவி மேக்கர்ஸ் டீம்கிட்ட சொல்லி நானும் அவங்களும் சேர்ந்து தயாரிச்சோம். இப்போ என்னுடைய தயாரிப்புல மூணு படங்களுக்கான வேலைகள் போய்க்கிட்டிருக்கு.’’
நேரடி தமிழ்ப் படத்தை இயக்குற ஐடியா இருக்கா?
’’நான் தெலுங்கு சினிமாவுக்குள்ள வந்த புதுசுல சுகுமார்ங்கிற என் பெயரை பார்த்துட்டு, தமிழ் பையன்னு நினைச்சு என்கிட்ட தமிழ்ல பேசுவாங்க. ’இல்லைங்க நான் தெலுங்கு பையன்தான்’னு சொல்லுவேன். காரணம், சுகுமார்ங்கிற பெயர் தமிழ்நாட்டுலயும் கேரளாவுலயும்தான் இருக்கும். ஆந்திராவுல இந்தப் பெயர் பெரும்பாலும் யாரும் இருக்காது. தவிர, என் படங்கள் தமிழ் படங்கள் மாதிரி இருக்கு, தமிழ்ல வெளியாகியிருந்தால், சூப்பர்ஹிட் ஆகியிருக்கும்னு சொல்லுவாங்க. அப்படி என்னுடைய ’புஷ்பா’ தமிழ்ல வெளியாகி நல்ல வரவேற்பு கிடைச்சது பெரிய சந்தோஷம். நேரடி தமிழ்ப் படத்தை இயக்கும் எண்ணம் நிச்சயமா இருக்கு. ’ரங்கஸ்தலம்’ பார்த்துட்டு விஜய் சார் என்கூட வொர்க் பண்ண விருப்பப்படுறார்னு ரத்னவேலு மூலமா தகவல் கிடைச்சது. ஆனா, அதுக்கு பிறகு எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கலை. அவரை இயக்க வாய்ப்பு கிடைச்சா, நிச்சயமா பண்ணுவேன்.’’
ஒரு தமிழ்ப் படத்தை ரீமேக் பண்ணணும்னு சொன்னால், எந்தப் படத்தை பண்ணுவீங்க ?
’’நிறைய படங்கள் இருக்கு. ஆனா, இப்போ, குறிப்பிட்டு சொல்லணும்னா ’விக்ரம் வேதா’. அதை ரீமேக் பண்ண ஐடியா இருந்தது. இன்னொன்னு, 'ராட்சசன்'. எனக்கு த்ரில்லர் படங்கள் ரொம்பப் பிடிக்கும். இது அங்க ஏற்கெனவே ரீமேக்காகிடுச்சு. இருந்தாலும் நான் பண்ணணும்னு ஆசை!"
source https://cinema.vikatan.com/tamil-cinema/tollywood-director-sukumar-exclusive-interview-about-pushpa-and-his-career