Ad

வியாழன், 12 நவம்பர், 2020

சுச்சியின் விவகார லென்ஸ், சோம் சொதப்பல் ப்ரப்போஸல், ஷிவானியின் அந்த சப்பாத்தி?! - பிக்பாஸ் நாள் - 39

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இன்று பெரும்பாலும் ஜாலியான விளையாட்டுக்களின் மூலம் கழிந்தன. ஒரே ஒரு ஹைலைட் என்னவெனில் அது பிக்பாஸ் அளித்த சிறப்பு தீபாவளி பரிசு. ஆம். லக்ஷுரி பட்ஜெட்டை மொத்தமாகப் பிடுங்கி விட்டார். ‘அய்யா.. சாமி…’ என்று மக்கள் விதம் விதமாக கெஞ்சியும், ஆசாமி மனம் இரங்கவில்லை.

‘பாட்டியை சந்தோஷப்படுத்துவதுதான் இந்த டாஸ்க்கின் பிரதான விதி. ஆனால் திசை மாறி சென்று விட்டீர்கள்” என்ற பிக்பாஸ், குறிப்பாக பாலாஜியை ‘நீங்கள்தான் சொதப்பி விட்டீர்கள்’ என்று தனியாக வட்டம் போட்டு காட்டினார். (‘டைனிங் சேரையா உடைக்கறே.. இருடா படவா.. வெச்சிருக்கேன்.. உனக்கு.. என்று பிக்பாஸ் பழிவாங்கியது போலவே இருந்தது).

பாலாஜி

சோமிடமிருந்து பாலாஜி பத்திரத்தை திருடியது வரை கூட ஓகே. அதை பாட்டியிடம் ஒப்படைத்திருந்தால் டாஸ்க் வெற்றி பெற்றிருக்கும். பாலாஜியின் பேராசை அந்தக் குடும்பத்திற்கே பெருநஷ்டமாக அமைந்தது.

ஓகே.. 39-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘டசக்கு டசக்கு’ என்கிற ரகளையான பாடலுடன் பொழுது விடிந்தது. கார்ன்ஃபிளேக்ஸோடு வம்பையும் சேர்த்து மென்று கொண்டிருந்தார்கள் சுச்சியும், சனமும். ‘பாலாவும் ஷிவானியும் பொழுதன்னிக்கும் ஒண்ணாதான் சுத்தறாங்க. கேட்டா, அண்ணன் – தங்கச்சிங்கறாங்க.. டவுட்டாவே இருக்கு” என்றார் சுச்சி. ‘புதிய செய்தியை கொண்டு வா.. என்றால் இத்து செத்துப் போன செய்தியையா கொண்டு வருகிறாய்?” என்று ஒற்றனின் கையை முறுக்கும் இம்சை அரசனின் நினைவு வந்தது. “அதையே நீ இப்பத்தான் கண்டுபிடிக்கிறியா... அடுத்து என்ன ரசத்தை ஊத்து... அதுல என்ன இருக்குன்னு பார்த்துடுவோம்’ என்பது போல் சொன்னார் சனம். சோமிற்கு சாம் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறதாம். இது சுச்சியின் அடுத்த வதந்தி. சுச்சியின் அருள்வாக்குகள் பலவும் டுபாக்கூர்களாக இருக்கின்றன என்பதை முன்பே நாம் அறிவோம். இதுவும் அது போல்தான் இருக்கிறது. சுச்சி மட்டும் ஸ்பெஷல் லென்ஸில் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறாரா என்று தெரியவில்லை.

நாம் கவனித்தவரை சோமிற்கு ரம்யா மீதுதான் ஈர்ப்பு இருக்கிறது. அதை நகைச்சுவையைில் முக்கியெடுத்து வெளிப்படையாகவே சொல்லி விடுகிறார். ஆனால்... சாம்? தெரியவில்லை.

‘ஆப்பரேஷன் பாட்டி’ தோல்வியடைந்த விஷயத்தை பிக்பாஸ் அறிவிக்க மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ‘நான் முதலில் திருடலை’ என்று சொல்லிப் பார்த்தார் பாலாஜி. பிக்பாஸ் மசியவில்லை. '‘நாங்கள்தான் அந்தத் திருடர்கள்’ என்று சோம் & குழு சபையின் முன்பாக வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள ‘அமுல் டப்பா.. மாதிரி இருந்துக்கிட்டு... என்ன வேலை செஞ்சிருக்குதுங்க பாரேன்...’ என்பது போல் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

ரியோ - சோம்

''திருடினே சரி... ஏண்டா அதை சரியா ஒளிச்சு வெக்கலை’ என்கிற சரியான காரணத்தைச் சொல்லி சோமின் மீது பாய்ந்து விளையாட்டாக அடித்தார் ரியோ. ‘சோமுதான் எடுத்தான்... நான் பார்த்தேன்’ என்று உறுதியாக சாட்சியம் சொல்லிக் கொண்டிருந்தார் நிஷா. டூ லேட்.

“அய்யா… டெம்போல்லாம் வெச்சு கடத்தியிருக்கோம்.. பார்த்துப் பண்ணுங்கய்யா...’ என்கிற ரேஞ்சிற்கு பிக்பாஸிடம் அர்ச்சனா கெஞ்சிக் கொண்டிருந்தார். அம்மா ரேஷன் கடை க்யூவில் வியர்வையுடன் நின்றிருக்க, மகன் வீட்டில் சொகுசாக வீடியோ கேம் ஆடிக் கொண்டிருந்த கதையாக, மற்றவர்கள் இதன் தீவிரம் புரியாமல் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க ‘சுப்..’என்று ஓர் அதட்டல் போட்டார் அர்ச்சனா. வீடே அமைதியாயிற்று.

''ஒரு குடும்பத் தலைவரா (?!) நானும் ரிக்வெஸ்ட் பண்றேன்'’ என்றார் கேப்டன் ஆரி. “டாஸ்க் விதிகளை தவறாகப் புரிஞ்சுக்கிட்டேன்... Extremely sorry'’ என்று பாலாஜி சொல்லியும் பிக்பாஸிடமிருந்து மெளனமே பதிலாக வந்தது. ஒரு ஆள் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அணியின் உழைப்பையும் ஒதுக்கி தண்டனை தருவது அநீதியாகத்தான் இருக்கிறது. இப்படிச் செய்தால்தான் அடுத்த டாஸ்க்கை சீரியஸாக செய்வார்கள் என்று பிக்பாஸ் கறாராக இருக்கிறார்போல!

“போனமுறையும் உன்னாலதான் பாயின்ட்ஸ் போச்சு. இந்த முறை மொத்தமாவே ஊத்தி மூடிட்டியே...” என்று புன்னகையில் ஒளிக்கப்பட்ட கடுமையான புகாரை பாலாஜியிடம் சிரித்துக் கொண்டே சொன்னார் ரம்யா. இதையே ஆரி சொல்லியிருந்தால் உலக யுத்தமே வந்திருக்கும். ஆரியின் உபதேச டோன் அப்படி. ரம்யாவின் கள்ளப் புன்னகை அப்படி.

ரம்யா

''செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு எப்படி கூலா இருக்காங்க. பாரு'’ என்பது போல் பிறகு நிஷாவும் அர்ச்சனாவும் புலம்பிக் கொண்டிருந்தார்கள். '‘வீட்டின் நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது'’ என்று ஒரு குடும்பத்தலைவி உண்மையாக புலம்புவதின் கவலை அவர்களின் குரலில் தெரிந்தது. 'பாசிப்பருப்பு மட்டுமாவது ரெண்டு பாக்கெட் கொடுத்துடுங்க பிக்பாஸ்... வாரம் முழுக்க சாம்பாரா வெச்சி சமாளிக்கறோம்' என்று அனிதா மட்டும்தான் எந்த வேண்டுகோளையும் வைக்கவில்லை.

இதற்கு இடையில் கேமராவின் முன்பு வந்த சுச்சி ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். “அடிப்படையான பொருட்கள் கூட வீட்ல குறைவா இருக்கு. அது வரும் சமயத்தில் சிலர் எடுத்து பதுக்கி வெச்சிடறாங்க. எங்களுக்கு கிடைக்க மாட்டேங்குது...” என்றவர் பிறகு '‘ரமேஷ், ரியோவிற்கு சாப்பாட்டுப் பொருட்கள்ல முன்னுரிமை தரப்படுது. திருடிடறாங்க’' என்று பெயர்களையே குறிப்பிட்டு வெளிப்படையாகச் சொன்னார். எனில் அது நிஷாவின் கைங்கர்யமாக இருக்கலாம்.

சுச்சி இப்படி கேமராவின் முன்பு புலம்புவதற்குப் பதிலாக கேப்டனிடம் புகார் சொல்லலாம் அல்லது சபையைக் கூட்டி விவாதிக்கலாம். தனிப்பட்ட சங்கடமான வதந்தியைக் கூட சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாகச் சென்று கேட்டு விடுகிறேன் என்று துணிச்சல் காட்டுகிறவர், இந்த அடிப்படையான விஷயத்திற்கு பிக்பாஸிடம் புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

ஒட்டுமொத்த வீட்டையே கையேந்த விட்டாலும் கூட பாலாஜியின் திமிர் இன்னமும் குறையவில்லை. ‘என்னை திட்டினீங்கள்லே... போங்கடா... உங்களுக்கு லக்ஷுரி பட்ஜெட் கிடையாது’ என்று ஜாலியாக சாபம் விட்டுக் கொண்டிருந்தார். பாலாஜி சொல்வதற்கெல்லாம் ‘ஆஹா... ஹா...’ என்று சிரித்துக் கொண்டிருக்கும் ஷிவானியைப் பார்த்து கடுப்பாக வருகிறது. ஒரு பக்கம் சவடாலாக பேசினாலும் மீண்டும் கேமராவின் முன்பு கெஞ்சிக் கொண்டிருந்தார் பாலாஜி.

“அதாவது... பாலாஜி இந்த கேமை எப்படி புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்றான்னா... ஒரு சீரியஸான கதைல...” என்று அனிதா ஆரம்பிக்க ''அதான் பிக்பாஸ் கிளாரிஃபை பண்ணிட்டார்ல... கெளம்பு காத்து வரட்டும்'’ என்பது போல் கிண்டலடித்தார் சோம். இதையே ரியோ சொல்லியிருந்தால் பூகம்பம் வெடித்திருக்கும்.

ரியோவும் தன் தரப்பு விளக்கத்தைச் சொல்லி ‘நன்றி வணக்கம். செய்திகள் இத்துடன் முடிவடைந்தன’ என்று ஜாக்கிரதையாக கேட்டை சாத்தியதால் தப்பித்தார்.

சமகால போட்டியாளர்களுக்கு ‘டாஸ்க்’ கொடுப்பதற்காக முன்னாள் சீசனின் போட்டியாளர்களில் சிலர் வந்திருந்தார்கள். ஓவியா டார்லிங் வந்திருந்தால் செமயாக இருந்திருக்கும். அதை சற்று ஈடு செய்வது போல ஐஸ்வர்யா வந்திருந்தார். மிக்ஸியில் அரைத்த தமிழை வைத்து கொஞ்சி கொஞ்சிப் பேசினார்.

மஹத்

முதலில் வந்தவர் மஹத். '‘வெளியே உங்களுக்கு வேற லெவல்ல பயங்கரமான வாய்ப்புகள் இருக்கு'’ என்று பிக்பாஸில் வழக்கமாக பாடும் பாட்டை அவரும் பாடினார். ‘பயங்கரமான’ என்கிற வார்த்தையை அவர் சர்காஸ்டிக்காக உச்சரித்ததால் காமெடி ஆயிற்று.

''சண்டையெல்லாம் போடாதீங்க... வொர்த்தே இல்ல'’ என்று ஆலோசனை தந்தார் மஹத். இரண்டாவது சீசனில் சண்டைக்கோழியாக இருந்த மஹத் இதைச் சொன்னதுதான் சிறப்பு. நாம் முன்பு இருந்த நெருக்கடியை பிறகு விலகியிருந்து பார்க்கும்போதுதான் நாம் எத்தனை அற்பத்தனமான தவறுகள் செய்திருக்கிறோம் என்பது புரிகிறது.

ஷிவானி மற்றும் சாமிற்கு ஒரு விளையாட்டு போட்டி தந்தார் மஹத். கைகளை பின்னால் கட்டிக் கொண்டு குடுவை நீரில் மூழ்கியிருக்கும் ஆப்பிளை சாப்பிட வேண்டும். வழக்கம் போல் சிக்கனமான உடையில் இருந்த ஷிவானி குனிவதற்கு சிரமப்பட்டது போல் தெரிந்தது. நாசூக்காக அவர் சாப்பிட, குளத்தில் முக்கி எழுந்த சாம் முத்தை எடுத்து வெற்றி பெற்றார்.

அடுத்து வந்தவர் ஷெரின். இவர் நாய்ப்பிரியர் என்பது நமக்கு அப்போதே தெரியும். தனது வளர்ப்பு நாயைப் பிரிந்திருப்பது பற்றி அப்போது மிகவும் உருகினார். எனவே சக நாய் பிரியரான சோமு எழுதிய கடிதத்தை ஷெரின் பாராட்டியதில் ஆச்சரியமில்லை.

இவர் பாலாஜி மற்றும் சோமிற்கு ஒரு டாஸ்க் தந்தார். நான்கு பேப்பர் கப்களின் இடையில் இருக்கும் தாளை உருவச் செய்வதின் மூலம் நான்கு கப்களையும் அடுக்க வேண்டும். முதன் முறை தோற்றுப் போனாலும் மீண்டும் முதலில் இருந்து செய்யவேண்டும். இதில் பாலாஜி செய்த ஒரு தந்திரம் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. அதாவது பேப்பரை கப்பின் இடையில் வைக்காமல் ஓரமாக இருக்கும்படி அமைத்துக் கொண்டதால் வெற்றி பெற்றார்.

அடுத்ததாக வந்தவர் வனிதா. பிக்பாஸ் வீடே ஒருகணம் திடுக்கிட்டு பிறகு சுதாரித்துக் கொண்டதைப் போன்ற பிரமை. ஆஜித் மற்றும் கேபிக்கான டாஸ்க்கை அறிவித்தார் வனிதா. ஸ்ட்ராவின் மூலம் ஜெம்ஸ் மிட்டாயை உறிஞ்சி எடுத்து இன்னொரு ஸ்ட்ராவின் முனையில் நிற்க வைக்க வேண்டுமாம். இதில் ஆஜித் வெற்றி பெற்றார். அவரைப் பாராட்டுவதைப் போல் ஆவேசமாக ஓடிவந்த ரியோ, கைநிறைய ஜெம்ஸ்களை சுட்டுச் சென்றார். (இதுக்குத்தான் வந்தீங்களா... அடப்பாவிகளா!).

“ஒரு துண்டு சிக்கனையாவது கண்ல காட்டுங்கய்யா...’ என்று பிக்பாஸிடம் பிறகு மடியேந்திக் கொண்டிருந்தார் நிஷா. பசி மயக்கத்தில் துணி துவைக்கும் சோப்பை எடுத்து முகம் கழுவிக் கொண்டாராம். நிஷா அழுத்தமாக உம்மா தந்தும் சும்மாவே இருந்தார் கல்லுளிமங்கர் பிக்பாஸ்.

‘மியாவ்’ என்ற சத்தத்துடன் அடுத்து வந்தவர் விஜயலஷ்மி. இதன் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் சனம். நீர்க்குமிழியை வாயால் ஊதி தொடர்ந்து பயணம் செய்ய வைத்து ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தள்ள வேண்டும். சற்று சவாலான டாஸ்க்தான். இதில் அர்ச்சனா வெற்றி பெற்றார்.

அடுத்து வந்தவர் சாண்டி. தலைமுடி, தாடி மீசையெல்லாம் பயங்கரமாக வளர்த்துக் கொண்டு சண்டி முனி போல இருந்தார். சூப்பர் சிங்கர் டைட்டிலை ஆஜித்திற்கு பெற்றுத்தந்த ‘ஆரோமலே’ பாடலை பாடச் சொல்லி மகிழ்ந்தார். “ஏண்டா டேய்.. போன வருஷம் என்னை கிண்டல் பண்ணிட்டு இப்ப நீ வந்து உள்ளே உட்கார்ந்திருக்கே’' என்று ரியோவை நோக்கி சாண்டி கேட்க ‘உனக்குப் போன வருஷம்.. எனக்கு இந்த வருஷம்” என்று பதிலளித்தார் ரியோ.

“முக்கியமான ஒருத்தரை மறந்துட்டேன்... குருநாதா...” என்று பிக்பாஸை சாண்டி அழைக்க ‘சொல்லுங்க சிஷ்யா’ என்று பிக்பாஸ் பதில் அளித்தது சிறப்பான தருணம். கடந்த சீசன் நினைவுகள் நினைவில் மிதந்தன. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு கடந்த சீசனில் சற்று இலகுவாகவும் ஜாலியாகவும் இருந்தார் பிக்பாஸ். மூன்றாம் சீசனில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுத்து கவுன்ட்டர் டயலாக் அடித்தார். சாண்டி குழுவின் கலாட்டாக்கள் அத்தகையதாக இருந்தன.

‘வந்த வேலையைப் பார்க்கட்டுமா?” என்று சாண்டி கேட்க ‘அதுக்குத்தானே வந்தீங்க’ என்று பிக்பாஸ் நக்கலாக பதில் அளிக்க களை கட்டும் காட்சியாக இருந்தது. இதன் போட்டியாளர்கள் நிஷா மற்றும் ரம்யா. தர்பூசணி துண்டுகளை கையை பின்னால் கட்டிக் கொண்டு சாப்பிட வேண்டும். நிஷா மூச்சு வாங்கி நிறுத்தி விட ‘இன்னும் கூட கொண்டு வாங்க’ என்கிற ரேஞ்சிற்கு மொக்கித் தள்ளினார் ரம்யா. “நீ என்ன.. பழத்தைச் சாப்பிடச் சொன்னா. டேபிளைப் போய் வாயால சுரண்டி வெக்கறே” என்று நிஷாவை கிண்டலடித்தார் சாண்டி.

ரமேஷ், அனிதா, ரியோ ஆகியோருக்கும் சாண்டியே டாஸ்க் தந்தார். அனிதா அழைக்கப்பட்ட போது ‘அய்யாங்’ என்று தன் வழக்கமான பாணியில் சிணுங்கினார். மூக்கைப் பசையில் தடவிக் கொண்டு பஞ்சு உருண்டையை தொட்டு எடுத்து சேகரிக்க வேண்டும். மூக்கிற்குப் பதிலாக முகத்தையே பசைக்குள் முக்கியெடுத்து நிறைய பஞ்சு உருண்டைகளை அனிதா சேகரித்து போங்காட்டம் ஆடினாலும் ‘சரி போ’ என்று அவருக்கே வெற்றியை அளித்தார் சாண்டி.

''சண்டையெல்லாம் வரும்தான். அதை உடனே மறந்துட்டு ஜாலியா இருங்க'’ என்று உபதேசம் செய்து விட்டு சென்றார் சாண்டி.

''நம்மள்லாம் எப்டி இருக்குது?” என்கிற வரவேற்புடன் அடுத்து திரையில் வந்தவர் ஐஸ்வர்யா. (எப்படி இருக்கீங்க... செல்லம்?!) ரொமான்ட்டிக் பாய் என்று அவர் சோமை அழைத்தவுடன் சோமின் முகத்தில் பரவசமும் அசடும் இணைந்து வழிந்தது. ‘எனக்கு ப்ரபோஸ் பண்ணுங்க” என்று ஐஸ் ஒரு குளிர்ச்சியான வேண்டுகோளை வைக்க, அந்த அரிய சந்தர்ப்பத்தை சொதப்பி வீணாக்கினார் சோம். ஆரி நடித்த படத்தில் ஐசுவும் நடித்திருக்கிறார் போலிருக்கிறது. அதைப் பற்றி விசாரித்தார்.

பிக்பாஸின் குரலைக் கேட்டவுடன் ஐஸ்கிரீமைக் கண்ட குழந்தை போல துள்ளிக் குதித்தார் ஐஸ்வர்யா. ஒரு இயந்திரக்குரல். அது செய்யும் மாயங்கள்தான் எத்தனை! உருவமில்லாமல் இருப்பதுதான் அதன் வசீகரம் போல!.

ஐஸ்வர்யா தந்த டாஸ்க், ஆரி மற்றும் சுச்சிக்கு. ஷூ, செருப்புகளை காலால் பிடித்து அருகிலிருக்கும் மேஜை மீது எறிய வேண்டும். இதில் ஆரி வெற்றி பெற்றார்.

மக்களுக்கு பரிசுகள் வந்தன. லக்‌ஷுரி பட்ஜெட்டை இழக்கச் செய்த பாலாஜிக்கு கிரில்டு சிக்கன். பொறுப்பான மூத்த மகன் ஆரிக்கு கடாய். (இதுதாம்ப்பா உலகம்). அனிதாவிற்கு கரடி பொம்மை கிடைத்தது. (பாவம் அந்த கரடி.) சாமிற்கு டைனோசர் பொம்மை. (சர்க்கரைக்குப் பரிசு). அர்ச்சனாவிற்கு கிடைத்த பரிசிற்குத்தான் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். என்னவென்று தெரியவில்லை. ஸ்வீட் ஆக இருக்கலாம்.

அடுத்தது...இன்னுமொரு டாஸ்க். (போதும்ப்பா முடியல!) விளம்பரதாரர் நிகழ்ச்சி. மிக மிருதுவான முறையில் சப்பாத்தி மற்றும் ஃபுல்கா சுட வேண்டுமாம். அதென்னமோ ஆச்சரியம். ஷிவானி மாவை அடுப்பில் வைக்கும் சமயத்தில் மட்டும்... புஷ்டியாக வந்தது. எனவே அவர் வெற்றி பெற்றார். டாஸ்க்கில் ஷிவானி பெற்ற முதல் வெற்றி போல.

ஷிவானிக்கு பரிசாக சிக்கன் துண்டுகள் வந்தன. ‘'ஒரு துண்டாவது கண்ல காட்டுங்கய்யா'’ என்று நிஷா வைத்த வேண்டுகோளை இப்படி நிறைவேற்றி விட்டார் பிக்பாஸ். கடந்த சீசன்களில் கலந்து கொண்டவர்கள் எல்லாம்.. ‘போதும்யா போதும்... சண்டை போட்டதெல்லாம் போதும்... ரத்தம் சிந்தினது போதும்... புள்ள குட்டிங்களை படிக்க வைங்க...” என்று 'தேவர்மகன்' கமல் போல சமகால போட்டியாளர்களுக்கு உபதேசம் செய்யத் தவறவில்லை. இதில் நமக்கான செய்தியும் உள்ளது. அற்பமான விவகாரங்களுக்கு எல்லாம் வீட்டில் ஒருவரையொருவர் பிறாண்டிக் கொண்டு நேரத்தை வீணடிப்பதைப் போன்ற அபத்தம் வேறில்லை.



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-4-day-39-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக