Ad

திங்கள், 30 நவம்பர், 2020

சென்னை: ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்! - ஐ.எம்.இ.ஐ நம்பரால் சிக்கிய இளைஞர்கள்

சென்னை பெரம்பூர் நெற்வயல் நகர் ஜெகதாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் சிவமணி. இவரின் மனைவி கவிதா (46). இவர் கடந்த 21-ம் தேதி இரவு 10 மணியளவில் வீட்டின் அருகில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 3 பேர், கண்ணிமைக்கும் நேரத்தில் கவிதாவின் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதுதொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் கவிதா புகாரளித்தார். அதன்பேரில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

செல்போன் பறிப்பு வழக்கில் கைதானவர்கள்

தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் செயல்படும் சைபர் க்ரைம் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிராஜன், செந்தில்குமார் ஆகியோர், செல்போனின் ஐஎம்இஐ நம்பரை வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்தனர். அப்போது திருடிய செல்போன்களின் ஐஎம்இஐ நம்பர்கள் மூலம் செல்போன் திருடர்களை போலீஸார் கண்டறிந்தனர்.

அதுதொடர்பாக விசாரித்த போது வியாசர்பாடி எம்.பி.எம் தெருவைச் சேர்ந்த ஏழுமலை (29), அவரின் கூட்டாளியான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பிரதாப் (26) எனத் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 42 செல்போன்கள், 4 திருட்டு பைக்குகள், ஒரு கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என போலீஸார் தெரிவித்தனர்.

செல்போன் பறிப்பு வழக்கில் கைதானவர்கள்

Also Read: `ரேடியேஷன் அதிகமாக இருக்கிறது, உள்ளேயே இருங்கள்!' -லேடீஸ் ஹாஸ்டல்களைப் பதறவைத்த செல்போன் திருட்டு

இவர்கள் இருவரும் சேர்ந்து செம்பியம், புளியந்தோப்பு, பேசின்பாலம், கொடுங்கையூர், வேப்பேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பு மற்றும் பைக் திருட்டு ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. ஏழுமலை மீது 3 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தலைமறைவாக உள்ள ஏழுமலையின் கூட்டாளி ஒருவரை போலீஸார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட ஏழுமலை, பிரதாப் ஆகிய இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-2-youths-and-seized-10-lakh-rupees-worth-cell-phones

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக