கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. அதில் பேசும் பெண்மணி பிரபல செய்தித்தாள் ஒன்றில் தான் படித்த செய்தி ஒன்றை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி: ``பெண்மணி ஒருவர் தன் ஏழு வயது மகளுக்குத் தலையில் பேன் கொல்லி ஷாம்பூவை தேய்த்துவிட்டு தொலைக்காட்சியில் மூழ்கிவிடுகிறார். அந்த ஷாம்பூ 20 நிமிடங்கள்தான் தலையில் இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒன்றைரை மணி நேரம் கழித்தே தன் மகளின் தலையில் இருக்கும் ஷாம்பூவை தண்ணீர் விட்டு அலசி விடுகிறார். பேன் கொல்லி ஷாம்பூ அதிக நேரம் சிறுமியின் தலையில் இருந்ததால் அதில் உள்ள ரசாயனம் சிறுமியின் மூளைவரை இறங்கிவிட்டது. இதனால் முகம் வீங்கி கோமா நிலைக்குச் சென்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்".
இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு அந்த வீடியோவில் பேசும் பெண்மணி, பேன் கொல்லி ரசாயனப் பொருள்களைத் தலைக்குத் தேய்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நமக்கு எச்சரிக்கைவிடுக்கிறார்.
பேன், ஈறு, பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கும் நம்மில் பலர், இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாகப் பேன் கொல்லி ரசாயனம் சேர்க்கப்பட்ட ஷாம்பூகளையும், எண்ணெய்களையும்தான் நாடிச்செல்கின்றோம். இந்நிலையில் இதுபோன்ற செய்திகள் மனதைப் பதற வைப்பதாக உள்ளன.
பேன் கொல்லி ரசாயனங்கள் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானவையா.. இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களைை கவனத்தில் கொள்ள வேண்டும்.. இந்த ரசாயன மருந்துகளுக்கு மாற்றாகும் இயற்கை மருத்துவங்கள் என்னென்ன... கேச பராமரிப்பு மருத்துவர் தலத் சலீமிடம் கேட்டோம்.
``கடைகளில் விற்பனை செய்யப்படுகிற பேன் கொல்லி மருந்துகள், ஷாம்பூகளில் `பெர்மெத்ரின் (Permethrin)' என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதற்குப் பேன்களை அழிக்கக்கூடிய திறன் உள்ளது. ஆனால் எளிதில் தசைப்பகுதியை ஊடுருவிச் செல்லக்கூடியது. இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தி பக்க விளைவுகளுக்கும் வழிவகுக்கலாம். குழந்தைகள் என்றால் உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே இதுபோன்ற மருந்துகளை மருத்துவர்கள் 5-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்யமாட்டார்கள்.
இந்த மருந்துகளைப் பயன்படுத்துவோர் அவற்றை நேரடியாகத் தலைக்குத் தேய்க்காமல், அதற்கும் முன் `பேட்ச் டெஸ்ட் (Patch test)' என்றொரு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் பயன்படுத்தவிருக்கும் பேன் கொல்லி ஷாம்பூவை சிறிதளவு காதுக்குப் பின்புறத்தில் உள்ள சரும பகுதியில் தடவி, அரை மணிநேரம் வைத்திருக்க வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஷாம்பூ தடவப்பட்ட இடத்தில் ஏதாவது வீக்கமோ, அரிப்போ அல்லது சிவந்தோ போயிருந்தால் அந்த மருந்தைத் தலைக்குத் தேய்க்கக் கூடாது. பாதிப்புகள் எதுவும் இல்லாதபட்சத்தில் மட்டும் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Also Read: உதிராமல் தடுப்பது ரொம்ப ஈஸி! - ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்
அதுபோல் ஒவ்வொரு முறையும் குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பேன் தொல்லை அதிகமாக உள்ளதென்று அதிகளவு ஷாம்பூவை தலையில் தேய்க்கும்போது அது முகம், கழுத்து, காது பகுதிக்கெல்லாம் வழிந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் அந்த ஷாம்பூ எவ்வளவு நேரம் தலையில் இருக்க வேண்டும் என்று பாட்டிலில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தைத் தாண்டி வைத்திருக்கக் கூடாது.
இதுபோன்ற ரசாயன பேன் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் இதற்குப் பதிலாக வேப்ப எண்ணெய்யை உபயோகிக்கலாம். இதன் வாசனை மட்டும் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். தவிர இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.
முதலில் தலையை நன்றாக வாரி சிக்கெடுத்துவிட்டு, நீங்கள் ரெகுலராக பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சில துளிகள் வேப்ப எண்ணெய்யைக் கலந்து தலையில் தேய்க்க வேண்டும். அரை மணிநேரத்திற்குப் பிறகு பேன் சீப்பால் தலையை வாரினால் வேப்ப எண்ணெய் காரணமாக மயக்க நிலையில் உள்ள பேன்கள் அனைத்தும் வெளியே வந்துவிடும். பிறகு தூய்மையான நீரில் கூந்தலை நன்றாக அலச வேண்டும். கடைசியாகச் சிறிதளவு நீரில், இரண்டு, மூன்று துளிகள் வினிகரை (Vinegar) கலந்து அதனைக் கொண்டு தலையை அலச வேண்டும். வினிகரில் உள்ள அமிலத்தன்மை தலையில் உள்ள ஈறுகளை அழித்துவிடும்.
பள்ளி செல்லும் குழந்தைகள்தான் பெரும்பாலும் பேன், ஈறு பிரச்னைகளால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுக்குத் தலையைத் தூய்மையாக வைத்திருப்பதற்கான வழிமுறைகளைப் பெற்றோர்களைச் சொல்லித் தர வேண்டியது அவசியம்" என்கிறார் தலத் சலீம்.
source https://www.vikatan.com/health/healthy/trichologist-explains-about-side-effects-of-lice-shampoo-chemicals
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக