Ad

வியாழன், 26 நவம்பர், 2020

`இந்து மக்களுக்கு பா.ஜ.க நல்லது செய்திருக்கிறதா?' - அமித்ஷாவுக்கு சவால் விடும் ஆர்.எஸ்.பாரதி

'ஊழல் - வாரிசு அரசியல்' என தி.மு.க-வைக் குறிவைத்து அமித் ஷா கத்தி வீச.... 'அரசு விழாவில் அரசியல் பேசலாமா...' என்ற கேள்வியில் ஆரம்பித்து 'எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை, கரடி பொம்மை, கண்ணாடி காமெடி... என எள்ளும் கொள்ளுமாக வெடித்துச் சிதறுகிறது தி.மு.க தரப்பு.

இந்த நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியைச் சந்தித்துப் பேசினோம்.

''இந்து மக்களின் பாதுகாவலராகக் காட்டிக்கொள்ள பா.ஜ.க-வோடு தி.மு.க-வும் முட்டி மோதுகிறதே?''

உதயநிதி ஸ்டாலின்

''எங்களுக்கு ராமர், முருகர் என்று எந்த வேறுபாடும் கிடையாது. எல்லாமே ஒன்றுதான். இந்து மக்களுக்கு தி.மு.க செய்த நல்ல காரியங்களைப் போன்று வேறு எந்த கட்சியாவது செய்தது உண்டா?... பா.ஜ.க ஆளுகிற மாநிலத்திலேயேகூட, இந்து மக்களுக்கு அவர்கள் ஏதேனும் நல்லது செய்திருக்கிறார்களா?... அமித் ஷாவுக்கு சவாலாகவே நான் இதைக் கேட்கிறேன்.

வேல் யாத்திரை என்பது இப்போது வந்துள்ளது. எங்கள் தலைவர் 'நமக்கு நாமே' என்று ஏற்கெனவே தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்தவர். கடந்த 2019 தேர்தலில், உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தவகையில், வருகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, இப்போதே தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கிவிட்டார் அவ்வளவுதான்''

''மனு நீதி, பெண்களைக் கொச்சைப்படுத்துகிறது என்று பேசிய வி.சி.க தலைவர் மீது வழக்கு பதியப்பட்டதை மட்டும் கண்டித்த தி.மு.க., மனு நீதி பற்றி மறந்தும் வாய்திறக்கவில்லையே... ஏன்?''

''இந்த விவகாரத்தில், பழிவாங்கும் நோக்கோடு திருமாவளவனைக் கைதுசெய்யும் பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டதைத்தான் தி.மு.க கண்டித்தது. மற்றபடி மனு நீதியில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது தனிப்பட்ட விவாதத்துக்கு உரிய வேறு விஷயம். அதில் தி.மு.க தலையிடவில்லை.

'நான் பட்டியிலின மக்களுக்கு எதிராகப் பேசினேன்' என்றுகூறி என்னைக் கைது செய்தார்கள். அப்போது திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்டு தமிழக அரசியல் தலைவர்கள் அனைவருமே என் கைது நடவடிக்கையைக் கண்டித்துப் பேசினார்கள். எனவே, ஒருவர் தவறாகப் பேசியிருந்தார் என்றால் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதில் தவறில்லை. ஆனால், கைது என்று பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்வதைத்தான் கண்டிக்கிறோம். பத்திரிகையாளர்களை அநாகரிகமாகப் பேசிய எஸ்.வி.சேகர், நீதிமன்றத்தையே அவமதித்த ஹெச்.ராஜா போன்றோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே... ஏன்?''

திருமாவளவன்

''சமூக நீதி பற்றிப் பேசுகிற தி.மு.க., 'உண்மையிலேயே மனு நீதி, பெண்களை கொச்சைப்படுத்துகிறதா' என்பது பற்றி மட்டும் கருத்து சொல்லத் தயங்குவது ஏன்?''

''ஆரிய மாயை-யில் இதுபோன்ற கருத்துகளை எழுதியதாக அறிஞர் அண்ணா மீதே வழக்குகள் தொடுக்கப்பட்டன... நீதிமன்றத்தில் தண்டனையும் வழங்கப்பட்டது. ஜனநாயக நாட்டில் யாரும் கருத்து தெரிவிக்கலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் தனிப்பட்ட உரிமை.

இப்போது மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டிருந்த அருந்ததி ராயின் புத்தகத்தை, யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ் நபர் எதிர்ப்புத் தெரிவித்தார் என்பதற்காக நீக்கம் செய்கிறார்களே. அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம். ஏனெனில், எழுதுவது எழுத்தாளரின் உரிமை. அவரது கருத்தில் உடன்படுவதும் உடன்படாததும் படிப்பவர்களின் மனநிலையைச் சார்ந்தது!''

''தனிமனித எழுத்துரிமை, பேச்சுரிமை பற்றி அக்கறைப்படுகிற தி.மு.க., 'மாரிதாஸ், தி.மு.க மீது அவதூறு பரப்புகிறார்' எனக்கூறி காவல்துறையில் புகார் கொடுக்கலாமா?''

''அதாவது, எழுத்தாளர்கள் உரிமை பறிக்கப்படக்கூடாது... மதிக்கப்படவேண்டும். அதேசமயம் தவறாக ஒருவர் எழுதுகிறார் என்றால், சட்டப்படி அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்யலாமே தவிர, அவரைக் கைது செய்து துன்புறுத்த வேண்டும் என்ற அளவுக்கு கிரிமினல் வழக்காகப் பார்க்கவேண்டியதில்லை. அது யாராக இருந்தாலும் தி.மு.க-வின் நிலைப்பாடு இதுதான்.

அதேசமயம், திட்டமிட்டு அவதூறு பரப்பப்படும்போது அவர்கள் மீது உரிய ஆதாரத்தின் அடிப்படையில் புகார் கொடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என தி.மு.க கோருகிறது. அந்தப் புகாரில் உண்மை இருக்கிறதா, சம்பந்தப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா என்பதையெல்லாம் சட்டப்படி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டியது காவல்துறை-நீதித்துறையின் கடமை.''

முத்தையா முரளிதரன் - விஜய் சேதுபதி

''அண்மையில் '800 திரைப்படத்தில், விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது' என அரசியல் கட்சியினர் அனைவரும் கருத்து சொன்னபோதும், தி.மு.க மட்டும் எந்தவித கருத்தும் சொல்லாமல் நழுவிவிட்டதே ஏன்?''

''பொதுவாக, சர்ச்சைக்குரிய விஷயங்களில் தி.மு.க கருத்து சொல்வதில்லை. மற்றவர்கள் கருத்து சொல்கிறபோது பிரச்னைகள் வருவது இல்லை. ஆனால், தி.மு.க கருத்து சொன்னால் மட்டும், அதற்கு நாக்கு, மூக்கு ஒட்டி பிரச்னையை வேறு திசையில் பெரிதாக்கிவிடுகிறாகள். அதனால், அண்ணா சொல்லியதுபோல், 'ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களில் தேவையற்று ஆராய்ச்சிகள் செய்து சண்டை போட்டுக்கொண்டிராமல், அதைத் தவிர்த்துச் செல்கிறோம்'.''

''சமூக நீதி பேசுகிற இந்த மண்ணில்தானே இரட்டைக் குவளை அவலங்களும், ஆணவப் படுகொலைகளும் அரங்கேறி வருகின்றன?''

''புத்தர் காலத்திலிருந்தே இந்தப் பிரச்னைகள் இருந்துகொண்டிருக்கின்றன. ஒரேநாளில் அனைத்தும் மாறிவிடவில்லை. மற்றபடி இந்த 50 ஆண்டுகால ஆட்சியில், திராவிட இயக்கங்கள் எடுத்துக்கொண்ட லட்சியங்களின் மூலமாக பல வளர்ச்சிகளை எட்டியுள்ளோம்.

அண்ணா - பெரியார் - காமராஜர்

'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான 1950-களில்தான் 'பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இந்த சமூக அநீதியைக் கண்டித்து அண்ணாவும் பெரியாரும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகப் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து காமராஜர் - பிரதமர் நேருவின் முயற்சியால் முதன் முறையாக சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த 70 ஆண்டுகால ஓட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேறியிருக்கிறார்கள் என்றால், அது தி.மு.க செய்த சமூக நீதி சாதனை அல்லவா?''

Also Read: நிவர்: தத்தளிக்கும் வீடுகள்; மூழ்கிய பயிர்கள்; வேரோடு சாய்ந்த மரங்கள்! - வேலூர் நிலவரம்

''தி.மு.க-வின் வாரிசு அரசியல் பற்றியும் விமர்சித்திருக்கிறாரே அமித் ஷா?''

''ஆந்திர ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக குமாரசாமி, ஒடிஸா நவீன் பட்நாயக், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே இப்படி எல்லோருமே வாரிசுகள்தானே?... இந்தியாவில் வாரிசு அரசியல் குற்றச்சாட்டெல்லாம் எடுபடவில்லை.

அமித் ஷா

தமிழ்நாட்டிலும்கூட எம்.ஜி.ஆர் இறந்தபிறகு அந்தக் கட்சியில் யார் முதல் அமைச்சராக பொறுப்புக்கு வந்தார்?... நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் யாரேனும் வந்தார்களா... எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என்.ஜானகியைத்தானே முதல்வராகக் கொண்டுவந்தார்கள். அவருக்குப் பிறகும்கூட ஜெயலலிதாவைத்தானே மக்கள் முதல்வராக ஏற்றுக்கொண்டார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும்கூட, அவரது உடன்பிறவா சகோதரியான சசிகலாவைத்தானே முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் அவரும் சிறை செல்ல நேர்ந்ததால், வேறு வழியின்றி எடப்பாடியை முதல்வராக்கிவிட்டுச் சென்றார்... அவ்வளவுதானே! 90-களிலிருந்தே எங்களைப் பார்த்து வாரிசு அரசியல் என்று எதிர்க்கட்சியினர் சொல்லிக்கொண்டுதான் வருகிறார்கள். ஆனாலும் நாங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக்கொண்டேதான் இருக்கிறோம்!''

Also Read: நிவர் புயல்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

''கனிமொழியின் தோழியான டாக்டர் பூங்கோதை அண்மையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வெளிவந்த செய்தியோடு, '2 ஜி வழக்கு - சாதிக் பாட்ஷா தற்கொலை' விவகாரங்களும் இணைத்துப் பேசப்படுகிறதே?''

கனிமொழி - பூங்கோதை

''கடுகளவும் உண்மை இல்லாத செய்திகள் அவை!''

(விறுவிறுப்பான இந்தப் பேட்டியின் தொடர்ச்சியை நாளை ஜூனியர் விகடன் இதழில் படியுங்கள்.)



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-done-any-good-to-the-hindu-people-dmk-rs-bharathi-challenges-amit-shah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக