Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

சென்னை: புயலால் சகோதரி வீட்டுக்குச் சென்ற முதியவர் - கொள்ளையைக் காட்டிக் கொடுத்த மதுவிருந்து!

சென்னை அசோக்நகர், 15-வது அவென்யூவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (65). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். பார்த்தசாரதியும், அவரின் மனைவியும் தனியாக இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், நிவர் புயல் காரணமாக பார்த்தசாரதியும் அவரின் மனைவியும் பெசன்ட் நகரில் உள்ள பார்த்தசாரதியின் சகோதரியின் வீட்டுக்கு 24-ம் தேதி சென்றனர். புயல் கடந்த பிறகு வீட்டுக்கு 26-ம் தேதி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 வெள்ளி விளக்குகள், வெள்ளி டம்ளர்கள், கைக்கடிகாரங்கள் ஆகியவை கொள்ளை போயிருந்தன.

கைதானவர்கள்

வயதான காலத்தில், தங்களின் சேமிப்புகள் கொள்ளை போனதால் பார்த்தசாரதியும் அவரின் மனைவியும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் பார்த்தசாரதி புகாரளித்தார். அதன்பேரில் துணை கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர்கள் தீபக்குமார், ராஜேஸ்வரி, எஸ்.ஐ மோகன், தலைமைக் காவலர்கள் பாலு, சங்கர், முதல்நிலைக் காவலர்கள் சரவணன், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், கொள்ளை நடந்த வீட்டில் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் ரேகைகளைப் பதிவு செய்தனர். சிசிடிவி கேமராப் பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

புயல் காரணமாக தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. மேலும், வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதை சிசிடிவி மூலம் போலீஸார் உறுதிப்படுத்தினர். அதனால், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. இந்தச் சூழலில் பார்த்தசாரதியின் வீட்டின் அருகில் வசித்து வரும் ராஜேஷ் என்கிற புளிமூட்டை ராஜேஷ் (19), பிரகாஷ் (20), விக்கி என்கிற விக்னேஷ் (21) ஆகிய 3 பேரின் நடவடிக்கைகளில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவர்களை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி, நண்பர்களுக்கு மது விருந்து அளித்த தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.

மது

Also Read: `250 பவுன் நகைக் கொள்ளை; கேமராவில் பதிவான 2 பேர்!’ - வேகமெடுத்த வேலூர் போலீஸ்

வேலைக்குச் செல்லாத 3 பேருக்கும் இவ்வளவு பணம் கிடைத்தது எப்படி என போலீஸார் விசாரித்தனர். அப்போது விக்கி என்கிற விக்னேஷிடம் போலீஸார் விசாரித்தபோது, அவரின் பையில் தங்க வளையல் ஒன்றிருந்தது. அது, பார்த்தசாரதி மனைவியின் தங்க வளையல் எனத் தெரிந்தது. உடனடியாக தங்க வளையல் குறித்து போலீஸார் விக்கியிடம் விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய கூட்டாளிகள் புளிமூட்டை ராஜேஷ், பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து பார்த்தசாரதியின் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார். அதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து 30 சவரன் தங்க நகைகள், 6 வெள்ளி விளக்குகள், வெள்ளி டம்ளர்கள், கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்களைக் கைது செய்தததோடு நகைகளைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாரை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாகப் பாராட்டினார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான ராஜேஷ் , பிரகாஷ், விக்கி ஆகிய 3 பேர்களில் பிரகாஷ் மட்டும் பழைய குற்றவாளி. மற்ற இருவரும் புதியவர்கள். புயல் காரணமாக வீட்டை பூட்டி விட்டுச் சென்ற நேரத்தில், இவர்கள் கைவரிசை காட்டியிருக்கின்றனர்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-3-in-robbery-complaint-within-3-hours-of-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக