Ad

திங்கள், 30 நவம்பர், 2020

ஹிட்லிஸ்ட்டில் ஷிவானி, பதறும் பாலாஜி, நிதானிக்கும் ஆரி...பிக்பாஸ் – நாள் 57

சம்யுக்தாவின் வெளியேற்றம் இந்த வார நாமினேஷனில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம்... ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஷிவானி எவிக்ஷன் பிராசஸ் லிஸ்ட்டில் வந்திருக்கிறார். வாக்காளர்களுக்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம். மற்ற போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது எவ்வித தனித்தன்மையும், செயலும் இல்லாமல் இருக்கும் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேறினால் ஆட்டம் சூடு பிடிக்கும்.

இதில் குறிப்பாக ஷிவானி வெளியேறினால் பாலாஜியின் பலம் சற்று குறைந்து விடும் போல் தெரிகிறது. அந்தச் சூழலை அவர் எப்படி எதிர்கொள்வார் என்று பார்க்க வேண்டும். இதன் எதிர்முனையில் நிஷா வெளியேறினால் அர்ச்சனா குழு எப்படி இயங்குகிறது என்பதையும் பார்க்க ஒரு வாய்ப்பு.

‘சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ’ மாதிரி ‘அமாவாசை’ வாய்ப்பு ரமேஷிற்கு அடிக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த வாரம் எவிக்ஷனிலிருந்து தப்பித்தது மட்டுமல்லாமல் இந்த வாரம் கேப்டன் ஆகி, இந்த வார நாமினேஷனில் இருந்தும் தப்பித்திருக்கிறார். முயல் – ஆமை கதை போல் ஆகி விடுமோ?

ஓகே.. 57-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

வேகமான தாளயிசையைக் கொண்ட ஏதோ ஒரு பாட்டு. மார்கழி குளிரில் பச்சைத் தண்ணீரை மேலே ஊற்றினால் குளிரில் உடம்பு ஒரு உதறு உதறும் அல்லவா? ஆரி நடனமாடும் பாணி பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. அடுத்த முறை கவனித்துப் பாருங்கள். கிச்சன் மேடையில் ஸ்டைலாக அமர்ந்தபடி டீயை கலக்கிக் கொண்டிருந்தார் ரம்யா. (ச்சே... என்ன பொண்ணுப்பா இது... சமையல் இடத்துல ஒரு பொறுப்பு வேணாம்?!)

'‘கேபியின் மூக்கு எக்ஸ்ட்ராவாக வளர்ந்திருக்கிறது'’ என்று ஆராய்ச்சி செய்து பிக்பாஸிடம் ரியோவும் சோமுவும் புகார் அளித்துக் கொண்டிருந்தார்கள். ரம்யாவையும் சோமுவையும் இணைத்து வைத்து “என்னாச்சு... ரெண்டு வாரமா ஃபீலிங்க்ஸ் குறைஞ்சுடுச்சா..?” என்று கேபி கிண்டல் செய்து கொண்டிருந்தார். “பூ போட்ட சட்டை போட்டுப் பாரு... வொர்க் அவுட் ஆகலாம்” என்று அவர் பாலாஜியை குறிப்பிட்டுச் சொன்ன காமெடி சுவாரஸ்யம்.

இந்த வார தலைவர் பதவிக்கான போட்டி பற்றிய அறிவிப்பு வந்தது. பாலாஜி, ரமேஷ், ரம்யா ஆகியோர் இதில் இருந்தார்கள். உடல் வலிமையைக் கோரும் போட்டி என்பதால் பாலாஜி இதில் எளிதில் ஜெயித்து விடுவார் என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் எதிர்பாராதவிதமாக ரமேஷ் வென்றது ஆச்சர்யம்.

வெவ்வேறு நிற க்யூப்கள் மேலே வலையில் கொட்டப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் மூவரும் கீழேயிருந்து அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்குள் தள்ளி சேகரிக்க வேண்டும். இதர போட்டியாளர்களின் க்யூப்களை தள்ளி விட்டால் அது இவர்களின் பாயின்ட்டில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.

சற்று சிக்கலான விளையாட்டு. போட்டி துவங்குவதற்கு முன்பே சலசலவென்ற குழப்பம். கேப்டன் ரியோ ஒட்டுமொத்த மேற்பார்வையை பார்க்க, ஆரி, சோம் போட்டியாளர்களை தனித்தனியாக கவனிப்பார்கள்.

கோட்டின் வெளியே விழுந்ததை எடுத்து நைசாக தன் கூடையில் போட்டுக் கொண்டார் ரம்யா. ஒரே களேபரமாக இருந்தது. மூன்று போட்டியாளர்களும் ஒரே நேரத்தில் தட்டும் போது, யார் அதில் தவறு செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். அந்தந்த அணியின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். பாலாஜியை நோக்கி அனிதா அதிகமாக கத்திக் கொண்டிருந்தார்.

போட்டி முடிந்ததும் ரமேஷ் சேகரித்த க்யூப்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் பாலாஜி இதை ஏற்கவில்லை. தன்னை மேற்பார்வை பார்த்த ஆரியை குறை சொல்ல ஆரம்பித்தார். எனில் ஆரம்பத்திலேயே வேறு நபரை போடச் சொல்லியிருக்கலாம். ரியோ தொடர்ந்து பாலாஜியை கன்வின்ஸ் செய்ய, "சரிப்பா... என்னை விட்ருங்க... நான் சொன்னதை எச்சி தொட்டு அழிச்சிருங்க என்று வெறுத்துப் போனார் ஆரி.

பிக்பாஸ் நாள் 57

வீட்டில் சில குழந்தைகள் எல்லாவற்றிற்கும் அழும். பிடிவாதம் செய்யும். மல்லுக்கட்டும். இது அவர்களாக கற்றுக் கொள்ளும் கவனஈர்ப்பு தந்திரம். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தன்னையே கவனிக்க வேண்டும் என்று செய்யும் உத்தி. அமைதியான குழந்தைகளுக்கு இது தெரியாமல் ‘தேமே’ என்று அமர்ந்திருக்கும். அழும் குழந்தைகளை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தால் அவற்றின் அடம் இன்னமும் அதிகரித்துக் கொண்டே போகும்.

இப்படியாக பாலாஜியும் கவனஈர்ப்பு தந்திரம் தெரிந்த ஒரு போட்டியாளர். எனவே முடிவுகளை ஒப்புக் கொள்ளாமல் அடம்பிடிக்க ஆரம்பித்தார். தன் முடிவின் மேல் தவறு வந்து விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் ரியோ. பாவம், ஒரு கட்டத்தில் ‘படுத்தே விட்டான்னய்யா’ என்கிற ரேஞ்சிற்கு பாலாஜியிடம் மல்லுக் கட்டியிருந்தார். பிறகு பாவம் பார்த்து ரியோவை ரிலீஸ் செய்த பாலாஜி, ஆரியை மட்டும் மன்னிப்பதாயில்லை.

பாலாஜி ஆட்சேபம் செய்ததை கழித்துப் பார்த்த போதும் ரமேஷின் எண்ணிக்கை அதிகம் வந்தது. எனவே வேண்டாவெறுப்பாக இந்த முடிவை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலைக்கு பாலாஜி தள்ளப்பட்டார். ரமேஷ் கேப்டன் ஆனால் அர்ச்சனா குழுவின் ராவடி அதிகமாகி விடும் என்று பாலாஜிக்குத் தெரியும். எனவேதான் இந்த அழும்பு. "தலைவர் ஆனது பிரச்னையில்ல. ஆரி..ப்ரோ மாத்தி மாத்தி பேசினாரு" என்று சனத்திடம் பிறகு அனத்திக் கொண்டிருந்தார் பாலாஜி.

பிக்பாஸ் நாள் 57
ஆக... ரமேஷ்தான் இந்த வார தலைவர். (என்னவொரு டிவிஸ்ட்!) ‘யாரும் தூங்கக்கூடாது’ என்று அவர் சபையில் அறிவித்த போது போட்டியாளர்களால் சிரிப்பைத் தாங்க முடியவில்லை. "நீங்களா சொல்றது?!” என்று நக்கலடித்தார் சனம்.

"பாத்ரூம் அணிக்கு ஆள் எடுக்கிறார்கள்’' என்று சொல்லப்பட்டதும் அடித்துப் பிடித்து ஓடி வந்த அனிதா, "அதற்கு ஒரே ஆள்தான்’' என்றதும் வந்த வேகத்திலேயே பின்னால் ஓடி விட்டார். இந்தப் பணியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார் ரம்யா. கிச்சன் அதிகாரம் மறுபடியும் அர்ச்சனா குழுவிற்கு வந்தது. கூட நிஷா, கேபி மற்றும் ஆரி இருப்பார்கள். (ராஜமாதா சிவகாமி கெட்டப்பில் தன்னை உணர்ந்திருப்பார் அர்ச்சனா... இனிமேல் அன்பு குழம்பு, அன்பு பொறியல். அன்பு கூட்டு, அன்பு சுக்கா... என்று வீடு முழுக்க அன்பு இறைபடும்).

சோம், ரியோ, அனிதா, சனம் ஆகியோர் பாத்திரம் கழுவும் அணி. மீதமிருப்பவர்கள் ஹவுஸ் கீப்பிங்.

"ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் அணி கேப்டனாக இருக்கலாம்" என்கிற புதிய பாணியை அறிமுகப்படுத்தினார் தலைவர். (பார்றா!). துணைத்தலைவராக பாலாஜியை தேர்ந்தெடுத்தது ஒரு நல்ல முடிவு. ஆனால் இந்தப் பொறுப்பை பாலாஜி ஏற்றுக் கொள்ளவில்லை.

“தூங்கறது. மைக் மாட்டாம இருக்கறது…இதையெல்லாம் நான்தான் அதிகம் செய்வேன். நான் எப்படி இன்னொருத்தருக்கு அட்வைஸ் சொல்ல முடியும்?” என்பது போல் சொல்லி வெளிப்படையாகவே இந்தப் பதவியை மறுத்து விட்டார். “அப்படியும் மீறி பொறுப்பைக் கொடுத்தா நான் செய்ய மாட்டேன். வேணும்னா என்னை நாமினேஷன் பண்ணிக்கோங்க'’ என்று அவர் சொன்னதெல்லாம் பொறுப்பின்மையின் உச்சம். எனவே வேறுவழியில்லாமல் அவரை விட்டுவிட்டு ஆரியின் பரிந்துரையின் பேரில் துணைத் தலைவராக நிஷாவைத் தேர்ந்தெடுத்தார்கள்.

'‘ரமேஷிற்கு போய் நான் துணைத் தலைவரா?'’ என்கிற ஈகோ பாலாவைத் தடுத்திருக்க வேண்டும். உண்மையில் அதுவொரு நல்ல வாய்ப்பு. அர்ச்சனா குழுவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த பாலாஜிக்கு கிடைத்த நல்ல அஸ்திரம். தனது ஆணவப் போக்கினால் அதை தவற விட்டு விட்டார் பாலாஜி.

பிக்பாஸ் நாள் 57

“மறுபடியும் சொல்றேன் பாலா... முடிவு என்னடோது... இதைப் பத்தி பேசி பேசி பெரிசாக்கிடாதீங்க” என்று ரியோ வந்து மீண்டும் தெளிவுப்படுத்த “நான்தான் மாத்தி மாத்தி சொல்றேன்னு சொன்னேல்ல... நான் சொன்ன கருத்தையெல்லாம் அவைக்குறிப்புல இருந்து நீக்கியாச்சு’' என்று பரிதாபமாக சொன்னார் ஆரி. (‘மாப்பிள்ளை நான்தான்.. சட்டை அவரோடது இல்ல’ என்கிற காமெடி மாதிரி ஆகி விட்டது.)

இந்தப் பிரச்னையை பாலாஜி பிறகு விசாரணை சபையில் இழுப்பார் என்று ரியோவிற்கும் ஆரிக்கும் நன்கு தெரியும். எனவே சர்வ ஜாக்கிரதையாக ஹேண்டில் செய்ய முயற்சித்தார்கள். என்றாலும் பாலாஜி அடங்கவில்லை. "ஆரி பொய் சொல்றார்... மாத்தி மாத்தி பேசறார்" என்று பிறகு ஷிவானியிடம் சிணுங்கிக் கொண்டிருந்தார். அதற்கு சற்று நியாயமான எதிர்வினையைத் தந்து கொண்டிருந்தார் ஷிவானி.

நாமினேஷன் வைபவம் ஆரம்பித்தது. தலைவர் ரமேஷை நாமினேட் செய்ய முடியாது. (தப்பிச்சிட்டார்டா!) ‘போனால் போகட்டும் போடா’ பாடலை ஆரம்பத்திலேயே நல்ல சகுனமாக பாடிக் கொண்டிருந்தார் ஆஜீத்.

நாமினேஷனுக்காக தனியறையில் சொல்லப்பட்ட காரணங்களை இந்த முறையும் சபையில் தெரிவித்து கலகம் செய்தார் பிக்பாஸ். இதில் பெயர் குறிப்பிடவில்லையென்றாலும் எளிதாக யூகிக்கப்படுவது போலவே இருந்தன. ‘சிரிச்சிக்கிட்டே ஹர்ட் பண்றாங்க’ என்று சொல்லப்பட்ட போது ரம்யா உட்பட வீடே விழுந்து விழுந்து சிரித்தது.

பிக்பாஸ் நாள் 57
வெளியேற்ற நடைமுறைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் இந்த வார பட்டியல்: ஷிவானி, ஆஜீத், ஆரி, ரம்யா, சனம், அனிதா மற்றும் நிஷா.

கட்டுரையின் துவக்கத்தில் சொன்னபடி மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஷிவானி, ஆஜீத், நிஷா ஆகிய மூவரில் எவராவது ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டால் ஆட்டம் சூடுபிடிக்கும். “என்னது லிஸ்ட்ல நான் இல்லையா?” என்று ஆச்சரியப்பட்டார் பாலாஜி.

‘'பாலாஜியின் நிழலாக இருக்கிறார் என்று காரணம் சொல்லப்பட்டதால், நேரடியா என்னைப் பத்தி சொல்ல ஒண்ணுமே இல்லையா?” என்று ரம்யாவிடம் சிணுங்கிக் கொண்டிருந்தார் ஷிவானி. அந்த வீட்டில் இருக்கும் செட் பிராப்பர்ட்டிகளில் ஒன்று போல இருக்கும் ஷிவானியை தனியாகச் சொல்ல ஏதுமில்லை. அது போல் உருப்படியாக எதையும் அவர் செய்யவில்லை. இதை அவரே உணர்ந்திருக்க வேண்டும்.

ரியோவும் பாலாஜியும் தனியாக ஒதுங்கி கடந்த வார பாலிட்டிக்ஸ் விவகாரங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். "உங்கள் அணியில் அன்பு இருக்கும் போது எங்கள் அணியில் இருக்காதா... தவறான ஆளை நாங்கள் ‘best performer’ ஆக எப்போதும் பரிந்துரைப்பதில்லை…" என்பது போன்ற பழைய விவகாரங்கள்தான். அவரவர்களின் தவறுகளை மழுப்பி நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள். "எல்லாக் கோட்டையும் அழிப்போம். புதுசா ஆடுவோம்'’ என்ற சபதத்துடன் விடைபெற்றார் பாலாஜி. (உருப்படியான ஃபுட்டேஜ் இல்லாமல் பிக்பாஸ் எடிட்டிங் டீம் அல்லாடுவது நன்றாகவே தெரிகிறது).

'என்னை எப்படி இந்த வாரம் விட்டு வெச்சானுங்க... இது இலுமினாட்டிங்க சதியா இருக்குமோ?' என்கிற ரேஞ்சிற்கு கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் ரியோ. "அதான் போன வாரம் வெச்சு உன்னை நல்லா அடிச்சாங்கள்ல.. அவங்களுக்கும் போரடிக்கும்ல. வேற ஆளைப் பார்க்க வேணமா?” என்று சோம் கிண்டலடிக்க "டேய் நீங்கள்லாம் எனக்கு உண்மையிலேயே ஃபிரெண்ட்ஸ்தானா... இல்ல நானாதான் அப்படி தப்பா புரிஞ்சிட்டிருக்கேனா?” என்று நொந்து போய் சொன்னார் ரியோ. (நண்பர்களின் வட்டாரங்களில் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்ளும் நினைவுகள் பலருக்கும் வந்து போயிருக்கும்).

பிக்பாஸ் நாள் 57

அடுத்ததாக, பற்களின் பாதுகாவலன் என்கிற விளம்பரதாரர் நிகழ்ச்சி. இதில் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை. ஆரி நடுவராக இருக்க, வீடு இரண்டு அணிகளாகப் பிரிந்து அடித்துக் கொள்ள வேண்டுமாம். பந்துகளை யார் தடுக்கிறார்கள், அடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றி. அனிதாவின் மூக்கில் ரமேஷ் பந்தை அடித்தார் என்பதைத் தவிர இந்த டாஸ்க்கில் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை.

நமக்கு கூட அமாவாசை, பெளர்ணமி எல்லாம் மறந்து விடும் போலிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொன்றையும் துல்லியமாக நினைவு வைத்துக் கொள்கிறார்கள். நமக்கு சந்தேகம் வந்தால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் போல. மக்கள் கார்த்திகை தீபத்தைக் கொண்டாட, அனிதா பாட்டு பாட இன்றைய நாள் முடிந்தது.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-4-episode-57-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக