தூத்துக்குடி தி.மு.க., தெற்கு மாவட்டச் செயலாளராகவும், திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமானவர் அனிதா ராதாகிருஷ்ணன். `உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சியான வி.சி.கவுக்கு ஒரு வார்டைக் கூட ஒதுக்கித் தரவில்லை, தொடர்ந்து எங்களை ஒதுக்கி வருகிறார்' என ஏற்கெனவே வி.சி.கவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், வி.சி.கவின் ஆதரவுடன் வெற்றி பெற்ற மேலத்திருச்செந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார் அனிதா.
இதுகுறித்து விளக்கம் கேட்டதற்கு ஒருமையில் பேசி, ஆட்களை அனுப்பி மிரட்டுகிறார் என, அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வி.சி.க செயலாளர் முரசு தமிழப்பன். இதுகுறித்து அவரிடம் பேசினோம், “உள்ளாட்சித் தேர்தலில் எங்க கட்சி, தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றது. தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் எங்க கட்சி வலிமையா இருக்குற திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேலத்திருச்செந்தூர் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உட்பட தெற்கு மாவட்டம் முழுமைக்கும் 6 ஒன்றியக் கவுன்சிலர் வார்டுகளை வி.சி.கவிற்கு ஒதுக்கச் சொல்லி கேட்டோம். ஆனால், ஒரு வார்டைக்கூட அவர் ஒதுக்கித் தரவில்லை.
மேலத்திருச்செந்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக மகாராஜன் என்பவர் வெற்றி பெற்றார். ஊராட்சி மன்றத் தலைவருக்கு கட்சி கிடையாது என்றாலும், வி.சி.கவின் ஆதரவிலேயே தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மகாராஜன், வி.சி.க தலைவர் திருமாவளவனை சந்தித்த பிறகே ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார் அனிதா ராதாகிருஷ்ணன். தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் தி.மு.கவில் இணைந்ததாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் அனிதா அண்ணாச்சியிடம் நான் போனில் விளக்கம் கேட்டேன்.
”உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 6 வார்டுகளில் இடம் ஒதுக்கிக்கேட்டோம். கூட்டணிக் கட்சியாக இருந்த போதிலும் நீங்க ஒரு இடம் கூட ஒதுக்கித் தரலை. ஆனா, எங்க கட்சி ஆதரவோட வெற்றி பெற்ற ஒரே ஒரு ஊராட்சி மன்றத் தலைவரையும் உங்க பக்கம் இழுத்துட்டீங்களே? இது என்ன அண்ணாச்சி நியாயம்?”னு போனில் கேட்டேன். “நான் யாரை வேணாலும் கட்சியில சேர்ப்பேன். உன் வேலையப் பாரு” என மரியாதைக் குறைவாக பதில் சொன்னார்.
”யாரைக் கட்சியில சேர்த்தா உனக்கு என்ன? என்ன தைரியம் இருந்தா அண்ணாச்சிட்டயே கேள்வி கேட்ப? இனிமேல் இப்படி ஏதாவது கேள்வி கேட்டுக்கிட்டிருந்தா உன் காருல வெடிகுண்டு வச்சி கொன்னுபோடுவோம்”னு சொல்லி வீட்டுக்கு நேர்ல வந்த எம்.எல்.ஏவோட ஆளுங்க என்னை மிரட்டினாங்க. இது சம்மந்தமா அண்ணாச்சி மேல திருச்செந்தூர் ஏ.எஸ்.பியிடம் புகார் கொடுத்திருக்கேன். கூட்டணிக் கட்சிகளுக்குத் தலைமை தாங்கும் தி.மு.கவின் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் அவரிடம் நான் கேட்ட கேள்விக்கு பொறுப்பா பதில் சொல்லுறதை விட்டுட்டு ஒருமையில் பேசுறதும், ஆளுங்களை விட்டு மிரட்டுறதும் சரியா? திருச்செந்தூர் ஒன்றியத்தில் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்ட ஒன்றியக் கவுன்சிலருக்கான வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
அதற்கு, வி.சி.கவை முற்றிலும் புறக்கணித்ததுதான் முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல், பணம் பெற்றுக்கொண்டு திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.கவின் முன்னாள் செயலாளரான வடமலை பாண்டியனின் மனைவி செல்விக்கு தாரை வார்த்தார் எனவும் பரவலா பேசுப்பட்டுச்சு. வி.சி.கவை ஒதுக்கினால் அண்ணாச்சியின் வெற்றி பாதிக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் நிறுத்தப்பட்டால் அவரது வெற்றிக்காக எந்த மனநிலையில் எங்கள் கட்சியினரால் தேர்தல் பணி செய்ய முடியும் என்ற கேள்வி எழும்புகிறது” என்றார்.
Also Read: ``ஜெயக்குமார் வெறும் 10 மணி பேட்டி அமைச்சர்தான்!" - வெடிக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்
தி.மு.கவில் இணைந்த மகாராஜனிடம் பேசினோம், “நானாக விருப்பப்பட்டுதான் தி.மு.கவில் இணைந்தேன். இதில் யாரோட வற்புறுத்தலும் கிடையாது” என்றார். அனிதா ராதாகிருஷ்ணனின் தரப்பில் பேசினோம், “மகாராஜன், ஏற்கெனவே தி.மு.கவில் இருந்தவர், மீண்டும் தி.மு.கவில் அவராக விருப்பப்பட்டுதான் இணைந்துள்ளார். ஒருவர் அவரது விருப்பத்தின்படி எந்தக் கட்சியிலும் சேரலாம். அது அவரவரின் விருப்பத்தைப் பொறுத்தது. வி.சி.க கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் முரசு தமிழப்பன், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அவருக்கும், அவர் கை காட்டிய சிலருக்கும் சீட் கொடுக்காததை மனதில் வைத்துக் கொண்டு வேண்டுமென்றே பேசுகிறார்.
கூட்டணிக்கட்சியின் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் கேள்வி கேட்கலாம் தவறில்லை. அந்தக் கேள்வி அதிகாரம் தூள் பறக்கும் கேள்வியாக இருக்கக்கூடாது. தமிழப்பனின் பேச்சு, அந்த வகையில்தான் இருந்தது. அண்ணாச்சியின் மகன் வயசுதான் தமிழப்பனுக்கும். ”போனை வை” எனச் சொல்லியிருக்கிறார். இது ஒரு சாதாரண விஷயம் இதை அவர்தான் பெருசுபடுத்திக் கொண்டிருக்கிறார்” என்றனர்.
source https://www.vikatan.com/news/politics/vck-thoothukudi-south-district-secretary-complaint-against-trichendur-dmk-mla-anitha-radha-krishnan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக