Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

`தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது!’- உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

``மேல் நாட்டு கலாசாரத்தில் மூழ்கியுள்ள இன்றைய இளைஞர்கள் மதுபானக் கடைகளை நாடும் நிலை அதிகரித்து வருகிறது. மேலும், நாட்டில் லஞ்சம் வாங்குபவர்கள் அதற்காக வெட்கப்படுவதில்லை. இதனால் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது'' என உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி வேதனை தெரிவித்தார்.

நீதிபதி புகழேந்தி

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் புதிதாக சமுதாயக் கூடம், பிரார்த்தனைக் கூடம் மற்றும் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தலைமை வகித்தார். ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சமுதாயக் கூடம் மற்றும் சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலையை திறந்து வைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், ``சுவாமி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் மாபெரும் துறவிகள். மனதில் நல்ல எண்ணம், நோக்கம் இருந்தால் காரியங்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும். முற்றும் துறந்த துறவியரான ராமகிருஷ்ணர், விவேகானந்தர் நூறாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்திய ஒரு அமைப்பு, உலகம் முழுதும் பரவியுள்ளதற்கு, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

நீதிபதி புகழேந்தி

தற்போதைய இளைஞர்களிடையே ஒழுக்க நெறி குறைந்துள்ளது. ஆகவே, ஒழுக்கம், பண்பாட்டைக் காப்பதில் ராமகிருஷ்ண மடத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஒழுக்கமற்ற சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியால் பயனில்லை. பண்பாடு, ஞானம் ஆகியவை மூலம் உலகயே வென்று காட்டிய துறவிதான் சுவாமி விவேகானந்தர்.

Also Read: வேகமெடுக்கும் யானைகள் வழித்தட விவகாரம்... முதுமலையில் முதல் நாள் ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி!

தற்போது மேல்நாட்டு கலாசார மோகத்தில் சிக்கியுள்ள நம் நாட்டு இளைஞர்கள், மதுக்கடைகளை நாடும் நிலை அதிகரித்துள்ளது. கடமையைச் செய்வதற்கு கூட லஞ்சம் வாங்குபவர்கள் வெட்கப்படாத நிலையே உள்ளது. இவர்களைப் போன்றவர்களால் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சத்துக்காக சோரம் போகும் நிலை உள்ளதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை'' என வேதனையை வெளிப்படுத்தும் வகையில் பேசினார்.

விழாவில் பங்கேற்ற நீதிபதிபுகழேந்தி

நிகழ்ச்சியில் மதுரை கேன்பின்ஹோம்ஸ் நிறுவன முதன்மை மேலாளர் ஜெகநாதன், சிதம்பரம் மருத்துவர் வர்மக்கலை சீனிவசான், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, நாகாச்சி ஊராட்சித் தலைவர் ராணிகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/corruption/madras-hc-judge-speaks-about-corruption-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக