Ad

திங்கள், 30 நவம்பர், 2020

''அப்பா சொன்ன கடைசி வார்த்தை... ரஜினி, அஜித்தின் போன் அழைப்பு!'' - சிறுத்தை சிவா

'' வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் நடக்குது. ஆனா, அப்பாவுடைய இறப்பு பேரிழப்பான சம்பவம். ரொம்ப கஷ்டத்தை கொடுத்திருச்சு. நிறைய டாக்குமென்ட்ரி படங்கள் அப்பா டைரக்ட் பண்ணியிருக்கார். நிறைய விருதுகளும் வாங்கியிருக்கார். வெற்றிகரமான மனிதரா அவருடைய துறையில் சாதிச்சு காட்டினவர். 30 வருஷமா டாக்குமென்ட்ரி ஃபீல்ட்ல நிலையா இருந்தவர். அரசாங்கம், மருத்துவம், விவசாயம் சார்ந்த நிறைய டாக்குமென்ட்ரி எடுத்திருக்கார். குறிப்பா, விவசாயம் சார்ந்த டாக்குமென்ட்ரில டாக்டரேட் வாங்கியிருக்கார். அவரைப் பார்த்துதான் சினிமா இயக்குநராகணும்னு ஆசை எனக்குள்ள வந்தது. தாங்க முடியாத துக்கத்துலதான் இருக்கேன். அப்பாவை நினைச்சு எப்போவும் பெருமைப்படுறேன். அப்பாவுக்கு கமர்ஷியல் படங்கள் இயக்கணும்னு ஆசையிருந்தது.

ஜெயக்குமார்

ஆனா, நேரமின்மை காரணமா அப்பாவால டைரக்‌ஷன் பண்ண முடியல. சினிமாத் துறையில் இயக்குநரா என் வளர்ச்சியை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். என் தாத்தா ஏ.கே.வேலன் சினிமால இயக்குநரா 'தை பொறந்தா வழி பொறக்கும்' படம் டைரக்‌ஷன் பண்ணியிருக்கார். தாத்தாவுடைய அருணாசலம் ஸ்டுடியோலதான் பிறந்தது வளர்ந்தேன். அதனால, சினிமா பத்தி தாத்தாவும், அப்பாவும் நிறைய சொல்லியிருக்காங்க. ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து படிச்சு கோல்ட் மெடல் வாங்கிட்டு உதவி இயக்குநரா வேலைப் பார்த்துட்டு சினிமாவுக்கு வந்தேன். ஒரே குடும்பத்தை சார்ந்த தாத்தா, அப்பா மற்றும் நான் மூணு பேருமே சினிமால வேலைப் பார்த்ததை ஆசிர்வாதமா நினைக்குறேன்.

என்னோட முதல் படம் ' Souryam' ரிலீஸூக்கு குடும்பத்துல இருந்த எல்லோரையும் கூட்டிட்டு போயிருந்தேன். இயக்குநரா என்னோட பெயரை திரையில் பார்த்துட்டு அப்பா பெருமையா ஃபீல் பண்ணார். 'வீரம்' படம் முடிச்சிட்டு அப்பாவுக்கு போட்டு காட்டினேன். படம் பார்த்து முடிச்சிட்டு தோள்ல தட்டி கொடுத்தார். இதை மறக்கவே முடியாது. எப்பவும் அப்பா ஆஹோ, ஓஹோனு சொல்ல மாட்டார். குறைவா பேசக் கூடியவர். 'வீரம்' ப்ளாக் பஸ்டர் ஹிட்டானப்போ ரொம்ப சந்தோஷப்பட்டார். எல்லா அப்பாக்களுக்கும் தன்னுடைய மகன் ஜெயிக்குறதைப் பார்க்குறது ரொம்ப பிடிக்கும். அது மாதிரிதான் என்னோட அப்பாவும் சந்தோஷமா ஃபீல் பண்ணார். 'வீரம்' படத்தோட ஷூட்டிங் பிலிம் இன்ஸ்டிட்யூட்ல போயிட்டு இருந்தப்போ அப்பாவும், இவருடைய நண்பர் நடிகர் செந்திலும் வந்து பார்த்தாங்க. என்னோட படங்களின் மேக்கிங் வீடியோவும் அப்பா ரசிச்சு பார்ப்பார்.

அஜித்

ரொம்ப நாளா உடம்பு சரியில்லாம இருந்தாங்க. எங்களால் முடிஞ்சளவுக்கு முயற்சி பண்ணோம். ஆனா, அப்பாவை காப்பத்த முடியாம போயிருச்சு. அப்பாவுக்கு நாங்க மூணு பசங்க. மூத்த அக்கா கமலி சுவிட்சர்லாந்துல இருக்காங்க. அப்பாவுடைய இறுதி சடங்குல கலந்துக்கிட்டாங்க. அடுத்து நான், மூணாவது தம்பி பாலா. தமிழ் மற்றும் மலையாளத்துல நடிச்சிட்டு வர்றார். தம்பியுடைய வளர்ச்சியும் அப்பாவுக்கு சந்தோஷத்தை கொடுத்துச்சு. அப்பாதான் எங்களின் ரோல்மாடல்

இப்போ இருக்குற கொரோனா சூழல்ல நிறைய நண்பர்கள்னால அப்பாவுடைய இறுதி சடங்குல கலந்துக்க முடியல. பலரும், போன்ல தொடர்பு கொண்டு பேசினாங்க. ரஜினி சார் மற்றும் அஜித் சாரும் போன்ல பேசுனாங்க. என்னோடு துக்கத்தை பகிர்ந்துக்கிட்டாங்க. அவங்களுக்கு நன்றி. அப்பா, அம்மாவுடைய திருமண வாழ்க்கை 48 வருஷம். ரொம்ப நல்ல கணவரா அம்மாவுக்கு இருந்தார். இன்னும், மனக்கவலையில அம்மா இருக்காங்க. கடவுள் அருளால் அம்மா சீக்கிரம் நல்லாகணும்.

ரஜினி

அப்பா, கடைசியா 'நல்லாயிருனு' சொன்னார். இந்த வார்த்தையை வாழ்க்கையில மறக்க முடியாது. பெரிய ஆசிர்வாதமா இதை நினைக்குறேன்'' என்று வருத்ததுடன் பேசினார் இயக்குநர் சிறுத்தை சிவா.



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-siva-talks-about-his-father-jayakumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக