கோபம், பயம், வெறுப்பு, பதற்றம் போன்ற உணர்வுகள் மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடியவையே. சில நேரங்களில் இவை ஓவர் லோடு ஆகும்போது நமக்கு ஒருவித படபடப்பும் மயக்கமும் ஏற்படலாம். சிலருக்கு நெஞ்சுவலியும் ஏற்படுவதுண்டு. இந்த அறிகுறிகளை இதய நோய்க்கான எச்சரிக்கையாக நினைத்து இதய பரிசோதனைக்காக நாடிச் செல்வோர் பலர்.
ஆனால், இந்த அறிகுறிகளுக்கும், இதய நோய்களுக்கும் தொடர்பில்லை. இவை மனஅழுத்தத்தின் உச்சநிலையான `ஆங்சைட்டி அட்டாக்'காக இருக்கலாம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள். சமீபத்தில் வெளியான `சூரரைப் போற்று' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் அதீத கோபத்துக்கோ, பயத்துக்கோ உள்ளாகும்போது தன்னிலை இழப்பதைக் காட்டியிருப்பார்கள். தன்னிலை மறந்த இந்தப் பதற்றம்தான் `ஆங்சைட்டி அட்டாக்'.
ஆங்சைட்டி அட்டாக் யாருக்கு, எப்போது, எதனால் ஏற்படுகிறது... என்ற கேள்விகளோடு உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவியை அணுகினோம்.
ஆங்சைட்டி அட்டாக் என்றால் என்ன?
``ஒருவர் அதிகமாக அச்சமுற்றாலோ, ஆவேசப்பட்டாலோ தன்னிலை இழந்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டே மயங்கி விழுவதையும், பேச்சு மூச்சின்றி கிடப்பதையும் கவனித்திருக்கலாம். இதற்கு உளவியலில் `ஆங்சைட்டி அட்டாக் (Anxiety attack)' அல்லது `பானிக் அட்டாக் (Panic attack)' என்று பெயர்.
ஏன் ஏற்படுகிறது?
ஒருவருக்கு ஆங்சைட்டி அட்டாக் மூன்று வகைகளில் ஏற்படுகிறது.
முதல் வகை:
இது அனைவருக்கும் சில பொதுவான காரணங்களால் திடீரென வரக்கூடிய பயமும் பதற்றமும் ஆகும். ஒருவரின் அருகில் திடீரென ஒரு பாம்பினை தூக்கிப்போட்டால் வரக்கூடிய பயத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மேலும், பல புற காரணங்களால் இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் ஏற்படலாம். இது சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.
இரண்டாம் வகை:
இது ஆழ்மனதிலிருந்து வரக்கூடிய ஒருவித தவிப்பால் ஏற்படுவது. அவமானம், குற்றவுணர்ச்சி போன்றவற்றை இதற்கு காரணமாகக் கூறலாம். இந்த உணர்வுகள் அதிகரிக்கும்போதும் ஒருவரின் மனநிலை சீரற்றதாகி ஆங்சைட்டி அட்டாக் ஏற்படும். இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் ஏற்பட ஒருவரின் மனநிலையே முழுக்க முழுக்க காரணம். முதல் வகையில் சொன்ன பாம்புபோன்ற புறக் காரணிகளால் இது ஏற்படுவதில்லை.
Also Read: ``இந்த 3 காரணங்களைத்தான் `பேய் பிடித்துவிட்டது' என்கிறார்கள்!" - விளக்கும் மனநல மருத்துவர்
மூன்றாம் வகை:
இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் உளவியல் மற்றும் நரம்பியலுடன் தொடர்புடையது. ஒருவர் கோபத்தால் தன்னை இழக்கும் நிலையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். `வாழ்க்கையில் தான் அனைத்தையும் இழக்கப்போகிறோம்' என்று தோன்றும் எண்ணத்தால் ஏற்படும் பதற்றத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
யாருக்கு ஏற்படும்?
எப்போதும் அதிகமாக உணர்ச்சி வசப்படுவோர்க்கு ஆங்சைட்டி அட்டாக் எளிதில் ஏற்படலாம். ஏற்கெனவே உளவியல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும்போது இதனால் பாதிக்கப்படலாம். ஏதேனும் ஒரு பிரச்னை அல்லது ஆபத்து குறித்து அதிக நேரம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்தச் சிந்தனை ஆங்சைட்டி அட்டாக்காக மாற வாய்ப்புள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கும் இது ஏற்படலாம்.
என்ன செய்ய வேண்டும்?
ஆங்சைட்டி அட்டாக்கால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு இதய பிரச்னை உள்ளதென நினைத்து இதய மருத்துவரை நாடிச் சென்று, பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். இது ஏற்கெனவே நமக்கிருக்கும் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும். `ஆங்சைட்டி அட்டாக்' ஏற்படும் அனைவருக்கும் இதய பிரச்னை இருக்காது. உங்களுக்கு ஆங்சைட்டி அட்டாக் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். மனநல மருத்துவரையோ, உளவியல் ஆலோசகரையோ அணுகி உங்கள் பிரச்னையைக் கூறி தகுந்த ஆலோசனை பெறுவது நல்லது.
ஆங்சைட்டி அட்டாக் வராமல் தடுக்க மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள். எந்தச் சூழலிலும் அதிகமாக உணர்ச்சிவசப் பட வேண்டாம். பிரச்னைகளையோ, மனதுக்குள் பயத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களையோ பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம். மனம் பதற்றமடையும்போது கண்ணை மூடி சிறிது நேரம் எதையும் யோசிக்காமல் அமர்ந்திருங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் அருந்துங்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள். யாருடனாவது மனம் விட்டுப் பேசுங்கள். உடல்நலம்போல் மனநலமும் பாதுகாப்பட வேண்டியது" என்கிறார் உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவி.
source https://www.vikatan.com/health/healthy/psychologist-explains-about-anxiety-attack-and-its-reasons
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக