அபியும் கெளதமும் பேசிக்கொண்டே பயணம் செய்கிறார்கள். ஓரிடத்தில் பஸ் நிற்கிறது. தயக்கத்துடன் கழிவறைக்குச் செல்கிறாள் அபி. சுத்தமாக இல்லாததால் திரும்பிவிடுகிறாள். அதைப் பார்க்கும் கெளதம், அங்கிருக்கும் பணியாளரிடம் சுத்தம் செய்யச் சொல்கிறான். இந்த விஷயம் அபிக்கு அவ்வளவு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
சட்டென்று சித்தார்த்துடன் சென்ற அனுபவம் நினைவுக்கு வந்துவிடுகிறது. கார் பயணத்தில் பாத்ரூம் இருக்கும் ஹோட்டலாகப் பார்த்து நிறுத்தச் சொல்கிறாள் அபி. அவனோ, `இதையெல்லாம் வீட்டிலேயே முடித்துவிட்டு வர மாட்டாயா? பாத்ரூமைத் தேடி ஒவ்வோர் இடமாகப் போக வேண்டுமா? டிராவல் என்றால், பிளானே இல்லாமல் இப்படி இருப்பாயா' என்றெல்லாம் திட்டிக்கொண்டே செல்கிறான்.
ஒரு மனிதரின் இயல்பான குணம்கூட ரொம்பவே ஆச்சர்யப்பட வைக்கக் காரணம், நாம் அதுபோன்ற அன்பையோ அக்கறையையோ பெறாததால்தான். சித்தார்த்திடம் பார்க்காத அன்பையும் அக்கறையையும் கெளதமிடம் கண்டபோது, அபி மகிழ்வதிலும் ஆச்சரியப்படுவதிலும் வியப்பில்லை.
அபியும் கெளதமும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் தெரிந்துகொள்கிறார்கள். ``பயணம்கிறது சுவாரஸ்யமா, முன்பின் தெரியாதவர்களைத் தெரிஞ்சுக்கிற விதமா இருக்கணும். இப்ப எல்லாம் பஸ்ல ஏறின உடனே மொபைலைப் பார்த்துட்டு, தூங்கிடறாங்க. பக்கத்துல யார் இருக்காங்கன்னே தெரியாது. என்ன வாழ்க்கை?” என்று கெளதம் சொல்வது உண்மைதான். நாகரிகம் என்ற பெயரில் சக மனிதர்களின் ஸ்நேகத்தைத் தொலைத்துவிடுகிறது இன்றைய தலைமுறை.
கெளதமிடமிருந்து விடைபெற்று, சேதுராமனுடன் வீட்டுக்கு வருகிறாள் அபி. அவளின் மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்து, குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள். சித்தார்த் அபியை அருமையாக வைத்திருப்பதாகப் பாராட்டுகிறார்கள். அபிக்கோ கெளதமுடன் நடந்த உரையாடல்களே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தன.
வேலை முடிந்து இரவு ஊருக்குக் கிளம்பும்போது,சேதுராமனைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்கிறாள் அபி. ``எனக்குச் சில எதிர்பார்ப்புகள் இருக்கிற மாதிரி அந்தப் பொண்ணுக்கும் இருக்கலாம். அதை எல்லாம் என்னால நிறைவேற்ற முடியாது. ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி, ஏன் கஷ்டப்படுத்தணும்? எனக்கு வீட்டுக்குள்ள இருக்கிற அரசியலைவிட வெளியில் இருக்கிற அரசியல் மீதுதான் ஆர்வம்” என்கிறார் சேதுராமன்.
காலையில் வந்த அதே பஸ்ஸில், அதே இருக்கையில் அமரும் அபி, `கெளதம் இருக்கிறானா' என்று ஆர்வத்துடன் தேடுகிறாள். நமக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால், இந்த மனம் சாத்தியமா, சாத்தியம் இல்லையா என்றெல்லாம் யோசிக்காது தேடத் தொடங்கிவிடும் போல!
கெளதம் வருவானா?
திங்கள் இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக