Ad

ஞாயிறு, 29 நவம்பர், 2020

சம்யுக்தாவை வெளியேற்றிய 'வளர்ப்பு'... ஆனால், இங்கே எல்லாம் நியாயமாக நடக்கிறதா?! பிக்பாஸ் நாள் - 56

இந்த வாரம் சம்யுக்தா வெளியேறியது ‘ஆன்ட்டி’ கிளைமாக்ஸாக அமைந்து விட்டது. ரமேஷ்தான் வெளியேறுகிறார் என்று ஒரு தகவல் அழுத்தமாக முன்பு உலவிக் கொண்டிருந்தது. அதில் ஒரு நியாயமும் இருந்தது. ஆனால் சாம் வெளியேறியது நிச்சயம் சற்று அதிர்ச்சியான விஷயம்தான்.



ஷிவானி, ரமேஷ், ஆஜீத், சோம் ஆகியோரோடு ஒப்பிடும் போது சிறந்த போட்டியாளரான சாம் வெளியேற்றப்பட்டதில் ஒரு சிறிய அநீதி ஒளிந்திருக்கிறதோ? ‘வளர்ப்பு மகன்’ விவகாரம் ஓர் அரசியல் தலைவிக்கு களங்கமாக அமைந்தது. அது போல் ‘வளர்ப்பு’ என்கிற சொல் சம்யுக்தாவின் இந்த வார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது விட்டது போல. ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்.

சம்யுக்தா



தகுதியுள்ளவர்கள் வெளியே இருக்க, தகுதியற்றவர்கள் உள்ளே இருக்கும் தவறானது அரசியல் அதிகார விஷயங்களில் பெரும்பாலும் நடக்கிறது. தனிமனித விருப்பு, சாதி, இனம் உள்ளிட்ட பல காரணிகளால் ஒரு தவறான அரசியல்வாதிக்கு மக்கள் மீண்டும் மீண்டும் வாக்களிக்கிறார்கள். அதே தவறு பிக்பாஸிலும் நடக்கிறதா என்று தெரியவில்லை.



ஓகே 56-ம் நாள்!

?



வெள்ளை நிற உடையில் அட்டகாசமாக வந்தார் கமல். '‘பார்வைக் கோணம்தான் ஒரு விஷயத்தை நல்லதா, கெட்டதா என்பதை நிர்ணயிக்கிறது’' என்பதை ‘நாயகன்’ பட வசன உதாரணத்தோடு சொன்னார். பிறகு அதையே திருகிச் சொல்லி "நான் பேசறது புரியலேன்னு சொல்றவங்களுக்காக இது'’ என்று கிண்டலடித்தார். (இனிமே ட்வீட் பத்தி கிண்டலடிப்பீங்க?!)



பிறகு அகம் டிவி வழியாக உள்ளே சென்ற அவர், ‘நல்லது கெட்டது’ கோணத்தை போட்டியாளர்களுக்கு விளக்கிய விதம் இருக்கிறதே..! அபாரம்.



“ஒரு அறிமுக நடிகன் புகழ் பெற ஆரம்பிக்கும் போது அவனது பாத்திரப் பெயரில்தான் புகழ் பெறுவான். தன் பெயர் குறிப்பிடப்படவில்லையே என்று அப்போது அவனுக்கு ஆதங்கமாக இருக்கும். அதுவே அவன் புகழின் உச்சியை அடைந்து விட்ட பிறகு ‘நல்ல’ பாத்திரங்கள் கூட நடிகனின் பெயரில் அறியப்படும். அப்போதும் அவனுக்கு ஆதங்கமாக இருக்கும். ஆனால் பிக்பாஸ் வீடு என்பது வித்தியாசமானது. இங்கு நீங்கள் நீங்களாகவே அறியப்படுகிறீர்கள். கப்புல டீ இருந்தாலும் காபி குடிக்கற மாதிரி நடிச்சிடலாம். ஆனா வெளியே கொட்டிடாம பார்த்துக்கணும்'’ என்று அவர் அளித்த மொழிப்புரை எல்லாம் ஏதோ தத்துவ வகுப்பில் அமர்ந்திருந்த உணர்வை அளித்தது. வெல்டன் கமல் சார்!



இது போன்ற சமயங்களில்தான், பிக்பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்த கமலை தவிர தகுதியானவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா? என்கிற கேள்வி எழுந்து விடுகிறது. இது அத்தனை நுட்பமான விளையாட்டு. ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் போட்டியாளர்களைப் போல பேசி விட முடியாது; பேசவும் கூடாது. இதை கமல் சிறப்பாக கையாள்கிறார்.



இதைப் போலவே போட்டியாளர்களும் நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. அதாவது நம்மைப் போலவே. இந்த மேக்ரோ பார்வையும் நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு இருக்க வேண்டும். கமலிடம் அது ஏராளமாக இருக்கிறது.



‘கலீஜ்’ என்கிற மங்கலகரமான வார்த்தையுடன் பஞ்சாயத்தை ஆரம்பித்தார் கமல். “ஆமாம். சார். சாம் என்னை அப்படிச் சொன்னாங்க...’' என்று சனம் சொன்ன பிறகு என்ன காரணத்திற்காகவோ சாமிடம் மன்னிப்பு கேட்க, இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கோரிக் கொண்டார்கள். "என் முன்னாடி இப்படி டக்குக்னு ஸாரி சொல்லிக்கறீங்களே. வீட்டுக்குள்ளயும் அப்படி சொல்றீங்களா... அந்த மன்னிப்புல உண்மை இருக்கா?” என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் கமல்.



ஒருவரிடம் சண்டையிட்டப்பிறகு, நிதானமாக யோசிக்கும் போது தன் தரப்பில் தவறு இருப்பதாக சிலர் உணர்வார்கள்; மன்னிப்பு கேட்கும் விருப்பமும் அவர்களின் உள்ளே இருக்கும். ஆனால் கேட்காமல் கெத்தாக வீண்பிடிவாதத்துடன் உலவுவார்கள். தங்கள் தவறை நியாயப்படுத்தவும் செய்வார்கள். பிறகு எவராவது சம்பந்தப்பட்ட இருவரையும் அமர வைத்து பஞ்சாயத்து பேசும் போதுதான் உணர்ச்சிவசப்பட்டு மன்னிப்பு கேட்பார்கள். மற்றவர்களின் அறிவுரையின் அல்லது தூண்டுதலின் பேரில் அல்லாமல் தன் மீது தவறு இருப்பதாக உணர்ந்த அடுத்த கணமே மன்னிப்பு கேட்பதுதான் மனிதத்தன்மை.



அடுத்ததாக ‘வளர்ப்பு’ விவகாரத்திற்கு வந்தார் கமல். "போட்டியில் சம்பந்தப்பட்டவர்களோடு அவர்களின் பெற்றோர்களையும் இழுப்பது தவறு. அதை போட்டியாளர்களும் செய்யக்கூடாது. பார்வையாளர்களும் செய்யக்கூடாது’' என்று கமல் சொன்ன அறிவுரை நன்று. ஒருவரை வசையும் சொல் கூட அவரது தாயை வசைவதாகத்தான் மனித கலாசாரம் பரிணமித்திருக்கிறது. ஆணாதிக்க மனோபாவம் இதன் பின்னால் ஒளிந்திருக்கிறது.



'‘எனது தாய்மையை ஆரி கொச்சைப்படுத்தி விட்டார்'’ என்கிற தவறான புரிதலுடன் இருந்த சம்யுக்தாவிற்காக, இந்த சீஸனின் முதல் குறும்படம் வெளியிடப்பட்டது. "ஒரு குழந்தைக்குத் தாயாகி உயர்ந்த நிலையில் இருக்கிற சம்யுக்தா…" என்கிற நோக்கில் ஆரி சொன்னதை சம்யுக்தா தவறாக புரிந்து கொண்டு விட்டார். ஆரியின் மீதுள்ள முன்விரோதம் அவரின் கண்ணை மறைத்து விட்டது போல. இதில் நமக்கும் கூட படிப்பினையுள்ளது. ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லையென்றால் அவர் சொல்வது – சரியானதாக இருந்தாலும் கூட - அனைத்துமே தவறான கோணத்தில்தான் படும்.



‘குருமா படம்’ வெளியிடப்பட்டும் சாம் கன்வின்ஸ் ஆகவில்லை. கூட இருந்த அர்ச்சனா இப்போது ப்ளேட்டை மாற்றி ‘இப்பத்தான் சார் எனக்குப் புரியது’ எனும் போது சாமால் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை.



கூட இருந்து ஏத்தி விடும் நண்பர்கள், விசாரணை என்று வரும் போது டக்கென்று பல்டி அடித்து விடுவார்கள் என்பதே இதிலுள்ள நீதி. நல்ல நண்பனாக இருந்தால் அப்போதே உங்கள் தவறை சுட்டிக் காட்டுவான். சாம் தொடர்புடைய விஷயமாக இருந்தாலும் பாலாஜி இப்போது சபையில் மெளனம் சாதித்து விட்டார். இவர்தான் அப்போது பஞ்சாயத்திற்குள் நுழைந்து வார்த்தையைக் குழப்பி விட்டு சாமை காப்பாற்றி அழைத்துச் சென்றவர்.



சாமிற்கு இன்று நேரம் சரியில்லை போல. மீண்டும் ‘வளர்ப்பு’ எனும் விவகாரத்தை கையில் எடுத்தார் கமல். இதிலும் சாம் எளிதில் கன்வின்ஸ் ஆகவில்லை. "சொல்லும் தொனியில் ஒரு வார்த்தையின் அர்த்தமே மாறி விடும்’ என்று கமல் விதம் விதமாக பேசிக்காட்டியது நன்று.



பிறகு கமல் சென்ற பிறகு ஆரியும் சாமும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள். ஆரியின் தரப்பில்தான் நியாயம் இருக்கிறது என்பது நிரூபனமானவுடன் அர்ச்சனாவின் டோன் மாறியது "ஆரி அண்ணா... எப்ப வேணும்ன்னாலும் பேச வாங்க.. உங்களுக்காக ‘லவ் பெட்’ எப்பவும் காத்திருக்கிறது...” என்று புதிய உறுப்பினருக்கான அட்டையை ஆரிக்குத் தர முயன்றார்.



திரும்பி வந்த கமல், கால் சென்டர் டாஸ்க்கில் சோமுவும் கேபியும் ‘ஸ்வீட்டாக’ பேசிக் கொண்டதைப் பாராட்டினார். சோமுவும் கேபியும் முன்பே பேசி வைத்துக் கொண்டு செய்த நாடகம் போலவே இது பட்டது. போட்டியாளர்களின் தவறுகளை, பிழைகளை அம்பலப்படுத்த கிடைத்த வாய்ப்பு இது. அதை வலிக்காமல் செய்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. அதற்காக தடவிக் கொடுப்பது போன்ற பாவனை செய்வது அநியாயம் அல்லவா? சோம் அதைத்தான் செய்தார்.



கேபியைச் சங்கடப்படுத்தும் விதத்தில் கேள்விகளை முன்வைத்ததற்காக சோம் வருத்தப்பட, அவர் காப்பாற்றப்பட்ட செய்தியை சொன்னார் கமல்.



அடுத்ததாக, "தாடியைத் தாண்டி இப்பத்தான் முகம் வெளியே தெரிய ஆரம்பிச்சிருக்கு'’ என்று கமல் ரமேஷை குறிப்பிட்டது சுவாரஸ்யமான கிண்டல். "ரம்யா வளைச்சு வளைச்சு கேட்டும் தாக்குப்பிடிச்சிட்டீங்க" என்று ரமேஷைப் பாரட்டினார். இந்த இடத்தில்தான் ரம்யா மாட்டிக் கொண்டார்.



"நீங்களா இருந்தா மத்தவங்களை நாமினேட் பண்ண என்ன காரணமெல்லாம் சொல்வீங்க?” என்கிற டாஸ்க்கை கமல் ரம்யாவிற்கு தர, ஒரு மாதிரியாக சமாளித்துக் கொண்டு வந்த ரம்யா, ‘கேபி’யின் இடம் வந்ததும் திகைத்து நின்று விட்டார். "இப்ப புரியுதா கேள்வி கேட்கறது எவ்ள கஷ்டம்னு” என்றார் கமல். ‘ஐயா. இதைப் புரிய வைப்பதற்காகத்தான் இந்த திருவிளையாடலா?” என்று வாய் நிறைய சிரிப்புடனும் சங்கடத்துடனும் அமர்ந்தார் ரம்யா.



உண்மையில் இந்த விஷயத்தை பஞ்ச தந்திரம் படத்தில் கமல் ஏற்கெனவே சொல்லி விட்டார். நாகேஷ் பாத்திரம் இவரைத் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டு குடையும் போது ‘மாமா ஒண்ணு சொல்லட்டுமா... கேள்வி கேக்கறது ரொம்ப ஈஸி. அதுக்கு பதில் சொல்லிப் பாருங்க. அப்பத்தான் கஷ்டம் புரியும்”.



“நீங்க எந்த அணி?” என்று சைடு கேப்பில் ரம்யாவிடம் கமல் கேட்ட போது ‘நான் நியூட்ரல் சார்’ என்றார் ரம்யா. இப்போதைக்கு அவர் அதிகம் சாய்ந்திருப்பது பாலாஜி அணி என்பது எல்லோருக்கும் தெரியும். நிலைமை மாறும் போது அவருடைய தேர்வும் மாறலாம்.



‘தலைமை பொறுப்பின் மதிப்பீடு’ என்கிற பலகை கொண்டு வரப்பட்டது. ரியோவின் இந்த வார கேப்டன்சிக்கான ரிப்போர்ட் கார்ட். ஒவ்வொரு போட்டியாளரும் நட்சத்திரங்களை வழங்கி மதிப்பிட வேண்டும். ‘போச்சா... சோனா முத்தா’ என்று ரியோவின் மைண்ட் வாய்ஸ் ஹைடெஸிபலில் அலறியிருக்க வேண்டும்.



'‘உணர்ச்சிவசப்பட்டு இந்த வாரம் முழுக்க டல்லாக இருந்தார்'’ "நக்கலாக பதில் சொன்னார்’', "சில விஷயங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்கவில்லை'’, '‘தூங்க விடவில்லை’' என்பது போன்ற காரணங்கள் சொல்லப்பட்டன. எதையும் வித்தியாசமாக செய்யும் பாலாஜி, இப்போது ஐந்து நட்சத்திரங்களை ரியோவிற்கு வழங்கி ஆச்சரியப்படுத்தினார். ‘தேவாடா... சூர்யாடா...‘என்கிற ‘தளபதி’ ரேஞ்சிற்கு இருவரும் நண்பர்களாகி கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.



'‘அசிங்க அசிங்கமா கேட்பேன்ன்னு என்னை சொன்னாரு'’ என்கிற பஞ்சாயத்தை இழுத்தார் சனம். ரியோவின் இந்த சொற்பிரயோகம் நிச்சயம் பஞ்சாயத்தாகும் என்று முன்பே எழுதியிருந்தேன். அப்படியே ஆயிற்று. நிஷாவிடம் அப்படிப் பேசினால் செல்லுபடியாகும். சனத்திடம் அப்படி ஆகுமா?



"இது பற்றி காலையிலும் பேசி என்னை கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்'’ என்று புகாரின் சதவிகிதத்தைக் கூட்டினார் சனம். சமயங்களில் சனத்தை ஒரு காமெடி பீஸ் போலவே மற்றவர்கள் நடத்துவது உண்மைதான். ரியோவும் பாலாஜியும் ‘திடீர்’ நண்பர்களாகி விட்டதைக் கண்டு வெறுப்புடன் அமர்ந்திருந்தார் சனம்.



‘ஒரு ஸ்டாருக்கு கூட தகுதியில்லை’ என்பது போல் ரம்யா யோசித்தது ஓவர். கிச்சன் டீம் விவகாரத்தை ரியோ அவரிடம் கலந்தாலோசிக்கவில்லை’ என்பது நிச்சயம் ஒரு சறுக்கல்தான். அதற்காக ஒட்டுமொத்தமாக கீழே தள்ளுவது நியாயமற்றது. "நான் ஸாரி சொல்ற வார்த்தையை உணர்ந்துதான் சொல்றேன்’' என்றார் ரியோ. ஆனால் அதில் குத்தலான நகைச்சுவையைக் கலந்து விடுவது எதிராளியைக் காயப்படுத்தும் என்பதையும் அவர் அறிந்திருக்க வேண்டும்.



''இப்பயாவது கேப்டன் கிட்ட பேசுவீங்களா?” என்று கமல் பாலாஜியைக் கேட்க சபை வெடித்து சிரித்தது. ‘தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே ஜெயிலுக்குப் போயிட்டீங்களே’ என்று ரியோவை நோக்கி சொன்ன கமல், நாம் எதிர்பார்த்தபடியே ‘இது வீட்டு விவகாரங்க... நீங்க வேற’ என்று அலுத்துக் கொண்டார். ‘நான் சமையல் கத்துக்கவே வரல’ என்று ரம்யா சொன்னதை சந்தடி சாக்கில் ஆரி சபையில் போட்டுக் கொடுத்து விட அதையும் ரம்யா சமாளிக்க வேண்டியிருந்தது.



‘ஏம்மா சனம்... தேவையில்லாத நேரத்துல எல்லாம் கையத் தூக்குவீங்க... இப்ப நான் எதிர்பார்க்கிற நேரத்துல செய்ய மாட்டேங்கறீங்களே’ என்று சலித்துக் கொண்ட கமல், சனம் காப்பாற்றப்பட்ட செய்தியை தெரிவித்தார். ‘அய்யாங்... அய்யாங் என்று வழக்கம் போல் உற்சாகமாக கத்தி குதித்தார் அனிதா. ஏனெனில் இப்போது அவருக்கிருக்கும் ஒரே துணை சனம்தான். அந்த மகிழ்ச்சி அவருக்கு.



**

‘வாரம் ஒரு புத்தகம்’ பகுதியில் இந்த வாரம் கமல் அறிமுகப்படுத்தியது வண்ணநிலவன் எழுதிய ‘எஸ்தர்’ என்னும் சிறுகதை தொகுப்பு. நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பாளி வண்ணநிலவன். மனித மனதின் உள்ளார்ந்த சிக்கல்களை தனது நுட்பமான எழுத்தின் வழியாக விரித்தெடுக்கக்கூடியவர்.



‘எஸ்தர்’ சிறுகதை எதைப் பற்றியது?பஞ்சம் பிழைப்பதற்காக ஒரு கிராமமே காலியாகிக் கொண்டிருக்கிறது. எஞ்சியிருக்கும் ஒரு குடும்பத்தில், வீட்டில் இருக்கும் பாட்டியை என்ன செய்வது என்று எல்லோருக்கும் குழப்பம். ஒரு காலத்தில் வீட்டையே தாங்கியிருந்தவர்கள், பிற்காலத்தில் பெரும் சுமையாகி விடும் வழக்கமான அவலம் இங்கும் நடக்கிறது. வீட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ‘எஸ்தா்’ சித்தியின் மனவுணர்வுகளை இந்தச் சிறுகதை அற்புதமாக சித்தரிக்கிறது. இது பஞ்சத்தைப் பற்றிய கதை மட்டுமல்ல. ‘எஸ்தரின்’ அகம் வெறுமையாக வறண்டிருப்பதை விவரிக்கும் கதையும் கூட.



‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவராக இருந்த வண்ணநிலவனை அப்போது நினைவுகூர்ந்தார் கமல். புத்தகத்தை கமல் அறிமுகப்படுத்துவதைப் போலவே இந்தக் குறிப்பிட்ட திரைப்படத்தைப் பற்றி – அறியாதவர்களுக்காக – பிரத்யேகமாக அறிமுகப்படுத்த இந்த இடத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.



தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை வெளியாகியிருக்கும் சிறந்த பத்து திரைப்படங்களை கறாரான நோக்கில் வடிகட்டினால், அதில் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை நான் நிச்சயம் தேர்வு செய்வேன். அப்படியொரு சிறந்த திரைப்படம் அது. ருத்ரைய்யா அற்புதமாக இயக்கியிருந்தார்.



பொதுவாக தமிழ் சினிமாக்களில் நாயகிகளின் பாத்திரம் கவர்ச்சிப் பதுமையாகவே உபயோகப்படுத்தப்படும். பெண் பாத்திரங்களை வலிமையாக சித்தரித்த இயக்குநர்கள் மிகக்குறைவு. இந்தத் திரைப்படத்தில் வரும் ‘மஞ்சு’ என்கிற பாத்திரம் அத்தனை வலிமையானது; நுட்பமானது. கவர்ச்சி நாயகியாக அறியப்பட்டிருந்த ஸ்ரீப்ரியா, இந்தப் பாத்திரத்தை அட்டகாசமாக கையாண்டிருந்தார். படம் பார்த்து முடித்த பிறகு ‘மஞ்சு’ என்கிற அந்த கேரக்டரை வாழ்நாள் முழுக்க உங்களால் மறக்க முடியாது. கமலும் ரஜினியும் கூட இதில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.



விட்டால் பிக்பாஸ் கட்டுரையை விட்டு விட்டு இந்தப் படத்தைப் பற்றி இன்னமும் பத்து பக்கங்கள் கூட எழுதுவேன். எனக்கு அத்தனை பிடித்தமான படம் இது. இதை இன்னமும் பார்க்காதவர்கள் தவறாமல் பார்த்து விடுங்கள்.



புத்தக அறிமுகத்திற்குப் பிறகு, டிஜிட்டல் பார்வையாளர்களை அன்புடன் துரத்தி விட்டு விட்டு அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், எவிக்ஷன் லிஸ்ட்டில் இறுதியாக உள்ள நிஷா, சாம், ரமேஷ் ஆகியோர்களை ஒன்றாக அமரச் சொன்னார். (கேமரா பொசிஷன்). பொங்கல் சாப்பிட்டது போல் மயங்கியிருந்த நிஷாவை ‘குட்மார்னிங்’ சொல்லி கமல் எழுப்பியது சுவாரஸ்யமான காட்சி.



“சம்பந்தப்பட்ட நேரத்துல கொஞ்சம் கவனமா இருந்திருந்தீங்கன்னா... இந்த நிலைமை உங்களுக்கு வந்திருக்காது’' என்று கமல் அறிவுறுத்தியது சரியானது. Nomination topple card டாஸ்க்கில் ‘நேரம் ஆயிட்டே இருந்தது சார்’ என்று ரமேஷ் சலித்துக் கொண்டார். மற்றவர்கள் தந்த உணர்ச்சிகரமான நெருக்கடி காரணமாக அனிதாவிற்கு விட்டுத் தந்தார் நிஷா. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல், கவனக்குறைவாக இருந்து விட்டு பிறகு வருந்துவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதே கமல் சொல்ல வந்த விஷயம்.



கடைசி நிலையில் இருப்பவருக்கு 4,73,00,000 வாக்குகள் வந்திருக்கிறதாம். (அம்மாடியோவ்!) அதற்கும் முன்பாக இருப்பவருக்கும் இவருக்கும் 26,649 வாக்குகள் மட்டுமே வித்தியாசமாம். இதற்கிடையில் நிஷா காப்பாற்றப்பட்ட தகவலை கமல் சொல்ல பெரும்பாலோனோர் எழுந்து வந்து நிஷாவைப் பாராட்டினார்கள். தன் வலது கரம் காக்கப்பட்டதை எண்ணி கண்ணீர் விட்டார் அர்ச்சனா. இனியாவது நிஷா, ரியோவின் நிழலாக இருப்பதை விட்டு விட்டு தன் விளையாட்டை விளையாட வேண்டும். செய்வாரா?



மீதமிருந்தவர்கள் சாம் மற்றும் ரமேஷ். பதட்டமான பின்னணி இசை வழக்கம் போல் ஒலிக்க சற்று பீடிகைக்குப் பின் ‘சம்யுக்தா’ என்கிற பெயர் தாங்கிய அட்டையைக் காட்டினார் கமல். நிச்சயம் இதை சாம் எதிர்பார்க்கவில்லை. ரமேஷ் வெளியே போவார் என்று உள்ளூற எண்ணியிருந்தார் போல. காப்பாற்றப்பட்ட ரமேஷை கட்டியணைத்துக் கொண்டார் நிஷா.



‘வளர்ப்பு’ என்கிற சொல்தான் சம்யுக்தாவின் வெளியேற்றத்திற்கு காரணம் என்று தோன்றுகிறது. அவரின் பிம்பத்தை இந்த வாரத்தில் தலைகீழாக கலைத்துப் போட்டு விட்டது. சமூகவலைத்தளங்களில் இது குறித்து காரசாரமான விமர்சனங்கள், எதிர்ப்புகள் எழுந்தன. இந்த கோப அலை வாக்குகளில் எதிரொலித்திருக்கலாம். நாம் சொல்லும் ஒரு அமங்கலச் சொல் எப்படி பூமராங் மாதிரி நமக்கே திரும்பி வருகிறது என்பதை உணர்த்திய சம்பவம் இது.



போலவே "யாரைப் பத்தி பேசினா ஆபத்து இல்லையோ. அவங்க கிட்ட கடுமையா பேசறாங்க'’ என்கிற காரணத்தைச் சொல்லி தனக்கு கிடைத்த வரத்தை சம்யுக்தாவின் சாபமாக மாற்றினார் அனிதா. இல்லையென்றால் சம்யுக்தா இந்த வாரம் வெளியேற வேண்டிய அவசியமே இருந்திருக்காது. ‘இனிய உளவாக இன்னாத கூறல், கனி இருப்பக் காய்கவர்ந்தற்று’ என்கிற வள்ளுவனின் வாக்கு மீண்டும் மெய்யாகிறது. சாம் தன் வார்த்தைகளில் இனிமையைக் கூட்டியிருந்தால் இப்போது கசப்பை எதிர்கொள்ள நேர்ந்திருக்காது.



ஆஜீத், ஷிவானி, பாலாஜி ஆகியோர் சாமின் பிரிவிற்கு கலங்குவார்கள் என்று தெரியும். அப்படியே ஆயிற்று. '‘என்ன அவ்வளவு சந்தோஷம்’' என்று நிஷா கேட்கும் அளவிற்கு புன்னகையான முகத்துடன் இருந்தார் ஆரி. இது விளையாட்டின் ஒரு பகுதிதான். கண்ணீர் விட்டு அழ ஒன்றுமில்லை. அனிதாவும் சனமும் சற்று குற்றவுணர்ச்சியுடன் இருந்தார்கள். குறிப்பாக அனிதாவின் பங்கு இதில் அதிகம் என்பதால் கூட்டத்தில் மறைந்து மறைந்து வந்ததைப் போல் பட்டது.



சுச்சி மாதிரி அவசரமாக ஓடாமல் எல்லோருடனும் இனிமையாக பேசி நிதானமாக விடைபெற்றுக் கொண்டார் சாம். ‘'வாங்க'' என்று மேடையில் வரவேற்றார் கமல். ‘யார் காப்பாற்றப்பட வேண்டும் என்று சென்ற வாரம் கேட்ட போது வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் என்னைக் குறிப்பிட்டார்கள்’ என்கிற நிகழ்வை மேடையில் நினைவு கூர்ந்தார் சாம். வீட்டில் உள்ளவர்களின் அன்பைப் பெற்ற அதே சமயத்தில் மக்களின் ஆதரவை இழந்தது குறித்து அவருக்கு வருத்தம் இருக்கிறது போல.



கடந்த வாரத்தில் சாம் குறித்து மக்களின் மனநிலையும் அதுவாகவே இருந்திருக்கலாம். ஆனால் அவரின் இந்த வாரச் செயல்பாடுகளின் மூலம் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. '‘ஹவுஸ்மேட்ஸ்களின் மனநிலையும் மக்களின் மனநிலையும் ஒன்றாக இருக்கிறதா என்று சோதிக்க விரும்பினேன்'’ என்றார் அனிதா. ஒரே வாரத்தில் ஒருவரின் நிலைமை தலைகீழாக மாறி விடும் விசித்திர விளையாட்டு இது.



சம்யுக்தாவைப் பற்றிய வீடியோ காட்டப்பட்டது. ஓர் அறிமுகம் இல்லாத நபர், இத்தனை நாட்களில் எப்படி நமக்குத் தெரிந்தவராக மாறியிருக்கிறார் என்பதற்கான சாட்சியம் இந்த வீடியோ. (அந்த ‘தேவசேனா’ கெட்டப் மறக்கவே முடியாது சாம்’). ‘நானே எதிர்பாராதெல்லாம் இந்த வாரம் நிகழ்ந்திருக்கிறது’ என்றபடி சாமிற்கு விடை தந்தார் கமல். எனில் சம்யுக்தாவின் வெளியேற்றம் அவருக்கே சற்று அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்.



‘தாய்மை குறித்து நான் சொன்னதின் உள்ளடக்கத்தை சனமோ, ரம்யாவோ சாமிடம் விளக்கிச் சொல்லியிருக்கலாம். மத்த விஷயங்களில் எல்லாம் பாயின்ட் பாயின்ட்டா பேசறாங்க இல்ல’ என்பது போல் அர்ச்சனா மற்றும் நிஷாவிடம் பேசிக் கொண்டிருந்தார் ஆரி. சம்யுக்தாவின் வெளியேற்றத்தினால் அர்ச்சனா டீமிடம் சற்று நெருங்கியிருக்கிறார் ஆரி.



'‘டாண்... டாண்னு கமல் சார் இன்னிக்கு பேசினார்ல'’ என்று சனம் அனிதாவிடம் சிலாகித்துக் கொண்டிருந்த காட்சியோடு இன்றைய நாள் முடிவடைந்தது. தொண்டைத் தண்ணீர் வற்ற கமல் இன்றைய எபிஸோட் முழுவதும் விளக்கிக் கொண்டிருந்த விஷயம் போட்டியாளர்களின் மனதிற்குள் சென்றால் அது நல்ல விஷயம்தான்.



போட்டியாளர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்திருக்கிறது. பிக்பாஸ் வீட்டின் அரசியலில் இது நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். அணிகள் மாறலாம். வியூகம் மாறலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-4-episode-56-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக