Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?

ஆறு தலை முருகன் ஆறுதலை அருள்பவன். அபயம் என்று சரண் புகுபவர்களுக்கு நல்ல மாறுதலைத் தருபவன். தமிழில் பாகுலம் என்று கூறப்படும் கார்த்திகை மாதம் கார் காலமும் காந்தள் மலர்களும் அதிகம் பூக்கும் இனிய காலம். இந்த கார்த்திகை மாதம் முழுக்கவே முருக வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றே சொல்லலாம். அதிலும் கார்த்திகை மாத பௌர்ணமி நன்னாளில் கார்த்திகை நட்சத்திரமும் கூடி வரும் திருநாளில் முருகனை வழிபடுவது சிறப்பான பலன்களை அளிக்கும் என்பர்.

கார்த்திகையில் கந்தனுக்கு என்ன சிறப்பு?

கந்த பெருமானுக்கு 2 நட்சத்திரங்கள் சிறப்பானவை. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்ததால் விசாக நட்சத்திரம் முருகப்பெருமானின் விசேஷ நட்சத்திரமானது. சரவணப் பொய்கையில் அவதரித்த ஆறுமுகப் பெருமான் கார்த்திகைப் பெண்களால் வளர்ந்ததால் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கார்த்திகை நட்சத்திரமும் உகந்ததாயிற்று. மேலும் கார்த்திகைத் தீபத் திருநாளன்று ஈசனை வழிபடுவதோடு முருகனை வழிபடுவதும் சிறந்தது. அந்த நாளில் முருகனை வழிபடும் அன்பர்களுக்கு, கார்த்திகைப் பெண்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மனம் குளிர்ந்து ஈசன் மகன் அருள் செய்வாராம்.

சூரனை வதம் செய்து தேவசேனாபதியான முருகப்பெருமானுக்குக் கார்த்திகை பௌர்ணமிக்கு முந்திய நாள் (இந்த ஆண்டு 28-11-2020 நாளைய தினம் வருகிறது) பட்டாபிஷேகம் நடைபெற்றது. ராஜமுருகனான கந்தன் எல்லா ஆலயங்களிலும் விசேஷ அலங்காரத்தில் காட்சி அருள்வார். குறிப்பாக திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு நாளை சிறப்பான பட்டாபிஷேக வைபவம் நடைபெறும். கந்தனை ராஜ அலங்காரத்தில் தரிசித்தால் சகல ஐஸ்வர்யங்களும் தேடி வரும் என்பது ஐதிகம்.

எப்படி வழிபடலாம்?

கார்த்திகைப் பெளர்ணமி நாளில் சந்தனம் அபிஷேகம் செய்து முருகனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பெரியோர்கள் கூறுவர்.
மேலும் வெண்கலம், வெள்ளி விளக்கில் நெய்யிட்டு, தீப ஒளியுடன் கோயிலுக்கோ அல்லது ஆசார்யர்களுக்கோ தானம் கொடுத்தால், தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்.
இந்நாளில் கார்த்திகைப் புராணம் கேட்டால் செல்வம் சேரும். ஏழ்மை விலகும் என்பர்.
கார்த்திகை பௌர்ணமி நாளில் அதிகாலையில் நீராடி முடித்துத் தியானத்தில் அமர்ந்து முருகப்பெருமானை நெஞ்சில் நிறுத்த வேண்டும். பிறகு வழிபாட்டில் அக்னி, கும்பம், பிம்பம் ஆகிய ஏதாவது ஒன்றில் முருகப்பெருமானை எழுந்தருளச் செய்து வழிபட வேண்டும்.
முருகன் புகழ் பாடும் புண்ணிய நூல்களை வாசிக்க வேண்டும். அன்று முழுவதும் முருகா முருகா என்றே சொல்லிக் கொண்டிருத்தல் வேண்டும். நீர் மட்டுமே பருகி முழு உபவாசம் இருத்தல் வேண்டும். பகல் உறக்கம் கூடாது. சூது, பொய் எதுவும் அந்த நாளில் கூடவே கூடாது. ஆன்மாவுக்கு பலமளிக்கும் உண்ணாநோன்பில் கவனமாக இருக்க வேண்டும்.
மாலை வேளையில் ஆலய தரிசனம் செய்த பிறகு சுத்தமான சைவ உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று கார்த்திகை விரதம் குறித்து ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.

கந்த சஷ்டி ஆறு நாள்களும் விரதமிருக்க முடியாமல் போனவர்கள் இந்த கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் விரதமிருந்து அதே பலன்களைப் பெறலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.



source https://www.vikatan.com/spiritual/gods/karthigai-full-moon-day-and-the-connection-with-lord-murugan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக