Ad

வியாழன், 12 நவம்பர், 2020

கோவிட்-19 காலத்தில் பட்டாசுப் புகை இன்னும் ஆபத்து... எப்படி தற்காத்துக்கொள்வது?

டந்த ஒன்பது மாத காலமாகக் கொரோனா பயத்திலும், பரவலிலும் சிக்கிக்கொண்டிருந்த நாம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளோம். கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களும் விரைவில் குணமடைந்து வருகின்றனர். பேருந்துகள் இயக்கப்பட்டு, அலுவலகங்களும் திறக்கப்பட்டு நியூ நார்மல் வாழ்க்கை நம் வசமாகி வருகின்றது. வருகின்ற தீபாவளியில் இந்த மகிழ்ச்சியை `பட்டாசு' வெடித்துக் கொண்டாடக் காத்திருப்பவர்களுக்கு ஓர் அலர்ட் விடுகின்றனர் மருத்துவர்கள்.

நுரையீரல்

`சிகரெட் புகையைப் போல பட்டாசுப் புகையும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என்பது ஒவ்வொரு தீபாவளியின்போதும் அறிவுறுத்தப்பட்டு வருவதே. ஆனால், இந்த அறிவுறுத்தலை இம்முறை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், காசநோய், கோவிட்-19 போன்ற காரணங்களால் ஏற்கெனவே பாதிப்படைந்திருக்கும் நுரையீரல் 'பட்டாசுப் புகையால்' மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது குறித்து நுரையீரல் சிறப்பு மருத்துவர் பிரசன்ன குமார் தாமஸிடம் பேசினோம்.

``இந்தியாவில் பெரும்பாலானோர் நுரையீரல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். WHO உள்ளிட்ட சுகாதார அமைப்புகளின் புள்ளிவிவரங்களின்படி 2019-ம் ஆண்டில் 24 லட்சம் பேர் காசநோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 2018-ம் ஆண்டு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது 2019-ல் காசநோய்த் தொற்று இந்தியாவில் 35% அதிகரித்துள்ளது. மேலும், சென்ற வருடத்தில் மட்டும் காசநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79,144. அதாவது, ஒரு வருடத்தில் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 20,000 பேர் காசநோயால் உயிரிழக்கின்றனர்.

மருத்துவர் பிரசன்ன குமார் தாமஸ்

இதுதவிர, கடந்த 10 மாதங்களில் மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். சுவாசம் வழியே நம் உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ், முதலில் சென்று தாக்கக்கூடிய உறுப்பு நுரையீரல் என்பது நாம் அறிந்ததே. கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நுரையீரலில் உள்ள ஆல்வியோலி (Alveoli) எனப்படும் காற்றுப்பைகளும் நுரையீலின் திசுக்களும் வீக்கமடைந்து, அதன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும்.

Also Read: வீடோ, ஏ.சி காரோ... காற்று மாசுபாடு எப்படியெல்லாம் உங்களை பாதிக்கலாம் தெரியுமா?

மேலும் நுரையீரலில் உள்ள செல்கள் சிதைவடைந்து 'ஃபைப்ரோசிஸ் (Pulmonary fibrosis)' நிலையை எட்டியிருக்கும். இந்த நிலையில் நுரையீரல் சுருங்கி அதன் செயல்பாடுகள் முழுவதும் நிறுத்தப்பட்டிருக்கும். இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுத்திணறல் பிரச்னைகள் ஏற்படலாம்.

இதுபோன்ற நுரையீரல் பிரச்னைகள் இருப்பவர்கள், பட்டாசு வெடிக்கும்போது வெளியாகும் மாசு கலந்த ரசாயன புகையைச் சுவாசித்தால் அவர்களின் நுரையீரல் பிரச்னை மேலும் மோசமடையலாம். இதனால் நுரையீரலின் செயல்பாடுகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நுரையீரல் பிரச்னை

நுரையீரல் நுண்ணுணர்வு (sensitive) மிக்க ஓர் உள்ளுறுப்பு. எனவே, பட்டாசு புகையை சுவாசிப்பதால் ஆரோக்கியமான நுரையீரலைக் கொண்டவர்களுக்குக்கூட மூச்சுக்குழலில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம், வீசிங் மற்றும் நுரையீரல் அழற்சி போன்ற பல்வேறு சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்."

தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

* கொரோனா தோற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களும் காசநோய் போன்ற நீண்டநாள் நுரையீரல் பிரச்னை உள்ளவர்களும் பட்டாசு வெடிப்பதையும் பட்டாசு புகை சூழ்ந்திருக்கும் இடத்துக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

பட்டாசு புகை

* இதுபோன்ற நேரங்களில் வீட்டைவிட்டு வெளியில் எங்கு சென்றாலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லவும்.

* உங்களின் நுரையீரல் பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகளைத் தவறாமல் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது.

* நுரையீரலில் வலி, வீசிங் அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது" என்கிறார் மருத்துவர் பிரசன்ன குமார் தாமஸ்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-about-how-crackers-can-impact-affects-lungs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக