Ad

சனி, 28 நவம்பர், 2020

`காங்கிரஸூக்கு ஐ-பேக்கின் செக்... தென்னந்தோப்பில் அமைச்சரின் மூட்டை!'- கழுகார் அப்டேட்ஸ்

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பது உறுதியானாலும், ஐபேக் மூலமாக அந்தக் கட்சிக்கு சில சிக்கல்கள் வரும் என்கிறார்கள். `காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்படும் தொகுதிகளில் வேட்பாளர் யார், அவரது பலம் என்ன என்கிற விவரத்தை தி.மு.க தலைமையிடம் சத்தியமூர்த்திபவன் கொடுக்க வேண்டும். அந்த விவரங்களை விசாரித்த பின்னரே, காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்’ என்று ஐபேக் தரப்பிலிருந்து தி.மு.க-வுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

கே.எஸ்.அழகிரி

இந்த விவரங்களைப் பெறாமல் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறது ஐபேக். அதேபோல பல காலமாக குத்தகை எடுத்ததுபோல தன் கைப்பிடிக்குள் காங்கிரஸ் வைத்திருக்கும் சில தொகுதிகளை, வரும் தேர்தலில் மாற்றிக்கொடுக்கவும் தி.மு.க தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.

`ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, மனுஷனைக் கடிக்கிற கதையா...’னு சொல்லுவாங்களே... அது இதுதானோ?

நவம்பர் 21-ம் தேதி, தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற குற்றச்சாட்டில், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணத்தில் கைதுசெய்யப்பட்டார். மாலை நேரத்தைக் கடந்தும் இரவு 11 மணி வரை அவரை விடுவிக்காமல் வைத்திருந்தது காவல்துறை. பதறிப்போன செனடாப் சாலை கிச்சன் கேபினெட், ``என் மகனை ஜெயில்ல போட்டுடுவாங்களா... ஐயோ... கொசுக்கடி வேற அதிகமா இருக்குதே... சாப்பாடு ஒத்துக்காதே...” என்று புலம்பித் தீர்த்துவிட்டாராம். தனக்கு வேண்டிய காவல்துறை அதிகாரிகளிடமெல்லாம் அவர் விசாரித்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்

பிறகு உதயநிதி விடுவிக்கப்பட்ட பின்னர்தான், இரவு உணவையே கிச்சன் கேபினெட் எடுத்துக்கொண்டாராம். இந்தச் சூழலில், காவல்துறையைக் கடுமையாக விமர்சித்து உதயநிதி பேசிவருவது காவல்துறை உயர் அதிகாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

`ஆளுங்கட்சியாக மாறும் முன்பே இவ்வளவு அதிகாரம் காட்டினால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள்...’ என்று கிலியில் இருக்கிறார்கள் அவர்கள்.

தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் பொறுப்பிலிருக்கும் பேரறிஞர் பெயர்கொண்ட உயரதிகாரி ஒருவர், தனக்கு வேண்டிய ஊழியர்கள் பலருக்கும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார். அந்த உத்தரவின்படி, வாரத்தின் இறுதி நாள்களில் ரயில்வேத் துறையின் தங்கும் விடுதிகளில் மதக்கூட்டம் நடக்கிறதாம். இதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் குரூப் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்கள். வார இறுதி நாள்களில் இவர்கள் எழுப்பும் சத்தத்தால், சக ஊழியர்கள் முகம் சுளிக்கின்றனராம். ``அவரவர் வீட்டில் மதப்பிரசங்கம் நடத்திக்கொள்வதில் தவறில்லை. ஆனால், ரயில்வேத் துறையின் கட்டடத்தை மதப்பிரசங்கத்துக்குப் பயன்படுத்துவது என்ன நியாயம்?” என்று கொதிக்கிறது ரயில்வே ஊழியர்கள் வட்டாரம். விவகாரம் தென்னக ரயில்வேயின் தலைமையகம் வரை கொண்டுவரப்பட்டிருப்பதால், விரைவில் நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதிக்கு ஜாகை மாற தி.மு.க-வின் கரூர் மாவட்டப் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி முடிவெடுத்திருப்பதால், தான் கைவசம் வைத்திருக்கும் அரவக்குறிச்சி தொகுதியைக் கூட்டணிக் கட்சிகளான கொங்கு ஈஸ்வரன் கட்சி, ம.தி.மு.க அல்லது முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றில் ஒன்றுக்கு தாரைவார்க்க நினைக்கிறாராம். அதேபோல அ.தி.மு.க-விலும் இந்தத் தொகுதியை பா.ஜ.க-வுக்கு ஒதுக்க கட்சியின் மாவட்டச் செயலாளரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நினைக்கிறாராம்.

செந்தில் பாலாஜி

அ.தி.மு.க பிரமுகரான வி.வி.செந்தில்நாதனுக்கு அரவக்குறிச்சி தொகுதியில் சீட் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, அரவக்குறிச்சியைக் கூட்டணிக் கட்சிக்கு தள்ளிவிட எம்.ஆர்.விஜயபாஸ்கர் நினைப்பதாகக் கூறுகிறார்கள். `செந்தில்நாதன் பவருக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அரவக்குறிச்சியைக் கூட்டணிக் கட்சிக்கு தாரைவார்க்க நினைப்பது அநியாயம்’ என்று அ.தி.மு.க-வினர் புலம்புகிறார்கள்.

மூட்டைப்பூச்சிக்கு பயந்துக்கிட்டு வீட்டைக் கொளுத்துறதுனு சொல்றது இதுதானோ?

கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க முன்னாள் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி-யுமான விஜயகுமாரின் வீட்டு முன்பு நவம்பர் 24-ம் தேதி வெடிகுண்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்றைய தினம் டெல்லியிலிருந்த விஜயகுமார், ``எனக்குத் தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை. எதுவாக இருந்தாலும் அரசியல்தான். லோக்கலிலுள்ள அரசியல் பற்றி உங்களுக்குத் தெரியுமே...’’ என்று பேட்டியளித்தார்.

தளவாய் சுந்தரம்

இந்தப் பேட்டியால் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரம் அதிர்ச்சியாகிவிட்டாராம். மாவட்டச் செயலாளராக இருந்த விஜயகுமாரை ஓரங்கட்டிவிட்டு, இப்போது குமரி அ.தி.மு.க-வில் கோலோச்சுபவர் தளவாய் சுந்தரம். விஜயகுமார் தன்னைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசுகிறார் என்பதை உணர்ந்துகொண்ட தளவாய், விஜயகுமாரின் வீட்டுக்கு அவசர அவசரமாகச் சென்று குடும்பத்தினரிடம் நலம் விசாரித்துச் சென்றிருக்கிறார். ஆனால், விஜயகுமார் தரப்பு சந்தேகக் கண்ணோடுதான் தளவாயைப் பார்த்துவருகிறது.

திருச்சி மாவட்டத்தில் அமைப்புரீதியாக இருக்கும் மூன்று மாவட்டங்களை நான்காக உயர்த்துவதற்கு அ.தி.மு.க தலைமை தயாராகிறது. ஒரு மாவட்டத்துக்கு தலா இரண்டு தொகுதிகள் வீதம் பிரிக்கப்படவிருக்கிறதாம்.

கு.ப.கிருஷ்ணன்

முத்தரையர் வாக்குகளைக் குறிவைத்து, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு மாவட்டப் பொறுப்பு அளிக்கப்படலாம் என்கிறார்கள். ஶ்ரீரங்கம் தொகுதியை கு.ப.கிருஷ்ணன் குறிவைத்திருப்பதால், அந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான வளர்மதி, மணப்பாறைக்கு ஜாகை மாறவிருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் வீசிய நிவர் புயலால், அதிகம் ஆடிப்போனது கடலோரப் பகுதி அமைச்சர் ஒருவர்தான். அவர் நெருங்கிய உறவினருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில்தான் கஜானாக்கள் மூட்டைகளில் கட்டப்பட்டு, மரத்தின் உச்சியில் பத்திரமாக இறுக்கிக் கட்டிவைக்கப்பட்டிருக்கின்றனவாம். ``கஜா புயலில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததுபோல, இந்த முறை நிவர் புயலால் மரங்கள் சாய்ந்துவிடக்கூடும். மூட்டையை இறக்கி கஜானாவைப் பத்திரப்படுத்துங்கள்.

தென்னை மரம் காவாத்து செய்யும் விவசாயி

புயலோடு புயலாகப் பறந்துவிடப்போகிறது’’ என்று உறவுகள் எச்சரிக்கவும், அரண்டுபோய்விட்டாராம் அமைச்சர். புயல் வீசுவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக, அந்த மூட்டைகளையெல்லாம் கீழே இறக்கி, அரிசி ஆலை குடோன் ஒன்றில் வைத்திருக்கிறார்கள். புயல் கரையைக் கடந்த பிறகுதான் அமைச்சருக்கு நிம்மதியே வந்ததாம்.

அவனவன் வீட்டு ஓட்டையே பிரிச்சு கீழே இறக்கி பத்திரப்படுத்துறான். மூட்டையை இறக்குறதெல்லாம் பெரிய விஷயமா?

இந்து இயக்கங்கள், பல்வேறு சமுதாய அமைப்புகளை ஒன்றிணைத்து `தெய்வீக தமிழ் சங்கம்’ என்கிற அமைப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. கிராமம், நகரம் என ஒவ்வோர் ஊரிலும் இந்துக்கள் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், `தி.மு.க., கம்யூனிஸ்டுகள், பெரியார் அமைப்புகள் ஆகியவை இந்து மதத்தை இழிவுப்படுத்துகின்றன’ என்று பிரசாரம் செய்து, `தெய்வீக தமிழகம்’ என்கிற புத்தகம் ஒன்றையும் வழங்குகிறார்கள். பெண் வாக்காளர்களைப் பிரதானமாகக் குறிவைத்து இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதால், `தி.மு.க-வுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்’ என்று காத்திருக்கிறது பா.ஜ.க.



source https://www.vikatan.com/news/politics/ipacs-check-to-congress-to-ministers-secret-move-kazhugar-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக