Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

`ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள், ரோஹிங்கியாக்கள்!’ - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பகீர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) - பா.ஜ.க. இடையில் கடும்போட்டி நிலவுகிறது. ஹைதராபாத்தில் முஸ்லிம் வாக்குகளும் அதிகம் உள்ளதால், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியும் களத்தில் இறங்கி தேர்தலைச் சந்திக்கிறது.

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனில் (GHMC) மொத்தம் 150 வார்டுகள் உள்ளன. இம்முறை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சியைத் தன்வசப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது பா.ஜ.க.

தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், நவம்பர் 27-ம் தேதி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செவெல்லா நாடாளுமன்ற பகுதிகளில் பிரசாரம் செய்வார் என்றும், நவம்பர் 28-ம் தேதி, மல்கஜ்கிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் பேரணியில் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்பார் என்றும் பா.ஜ.க அறிவித்திருக்கிறது. அதேபோல், பிரசாரத்தின் கடைசி நாளான நவம்பர் 29-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செகந்திராபாத்தில் நடைபெறும் பேரணியில் கலந்துகொண்டு பேசுவார் என்றும் பா.ஜ.க கூறியுள்ளது.

Also Read: பா.ஜ.க-வின் `B டீம்’ என விமர்சிக்கப்படும் ஒவைசி... தமிழ்நாட்டில் யார் அப்படி?

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த, மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, ``தலைநகரான ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் வசித்து வருகிறார்கள். பாகிஸ்தானியர்களைத் தவிர, ரோஹிங்கியா முஸ்லிம்களும் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தை மத்திய அரசு கவனித்து வருகிறது" என்று கூறினார். தேர்தல் சூழலில் கிஷன் ரெட்டியின் இந்தப் பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது.

ஹைதராபாத்

கிஷன் ரெட்டி மேலும் கூறுகையில்,``ஹைதராபாத் ஓல்டு சிட்டியில் தங்கியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து தேவையான அனைத்து தகவல்களும் எங்களிடம் உள்ளன. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். புலம்பெயர்ந்தோரின் அனைத்து விவரங்களும் எங்கள் அறிக்கையில் உள்ளது. அவர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். ரேஷன் கார்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் போன்ற எந்தவொரு மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளும் வழங்கப்படமாட்டாது. ஆனால், இது ஒரு சில இடங்களில் நடந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ரோஹிங்கியாக்களைத் தவிர, ஹைதராபாத்தில் குறைவான அளவில் பாகிஸ்தானியர்களும் உள்ளனர். மத்திய அரசு, இந்த பிரச்னையை ஆராய்ந்து வருகிறது" என்றும் அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

முன்னதாக, தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பாண்டி சஞ்சய் குமார், சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், ``ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஓல்டு சிட்டியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருக்கும் ரோஹிங்கியாக்களை ஹைதராபாத்திலிருந்து வெளியேற்றுவோம். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரோஹிங்கியாவிலிருந்து வாக்காளர்கள் இல்லாமல் நடத்த வேண்டும்'’ என்று பேசியிருந்தார்.

Also Read: ஹைதராபாத்: பாலியல் வன்கொடுமை; பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை! - 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

சஞ்சயின் பேச்சுக்கு, பதிலளிக்கும் விதமாகக் கருத்து தெரிவித்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ``ஹைதராபாத் ஓல்டு சிட்டியில் பாகிஸ்தானியர்கள் இருந்தால், அதற்கு பிரதமர் மோடியும் அமித் ஷாவும்தான் பொறுப்பு. ஏனென்றால் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது பாகிஸ்தானியர்கள் இங்கே நுழைந்ததால், அது அவர்களின் தோல்வியே. இந்து - முஸ்லிம்கள் இடையே வெறுப்புச் சுவரை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு மோடியை பா.ஜ.க. அழைத்து வரட்டும். எத்தனை இடங்களில் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/politics/pakistanis-living-in-hyderabad-centre-looking-into-issue-says-union-minister-kishan-reddy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக