Ad

திங்கள், 30 நவம்பர், 2020

`காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறும்!’ - தென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையிலிருந்து 750 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 1,150 கி.மீ. தொலைவிலும் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த ஓரிரு நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், வரும் டிசம்பர் 2-ம் தேதி தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

இதன் காரணமாக டிசம்பர் 1-ம் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் லேசானது முதல் மிதமான மழையும் பொழியக் கூடும். அதே போல, கேரளா கடற்கரையோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 2-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் தேனி, மதுரை, சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 3-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும். மற்ற கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த தினங்களில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூரைக்காற்று மணிக்கு 40 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், ``இந்த காற்றழுத்த தாழ்வு மையம், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை புயலாகவும் வலுப்பெற்று, வடமேற்கு திசையில் வரும் இரண்டாம் தேதி மாலை இலங்கையைக் கடந்து, குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். இலங்கையைக் கடந்து குமரி கடலில் இரண்டு நாட்கள் நிலைகொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Also Read: நிவர் புயல்: மழை நீரில் மூழ்கிய பயிர்கள்... உடனடியாக விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?



source https://www.vikatan.com/news/general-news/red-alert-for-southern-tamil-nadu-heavy-rainfall-alert

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக