ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்?
சுமார் கால் நூற்றாண்டு காலமாக தமிழக அரசியல் அரங்கில் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி இது.
ரசிகர்கள், மாற்றத்தை விரும்பும் நடுநிலை வாக்காளர்கள் மற்றும் நலம்விரும்பிகள் எனப்பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ச்சியாக வந்த அழுத்தம் அசைத்துப் பார்த்ததோ என்னவோ, கொஞ்ச நாட்களுக்கு முன்பு "2021ல் தமிழக சட்டசபைத் தேர்தலை நாம் சந்திக்கலாம்'’ என கொஞ்சம் மேலோட்டமாகப் பேசி தன் ரசிகர்களை உற்சாகப் படுத்தியிருந்தார் ரஜினி.
ஆனால், சில நாட்களுக்கு முன்பாக அவரது உடல்நிலை குறித்துக் கசிந்த தகவல்களும், அது தொடர்பாக அவரிடமிருந்து வந்த அறிக்கைகளும் மறுபடியும் ரசிகர்களைச் சோர்வாக்கின.
அதேபோல் சில தினங்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது ரஜினியுடன் சந்திப்பு இருக்குமென எதிர்பாக்கப்பட்டது. ஆனால் அப்படியொரு சந்திப்பு நிகழவில்லை
இந்தப் பின்னணியில்தான் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைத் தனது திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார்.
"ரஜினி என்ன சொல்லப் போகிறார்'’ என்கிற எதிர்பார்ப்பு பலமாக இருக்கும் வேளையில், ரஜினி திடீரென மன்ற நிர்வாகிகளை சந்திக்க முடிவெடுத்த பின்னணியில் ஒருசில குறியீடுகளையும் காண முடிகிறது.
இதுகுறித்து ரஜினிக்கு நெருக்கமான சிலரிடம் பேசினேன்.
"ரஜினியின் ஆன்மீக குருவான பாபாஜி அவதரித்த நாள் ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை மாசத்துல ரோகிணி நட்சத்திரத்தன்று வரும். பாபாஜி பிறந்த வருஷம் அந்த நாள்தான் தீபத் திருநாளும் கூட.
இந்த வருஷம் இன்னைக்கு காலையில இருந்து ரோகிணி நட்சத்திரம் தொடங்குது. இதை மனசுல வைத்தே தீபத் திருநாளான நேற்று மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறது தொடர்பான அறிவிப்புக் கொடுத்து இன்னைக்கு அவர்களைச் சந்திக்கிறார். பாபாஜியின் அவதாரத் திருநாள்ல எடுக்கிற முடிவா இருக்கிறதால ரஜினி என்ன சொன்னாலும் அது முக்கியமான முடிவாகவே இருக்கும்’ என்றார்கள்.
பாபா என்ன சொல்லப்போகிறாரோ?
source https://www.vikatan.com/news/politics/rajinikanth-to-meet-with-rajini-makkal-mandram-leaders
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக