Ad

ஞாயிறு, 29 நவம்பர், 2020

`வேளாண் திருத்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகள்!’ - பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி வேளாண் திருத்தச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அவர் பேசுகையில், ``வேளாண் திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கின்றன. விவசாயிகள் பல ஆண்டுகளாக முன்வைத்து கோரிக்கைகள், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அதை நிறைவேற்றுவோம் என்று ஏதாவது ஒரு இடத்தில் வாக்குறுதி கொடுத்துவந்தவை, இன்று நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

விவசாயிகள் போராட்டம்

நீண்ட விவாதங்கள், ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்திய நாடாளுமன்றம் வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்தப் புதிய சீர்திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கான புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், உரிமைகளையும் வாய்ப்புகளையும் அளித்திருக்கின்றன’’ என்றார்.

இதற்கு எடுத்துக்காட்டாக மகாராஷ்டிராவின் துலே பகுதியில் உள்ள விவசாயி, தனது மக்காச்சோளப் பயிருக்கான நிலுவைத் தொகையைப் பெற்றதைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். ``விவசாயிகளிடமிருந்து பயிர்களை விலைக்கு வாங்கிவிட்டு, நீண்ட நாள்களாகப் பணம் வழங்காமல் நிலுவையில் வைக்கும் வழக்கமான முறைக்கு இந்தச் சட்டம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

மக்காச்சோள விவசாயிகள் நீண்டகாலமாக இந்தப் பிரச்னையை அனுபவித்து வருகிறார். கடந்த செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சீர்திருத்தச் சட்டம் இதற்கு முடிவு கட்டியிருக்கிறது. விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்கிய, மூன்று நாள்களுக்குள் அதற்குரிய பணத்தைக் கொடுக்காவிட்டால், அவர்கள் புகாரைப் பதிவு செய்யலாம்’’ என்று பிரதமர் மோடி பேசினார்.

Also Read: புதிய வேளாண் சட்டங்கள்: அடக்குமுறைக்கு அஞ்சாத விவசாயிகள் போராட்டம்- இறங்கி வருமா மோடி அரசு?

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நான்காவது நாளாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர். `டெல்லி சலோ’ கோஷத்துடன் டெல்லிக்குள் நுழைய முயன்ற லட்சக்கணக்கான விவசாயிகள் ஹரியானா, உத்தரப்பிரதேச எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும், டெல்லியில் போராட அனுமதிக்கப்பட்டுள்ள மைதானத்துக்கு விவசாயிகள் செல்ல வேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால், அவரது கோரிக்கையை விவசாய சங்கங்கள் நிராகரித்திருக்கின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/politics/farm-laws-gave-farmers-more-opportunities-says-pm-modi-amid-protests

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக