தன்னை 10 ஆண்டுகளாகத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி வந்ததாகவும், பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசம் மீது பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
டிசம்பர் மாதம் 18-ம் தேதி நியூசிலாந்தில் நடக்கவிருக்கும் டி20 போட்டிகளுக்காக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த விரார்களும், நிர்வாகிகளும் நியூசிலாந்து சென்றுள்ளனர். அங்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களில், ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவர்கள், சிகிச்சை மையங்களுக்கு மற்றப்படுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பெண் ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் கிரிக்கெட் வீரரும், அணியின் கேப்டனுமான பாபர் அசம் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்றை அந்நாட்டு ஊடகவியலாளரான சாஜ் சாதிக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத அப்பெண் பேசும்பொழுது, ``பாபர் அசம், எனது பள்ளித்தோழன். நானும், பாபர் அசமும் ஒரே குடியிருப்பில்தான் குடியிருந்தோம். 2010 ஆம் ஆண்டில் அவர் என்னை காதலிப்பதாகத் தெரிவித்தார். நானும் அவரது விருப்பத்தை ஏற்றுக்கொண்டேன். அதன் பின்னர், நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து குடும்பத்தினரிடம் எங்கள் விருப்பத்தினைக் கூறினோம். ஆனால், அவர்கள் எங்கள் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் இருவீட்டாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று பாபர் என்னிடம் வாக்குறுதியளித்தார். அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையால், அவரது வார்த்தைகளை நம்பினேன்.
2011-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி என்னை வெளியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து, அதில் தங்க வைத்தார். `எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறோம்?’ என்று அவரிடம் கேட்கும்போதெல்லாம், `தற்பொழுது சூழ்நிலை சரியில்லை. நேரம் வரட்டும்’ என்று காலம் தாழ்த்தி வந்தார்.
பாபர் அசமின் ஆரம்பக்கட்டத்தில் அவர் கிரிக்கெட் விளையாட பொருளாரதார ரீதியாக பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தார். அப்போது நான் அவருக்குப் பண உதவிகளைச் செய்து வந்தேன். அதுமட்டுமின்றி, பாபர் பலமுறை எனக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்துவந்தார். இது குறித்து, நான் போலீஸாரிடம் புகாரளிக்க முற்பட்டபோது, என்னை மிகவும் மோசமான முறையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
Also Read: Babar Azam: அது `Fab Four’ அல்ல... `Fab Five’ - இங்கிலாந்திலும் மிரட்டும் பாபர் ஆசம்!
2016-ல் நான் கருவுற்றேன். அவர் தேசிய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக் கிடைத்ததும், என்னை திருமணம் செய்துகொள்ளும் முடிவிலிருந்து முழுவதுமாக பின்வாங்கிவிட்டார். என்னைப் போல் வேறு எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, என் சகோதர, சகோதரிகள் எனக்கு உதவ வேண்டும்” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் திறமைமிக்க பேட்ஸ்மேன்களில் பாபர் அசமும் ஒருவர். அவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/woman-accuses-babar-azam-of-sexual-exploitation-for-10-years
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக