உலக பிரசித்திப்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தீப விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் இன்றுமாலை ஏற்றப்படுகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை பரணி தீப உற்சவம் நடைபெற்றது. கோயில் கருவறை முன்புள்ள மண்டபத்தில், அதிகாலை 3.18 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்கிற பக்தி முழக்கத்துடன் பரணி தீபம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி அரவிந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொரோனா தொற்றின் காரணமாக, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம், அமைச்சருடன் வந்திருந்த 60-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினருக்கும் மட்டும் காவல்துறையினர் சிறப்பு அனுமதி வழங்கினர். முதலில் அவர்களைத் தடுத்தபோது, காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால், தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. பின்னரே, அமைச்சர் சொல்லுக்கு கட்டுப்பட்டு காவல்துறையினர் அ.தி.மு.க-வினரையும் உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர்.
அமைச்சருடன் வந்திருந்த பலர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அவர்களில் எத்தனைப் பேர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு கோயிலுக்குள் வந்தார்கள் என்றும் தெரியவில்லை. பத்திரிகையாளர்களிடம் கெடுபிடி காட்டிய காவல்துறையினர் அடையாள அட்டையை காண்பித்த பின்னரே செய்தி சேகரிக்க அனுமதி வழங்கினர். அதேசமயம், கொரோனா தொற்று காரணமாக, உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெளிமாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் நுழையவே அனுமதியில்லை.
இருந்தபோதும், உள்ளூர் பக்தர்கள் ஆதார் அட்டைகளுடன் அண்ணாமலையாரைத் தரிசிக்க கோயில் பகுதிக்கு வந்துச் செல்கிறார்கள். காவல்துறையினர் அவர்களைத் தடுத்து திருப்பி அனுப்புகிறார்கள்.
தொடர்ந்து, இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியின்மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, நேற்று காலையே தீபக்கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டுச்சென்று தயார் நிலையில் வைத்துள்ளனர். மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பு மாலை 3 மணியிலிருந்து அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல், அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் ஆகியவை நடைபெறும். கோயில் வளாகத்திலிருந்து மலையை நோக்கி தீப்பந்தங்கள் காட்டப்படும். அந்த நேரத்தில், மலைமீது வைக்கப்பட்டுள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.
source https://www.vikatan.com/news/tamilnadu/barani-deepam-was-lit-at-the-tiruvannamalai-annamalaiyar-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக