`சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?' என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை. ` 20 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார் ராமதாஸ். அதேநேரம், கூட்டணி தொடர்பாக குடும்பத்துக்குள்ளேயே குழப்பங்கள் நீடிக்கின்றன' என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள் சிலர்.
தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. `தேர்தலில் எந்த அணியோடு இணைந்தால் வெற்றி கிடைக்கும்' என்ற கணக்குகளைச் சிறிய கட்சிகள் போடத் தொடங்கிவிட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வோடு இணைந்து தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள், அதே கூட்டணியில் தொடர்கின்றன. அதேநேரம், அ.தி.மு.க-வோடு இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை.
Also Read: ``கதை கேளு கதை கேளு..." மாற்றிப் பேசும் ராமதாஸ் - ஒரு ரீவைண்ட் பார்வை!
இதில், வன்னிய சமூகத்துக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி டிசம்பர் 1-ம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளது பா.ம.க. இதற்கான போராட்டம் நடக்கும்போதே தமிழக அரசு தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வரும் என எதிர்பார்க்கிறார் ராமதாஸ். இதையே சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தும் திட்டத்திலும் பா.ம.க இருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், அண்மைக்காலமாக கட்சியின் செயல்பாடுகளால் மிகுந்த வேதனையில் உள்ளனர் பா.ம.க சீனியர்கள் நிர்வாகிகள் சிலர். இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசியவர்கள், `` அ.தி.மு.க கூட்டணியில் இரண்டாவது இடத்தில் பா.ம.க இருக்கிறது. இதே கூட்டணியில் தேர்தலைச் சந்திக்கும் முடிவில் இருக்கிறார் ராமதாஸ். ஆனால், தி.மு.க-வோடு பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார் அன்புமணி. இந்த முரண்பாட்டால், கட்சிக்குள்ளேயே குழப்பம் நீடித்து வருகிறது. தனக்கு வேண்டியவர்கள் மட்டுமே கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்பதால் மாவட்டம்தோறும் சீனியர்களை ஓரம்கட்டும் வேலைகளையும் செய்து வருகின்றனர் அன்புமணி தரப்பினர்" என விவரித்தவர்கள்,
Also Read: `மக்களுக்குத் தொண்டு செய்வதே என் கடமை!'-சேலம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றிய பாமக
`` வடமாவட்டங்களில் ஒவ்வொரு பகுதியிலும் சீனியர்கள் என்ற வரிசையில் 5,6 பேர் வருவார்கள். இவர்களெல்லாம் தொடக்காலத்தில் இருந்து மருத்துவர் ராமதாஸோடு போராட்டக்களங்களில் பங்கெடுத்தவர்கள். இவர்கள் எல்லாம் அன்புமணியை வரவேற்று கோஷம் போடுவதில்லை. அதனால், இவர்களை அன்புமணி ஏற்றுக் கொள்வதில்லை. இதனை ராமதாஸால் தட்டிக் கேட்க முடியவில்லை. அன்புமணியைப் பார்க்க விரும்பினாலும், அனுமதி இல்லாமல் யாரும் சென்று பார்த்துவிட முடியாது. கட்சியின் தலைவருக்கும் இது பொருந்தும் என்பதுதான் வேதனை. முன்பெல்லாம் யாருடன் கூட்டணி அமைப்பது என்றாலும் எங்களையெல்லாம் அழைத்துப் பேசி கருத்துகளைக் கேட்பார்கள். இப்போது நிலைமை அப்படியில்லை. அவர்களாகவே முடிவெடுத்து அறிவிக்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாற்றம், முன்னேற்றம் எனக் கிளம்பினார் அன்புமணி. தொடக்கத்தில் பெரிதாக ஆதரவு இல்லையென்றாலும், அடுத்தடுத்த மேடைப் பேச்சுக்களால் பிற சமூக மக்களும் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதை அப்படியே தக்க வைக்காமல், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததை யாரும் ரசிக்கவில்லை. இனி தனியாக நிற்பதாக இவர்கள் சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறார் ராமதாஸ். அன்புமணிக்கு இதில் உடன்பாடில்லை. இதனால், ` கூட்டணியை அன்புமணிதான் கெடுக்கிறார்' என அ.தி.மு.க நிர்வாகிகளே பேசி வருகின்றனர்.
இந்தமுறை எந்தக் கூட்டணியாக இருந்தாலும், 50 இடங்களைக் கேட்கத் திட்டமிட்டுள்ளனர். அதில், 35 இடங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள். இதில், பழைய ஆள்களுக்கு எல்லாம் சீட் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. கட்சிக்குள் நடக்கும் விவகாரங்களை சகித்துக் கொண்டு சீனியர்கள் அமைதியாக இருக்கிறார்கள். இந்தத் தேர்தலோடு கட்சியின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற கேள்வியும், சீனியர்கள் மத்தியில் விவாதமாக மாறியுள்ளது" என்றனர் ஆதங்கத்துடன்.
இதுகுறித்து பா.ம.க மாநில பிரசாரக் குழுத் தலைவர் எதிரொலி மணியனிடம் விளக்கம் கேட்டோம். `` தி.மு.க, அ.தி.மு.க-வோடு பேச்சுவார்த்தைகள் நடப்பதாகச் சொல்வதெல்லாம் கட்டுக்கதை. இடஒதுக்கீடு கோரிக்கை என்பது நியாயமான ஒன்று என்பதை முதல்வர் உணர்ந்திருக்கிறார். அவர் தொடக்கநிலையிலேயே இடஒதுக்கீடு போராட்டத்தை நிறுத்துவதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். மற்ற விவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றதோடு முடித்துக் கொண்டார்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/pmk-senior-cadres-angry-over-party-chief-activities-in-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக