கரூர் மாவட்டத்தில் ஓடும் காவிரி ஆற்றில், பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, மண் பானைக்குள் இறந்த நிலையில் கிடந்த சம்பவம், மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது கே.பேட்டை. இந்தப் பகுதியில் உள்ள பெரிய பாலத்துக்கு வடக்கே ஓடும் காவிரி ஆற்றில், பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, இறந்த நிலையில் மண்பானைக்குள் கிடந்தது. அந்த குழந்தையின் உடம்பில் ஊதா கலர் பனியன் அணிவிக்கப்பட்டிருந்தது. ரோஸ் கலர் பூ போட்ட ஜட்டியும் அணிவிக்கப்பட்டிருந்தது.
Also Read: கரூர்: `உங்க வீட்டுல குட்கா சோதனை பண்ணணும்!' - மளிகைகடைக்காரர் வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்
அதோடு, குழந்தையின் தொப்புள் கொடியில் ஊதா கலர் கிளிப் அணிவிக்கப்பட்டும், குழந்தையின் உடலைச் சுற்றி மஞ்சள் தூள் தூவப்பட்டும் இருந்தது. தவிர, குழந்தையின் வலது கையில் ரூ. 50 ம் இருந்தது. காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற சிலர், இந்த ஆண் குழந்தை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, இந்தத் தகவலை அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர், லாலாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
கிராம நிர்வாக அலுவலரின் புகாரையடுத்து ஸ்பாட்டுக்கு வந்த லாலாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், இறந்து கிடந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லாலாப்பேட்டை காவல் நிலைய போலீஸார், இறந்து கிடந்த குழந்தை யார், அதன் தாய் யார், எப்படி குழந்தை இறந்தது, குழந்தையை காவிரி ஆற்றுக்கரையில் கொண்டு வந்த போட்டது யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, மண்பானைக்குள் இறந்த கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/infant-dead-body-recovered-from-kulithalai-cauvery-river
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக