Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

ஐந்து `சி' வசூல் தி.மு.க(?), கிளம்பத் தயாராகும் சூரப்பா, கண்காணிப்பில் முருகன்... கழுகார் அப்டேட்ஸ்!

தி.மு.க-வில் கட்சிக்கு ஒன்று, சபரீசனுக்கு ஒன்று, உதயநிதிக்கு ஒன்று எனத் தனித்தனியாக ஐடி டீம்கள் மல்லுக்கட்டுவது தெரிந்த விஷயம். இந்தநிலையில், சமீபத்தில் பழனிவேல் தியாகராஜன் ஐடி டீமுக்கும், உதயநிதியின் ஐடி டீமுக்கும் இடையே உரசல் உச்சத்தை எட்டியதாம்.

ஸ்டாலினுடன் பழனிவேல் தியாகராஜன்

அந்தக் கடுப்பில், ஐடி விங்கில் தியாகராஜனின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்காக கவிஞர் மனுஷ்யபுத்திரனை ஐடி அணிகளின் ஆலோசகராக நியமித்திருப்பதாகக் கூறுகிறார்கள் உடன்பிறப்புகள். தி.மு.க-வில் இதுபோல அணிகளுக்கு ஆலோசனை பொறுப்பெல்லாம் இதுவரை யாருக்குமே வழங்கப்பட்டதில்லை. முதன்முறையாக இந்தப் பதவி வழங்கப்பட்டதே தியாகராஜனுக்கு செக் வைக்கத்தான் என்கிறார்கள்.

இனி கவிதைப்போர் நடக்குமோ!

`ஐந்து `சி’ இருப்பவர்களுக்கே எம்.எல்.ஏ சீட்’ என்று சொல்லப்படாத அறிவிப்பு ஒன்று அறிவாலயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, `கோடிக்கணக்கில் செலவு செய்வேன்’ என்று நேர்காணலில் உதார்விட்டவர்களெல்லாம், தேர்தல் நேரத்தில் வெறுங்கையில் முழம்போட்டிருக்கிறார்கள். இந்த முறை அந்தத் தவறு நடந்துவிடக் கூடாது என்பதில் தி.மு.க தலைமை உஷாராக இருக்கிறதாம்.

அண்ணா அறிவாலயம்

அதேபோல, ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு வேட்பாளர்களை ஐபேக் நிறுவனம் அடையாளம் காட்டிவருகிறதாம். அதில் தங்கள் பெயர் இடம்பிடிப்பதற்காக ஐபேக் நிறுவனத்தின் ஆட்களைச் சரிகட்டும் வேலையைப் பலரும் செய்துவருகிறார்களாம்.

இந்த முறை சூட்கேஸ் கையுடன் முழம் போடுவார்களோ!

பா.ஜ.க-வுக்குப் பிற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்துவரும் வேலையில் கட்சித் தலைவர் முருகன் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். சத்தமில்லாமல் பலரையும் அவர் சந்தித்துவரும் நிலையில், சில நாள்களுக்கு முன்னர் அவரைப் பற்றி டெல்லி தலைமையிடம் புகார் வாசிக்கச் சென்றிருக்கிறார்கள் இங்கிருக்கும் சீனியர்கள்.

`முருகன் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்’ என்று அவர்கள் வாசித்த புகாரைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட டெல்லி தலைமை, `அவர் என்ன செய்கிறார் என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் அவருக்கு ஒத்துழைப்பு மட்டும் கொடுங்கள். டோன்ட் டிஸ்டர்ப் ஹிம்!’ என்று சொல்லிக் கதவை அடைத்துவிட்டதாம். ஒரு மாநிலத் தலைவரை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று இப்படிச் சொல்லிவிட்டாலும், இன்னொரு பக்கம் முருகனைக் கண்காணிக்கவும் கட்சித் தலைமை ரகசிய ஏற்பாடுகளைச் செய்துவருகிறதாம்.

முருகனுக்கு வந்த சோதனை!

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குப் புகார் கொடுக்க வருபவர்கள், அங்கிருக்கும் பத்திரிகையாளர் அறை அருகே பிரஸ் மீட் கொடுப்பது வழக்கம். அதற்கு மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரி ஒருவர் தடை விதித்திருக்கிறாராம். `பி.ஆர்.ஓ அலுவலக அனுமதியில்லாமல் கமிஷனர் அலுவலக வளாகத்தில் யாரும் பிரஸ் மீட் கொடுக்கக் கூடாது’ என்று கூறி, புகார் கொடுக்க வருபவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்க முடியாத அளவுக்குத் தடுப்பு வேலிகளை அமைத்திருக்கிறார்கள்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

சமீபத்தில் காவல்துறை பற்றியே புகார் சொல்லிக் கொடுக்கப்பட்ட சில பிரஸ் மீட்கள்தான் இதற்குக் காரணமாம். இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்குத் தகவல் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. அவர்களும் `பார்க்கலாம்... பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கே இல்லையென்றால் பக்கத்துத் தெருவில்கூட பத்திரிகையாளர்களைச் சந்திக்க முடியும்.

சீப்பை ஒளிச்சுவெச்சா கல்யாணம் நின்னுபோயிடுமா போலீஸ் ஆபீஸர்ஸ்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராகக் எதிர்க்கட்சிகள் செயல்பட்டுவரும் நிலையில், டெல்லி லாபி மூலம் பிரச்னைகளுக்குச் சுமுகத் தீர்வுகாண சூரப்பா தரப்பு திட்டமிட்டிருக்கிறதாம்.

சூரப்பா

ஆனால், டெல்லி லாபியிடமிருந்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் எதுவும் வரவில்லை என்கிறார்கள். அதனால், இந்த ஆண்டுக்குள் கர்நாடகாவுக்குத் திரும்பிவிடும் முடிவுக்கு சூரப்பா வந்துவிட்டாராம். அடுத்த துணைவேந்தருக்கான ரேஸ் இப்போதே ஆரம்பமாகிவிட்டது.

சூரப்பா... ஏனப்பா?

சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு கோவை தி.மு.க ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்புக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கோவை

கோவை வடக்கு மாவட்ட தி.மு.க-வில் மட்டும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சற்றுக் குறைவாக இருந்தனர். தேர்தல் நெருங்குவதால், காலியாக இருக்கும் சில பதவிகளை நிரப்பும் பணி தீவிரமடைந்திருக்கிறது. அனைத்துப் பதவிகளுக்கும் லட்சங்களில் பேரம் நடக்கிறதாம். `இப்படிப் பணம் வாங்கிக்கொண்டு பதவி கொடுத்தால், தி.மு.க எப்படிக் கரைசேரும்?’ என உடன்பிறப்புகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கரை சேருமா என்று தெரியாது... ஆனால், நிச்சயம் `கறை’ சேரும்!

கூடலூர் தி.மு.கழக எம்.எல்.ஏ-வும், வழக்கறிஞருமான திராவிட மணி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஊட்டி கோர்ட்டில் திடீர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். வழக்கில் குற்றம்சாட்டப்படுபவர்களான சயான், மனோஜ் தரப்பில் தி.மு.க வழக்கறிஞர் ஆனந்த் ஆஜராகிவரும் நிலையில், திராவிட மணி இப்போது அவர்கள் சார்பாக கோர்ட்டுக்கு வருவது சர்ச்சையாகியிருக்கிறது.

திராவிட மணி

விசாரித்தால், குற்றம்சாட்டப்படுபவர்களுக்காக திராவிட மணி வாதிடலாம் என்கிறார்கள். ஜென்ம நில விவகாரம் உட்பட பல இடர்பாடுகளில் கூடலூர் தொகுதி மக்கள் தவித்துவரும் நிலையில், அவர்களுக்கு எந்தச் சட்ட உதவியும் செய்து தராத திராவிட மணி, கொடநாடு வழக்குக்காக நீதிமன்றப் படியேறியிருப்பது தொகுதி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்கிறாரோ திராவிட மணி!

`கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல்?’ என்ற எதிர்பார்ப்பு அனைத்துக் கட்சிகளிடமும் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில், ``காங்கிரஸ் போட்டியிட்டால், பா.ஜ.க களத்தில் நிற்கட்டும்.

Also Read: விலகும் விஜய் சேதுபதி(?) முதல் வைகுண்டராஜனுக்கு செக் வரை... கழுகார் அப்டேட்ஸ்

தி.மு.க போட்டியிட்டால், நாங்களே நிற்கிறோம்’’ என்று அ.தி.மு.க தரப்பில் பா.ஜ.க-விடம் சொல்லியிருக்கிறார்களாம். `யோசித்துச் சொல்கிறோம்...’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் சொல்லியிருக்கிறதாம் பா.ஜ.க. நாடாளுமன்ற இடைத்தேர்தலை முடித்த கையோடு, சட்டமன்றத் தேர்தலை தைரியமாக எதிர்கொள்ளவே இந்தத் திட்டமாம்.

பங்காளிச் சண்டையை முதல்ல முடிங்கப்பா... அப்புறம் பகையாளியைப் பார்த்துக்கலாம்!



source https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-on-dmk-surappa-issue-and-other-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக