Ad

புதன், 28 அக்டோபர், 2020

`தடையில்லாச் சான்று வழங்க ரூ.5,000 கொடு!’- விவசாயியிடம் லஞ்சம்கேட்ட உதவிப் பொறியாளர்

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கல்லணைக் கால்வாய் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தென்னரசு என்பவர் கல்லணைக் கால்வாய் கோட்ட உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அத்தாணி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற விவசாயி, தனது கிராமத்தில் போர்வெல் அமைக்கத் தடையில்லா சான்று கேட்டு தென்னரசுவை நாடியுள்ளார்.

கல்லணைக் கால்வாய் கோட்ட அலுவலகம்

அப்போது, எனக்கு ரூ.5,000 லஞ்சம் கொடுக்க வேண்டும். எனக்குக் கப்பம் கட்டினால்தான் தடையில்லாச் சான்று கொடுக்க முடியுமென்று தென்னரசு, பிரபாகரனிடம் கறாராகக் கூறியுள்ளார். இதையடுத்து, ரூ.5,000 கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பிரபாகரன், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி புகார் செய்தார்.

Also Read: ராணிப்பேட்டை: `ஏழை விவசாயியிடம் லஞ்சம் கேட்டு கறார்!’ -மின்வாரிய அதிகாரி கைது

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய நோட்டுகளை பிரபாகரனிடம் கொடுத்து அனுப்பினர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நடந்துகொண்ட பிரபாகரன், ரூ.5,000 லஞ்சத்தை தென்னரசுவிடம் கொடுத்தார். வாங்கிய சில நிமிடங்களுக்குள் அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர் பீட்டர் தலைமையிலான 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, அதிரடி சோதனை நடத்தினர்.

தென்னரசு

அதில், விவசாயியிடம் லஞ்சம் பெற்ற தென்னரசுவைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.இதுபோன்று வேறு ஏதேனும் லஞ்சம் பெற்றுள்ளாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, உதவிப் பொறியாளர் அலுவலத்திலும் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/dvac-officials-arrested-pudukottai-pwd-engineer-over-bribery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக