Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2020

பொறியியல் கலந்தாய்வு: நிரம்பாத 93,402 இடங்கள்... எண்கள் சொல்லும் செய்தி என்ன?

கொரோனா பேரிடர் காரணமாக, மே மாதம் நடக்க வேண்டிய பொறியியல் கலந்தாய்வு பலமுறை தள்ளிப் போய் அக்டோபர் மாதத்தில்தான் தொடங்கியது. தமிழகத்திலுள்ள 461 பொறியியல் கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு, 1.60 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 1,12,406 போ் தகுதியுடையவா்களாகக் கருதப்பட்டனா். அவா்களுக்கான தரவரிசை பட்டியலை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் வெளியிட்டாா்.

அண்ணா பல்கலைக்கழகம்

அதன்படி, அக்டோபர் 1 முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 497 இடங்கள் நிரப்பப்பட்டன. கடந்த 8 முதல் 16-ம் தேதிவரை நடைபெற்ற பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வில் 7,510 இடங்களும், 12 முதல் 20-ம் தேதிவரை நடைபெற்ற இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் 13,415 இடங்களும், 16 முதல் 24-ம் தேதிவரை நடைபெற்ற மூன்றாம் கட்ட கலந்தாய்வில் 20,999 இடங்களும் நிரம்பியதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.

இறுதிக்கட்டக் கலந்தாய்வில் பங்கேற்க 40,573 மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், சுமார் 27,000 இடங்கள் மட்டுமே நிரம்பியிருக்கிறது. ஆக, மொத்தமாக உள்ள 1,63,154 இடங்களில் வெறும் 69,752 இடங்கள் மட்டுமே நிரம்பியிருக்கிறது. 93,402 இடங்கள் நிரம்பவில்லை. சென்ற ஆண்டில் 83,396 இடங்கள் நிரம்பியிருந்த நிலையில். இந்தாண்டு அதை விடக் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

மாணவர்களுக்கு பொறியியல் கல்வி மீதான ஆர்வம் குறைகிறதா?

முன்னொரு காலத்தில் ஊருக்கு ஒரு இன்ஜீனியர் இருப்பர், சில காலம் உருண்டோட வீதிக்கு ஒரு இன்ஜீனியர் என்ற நிலைமை உருவானது. அது அப்படியே வீட்டுக்கு ஒரு இன்ஜீனியர் என்றாகி, தற்போது ஒரே வீட்டில் பல இன்ஜீனியர்களை உருவாகி இருக்கிறார்கள். தமிழகத்திலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் சேர்த்து ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடித்து வெளியே வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படித்த படிப்புக்கான வேலையில்லாது, கிடைத்த வேலையையே செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் "இன்ஜீனியரிங் படித்தாலே, நல்ல வேலை... கைநிறைய சம்பளம்... வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்" என்ற மக்களின் எண்ணம்தான்.

அண்ணா பல்கலைக்கழகம்

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலர் பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்து, மாணவர்களுக்கு நல்ல கல்வியையும் தராது, ஆசிரியர்களுக்குச் சரியான சம்பளமும் தராது கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 90 சதவிகித பொறியியல் கல்லூரிகள் தனியாருக்குச் சொந்தமான கல்லூரிகள். தமிழகத்தில் 2016-17 கல்வியாண்டில் 525 கல்லூரிகள் இருந்த நிலையில், தற்போது 461 பொறியியல் கல்லூரிகள்தாம் இருக்கின்றன.

சமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வுக்கு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

``தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகப் புற்றீசல்போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதற்கு யார் காரணம்?... யார் அனுமதி வழங்கியது?... அனுமதி வழங்கிய அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலா (AICTE)?... இந்த சிரமத்துக்கு அனுமதி வழங்கியவர்கள்தான் காரணம். தற்போது தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள் பொறியாளர்கள் உருவாக்குவதில்லை. பொறியியல் பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன. இதனால்தான் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்னைகளைக் களைய வேண்டும். தேவைக்கேற்ப கல்லூரிகளைத் தொடங்க வேண்டும்" என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அதோடு, இந்த வழக்கு விசாரணையில் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாக சங்கத்தினரையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்துப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்தாண்டு கலந்தாய்வைப் பொறுத்தவரை, கடந்த வருடங்களில் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதோடு, 250-க்கும் அதிகமான கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவின் பொதுப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாது காலியாகவே இருக்கின்றன.

இந்த வருட பொறியியல் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கை குறைவாக நடந்திருப்பது குறித்தும், மாணவர்கள் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் சேர ஆர்வம் காட்டாதது குறித்தும். கல்வியாளர் ரமேஷ் பிரபாவிடம் பேசினேன்,

``பொறியியல் படிப்புகளில் இந்தாண்டு மாணவர்கள் குறைவாகச் சேர்ந்துள்ளார்கள் என்பது தவறு. உண்மையில் பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் இந்தாண்டு பெரியளவு ஆர்வம் காட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு நடப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 'எங்கு நமக்கு இடம் கிடைக்காதோ?' என்ற அச்சத்தில் மாணவர்கள் பலர் மெனேஜ்மென்ட் கோட்டாவில் முன்னதாகவே கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். அதுமட்டுமில்லாது, இந்த வருடம் தேர்வு எதுவுமில்லாது, மதிப்பெண்கள் அடிப்படையில் டீம்டு யூனிவர்சிட்டிகள் மாணவர் சேர்க்கை நடத்தியதினால் பல மாணவர்கள் அங்குபோய் சேர்ந்துவிட்டார்கள். கலந்தாய்வு தாமதமாக நடந்ததுதான் இதற்கு முக்கியக் காரணமாகப் பலரும் கூறுகிறார்கள்.

கல்வியாளர் ரமேஷ் பிரபா

மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்வதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. எனக்குத் தெரிந்தே ஒரு நல்ல தரம்வாய்ந்த கல்லூரியில் சிவில் அல்லது மெக்கானிக்கல் கிடைத்தாலும், கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் வேண்டும் என்று நல்ல கல்லூரியை விட்டுவிடு அதற்குக் கீழ் உள்ள கல்லூரிகளைத் தேர்வு செய்கின்றனர் மாணவர்கள். இந்த அறியாமையைப் போக்க வேண்டியதும், மாணவர்களிடையே மற்ற துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் கல்வி நிறுவனங்களின் கடமையாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் சேரும் ஆந்திரா மற்றும் கேரளா மாநில மாணவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் மிக அதிகளவு குறைந்துள்ளது. அதற்குக் காரணம் அந்த மாநிலங்களிலேயே கல்லூரிகள் அதிகரித்ததினால், அவர்கள் இங்கு வரவில்லை'' என்றார் அவர்.

Also Read: பொறியியல் படிப்பில் பகவத் கீதை! - கல்வியாளர்கள் சொல்வது என்ன?

இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் ஒருவரிடம் பேசியபோது,

"தற்போதுள்ள பொறியியலில் கல்வி முறையில் மாணவர்களுக்குச் சிறந்ததொரு கல்விமுறையைக் கொடுப்பதில்லை. எத்தனையோ புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், காலத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களில் போதிய மாற்றமும் சரி, மாணவர்களுக்குப் பயிற்சிகளையும் வழங்குவது இல்லை என்பதே உண்மை. கடந்த பத்தாண்டுகளில் பொறியியலில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டே வருகிறது. அதோடு, தமிழகத்தில் அதிகப்படியான பொறியியல் கல்லூரிகள் வந்துகொண்டே இருப்பதும் ஒரு காரணம்.

மாணவர்கள் பொறியியல் கல்லூரியின் தரவரிசையை மட்டுமே பார்த்து சேர்க்கிறார்கள். அந்த கல்லூரி எப்படி இருக்கிறது என்று தீர விசாரித்துச் சேர்வது இல்லை. இதுபற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்பட வேண்டும். அதோடு ஒரு பாடப் பிரிவில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கையை அதிகரித்ததன் காரணம்தான், மற்ற துறைகளை மாணவர்கள் எடுக்காது, ஒரே துறையைத் தேர்வு செய்ய ஏதுவாக அமைகிறது. அனைவரும் ஒரே துறையில் படித்து வெளியே வந்தால் அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியுமா?

பொறியியல் பட்டம்

பொறியியல் படித்தால் வேலை கிடைக்கவில்லை என்று கூறுவது தவறு. மாணவர்கள் அவர்களுக்கான திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக்கொள்ளாமல் இருப்பதுதான் வேலை கிடைக்காததற்குக் காரணமாக இருக்கிறது. மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளும் உதவி செய்வதில்லை என்பதுதான் நிதர்சனம்.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும் தேர்ச்சி தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதனால், பொறியியல் கல்லூரிகள், தங்கள் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக்காட்ட மாணவர்களை மனப்பாடம் செய்யவைத்து தேர்ச்சியடைய வைக்கின்றன. இதனால், மாணவர்கள் புரிந்து படிக்கும் நிலை இல்லாமல் போய்விடுகிறது. அவர்களும் எந்த ஒரு புரிதலும் இல்லாமலேயே பொறியியல் படித்து வெளியே வந்து விடுகிறார்கள். அதைத்தான் நீதிபதிகளும் குறிப்பிட்டிருக்கிறார்கள். மாற்றம் ஏற்படவேண்டும். அது அண்ணா பல்கலைக்கழகத்தின் கைகளில்தான் இருக்கிறது" என்றார் அவர் ஆதங்கத்துடன்.



source https://www.vikatan.com/government-and-politics/education/engineering-counseling-93402-seats-not-filled-in-this-year

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக